சிங்காரமான தேசத்தின் ஆபத்துகாலமும், விடுதலையும்(12:1)
அவமதிக்கப்பட்ட வடதிசை ராஜாவாகிய அந்திகிறிஸ்துவின் நாட்களில் இஸ்ரவேல் தேசம் மகா உபத்திரவத்திற்குள்ளாக செல்லும். அக்காலத்தில் மிகாவேல் இஸ்ரவேல் புத்திரருக்காக எழும்புவான். மிகாவேல் உபத்திரவ காலத்தின் மத்தியில் இஸ்ரவேலர்களுக்காக எழும்புவான். அவனை குறித்து உங்கள் அதிபதியாகிய மிகாவேல்(தானி.10:21), பிரதான அதிபதியாகிய மிகாவேல்(தானி.10:13) என்றும் கூறப்பட்டுள்ளது. அந்நாட்களில் இயேசுவை மேசியாவாக கண்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள். வெளி.14:1, சீயோன் மலையில் ஆட்டுக்குட்யானவரோடு தங்கள் நெற்றியில் பிதாவின் நாமம் எழுதப்பட்ட யூதர்களைப்பார்க்கிறோம். வெளி. 12ஆம் அதிகாரத்தில் சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ தப்புவிக்கப்படுவதும் இஸ்ரவேல் தேசத்தின் தப்புதலைக் குறிக்கிறது. வெளி.11:3 ஆண்டவருடைய இரண்டு சாட்சிகளைக் குறித்து பார்க்கலாம். அவர்கள் மூலமும் அனேகர் இயேசுவை மேசியாவாக காண்பார்கள். அவர்கள் அந்நாட்களில் விடுவிக்கப்படுவார்கள்.
நித்திரைப்பண்ணுகிறவர்களின் உயிர்தெழுதல் (12:2)
மனுஷன் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டவன். மண்ணிற்கே திரும்புவான். மனுஷன் மண்ணென்று கர்த்தர் நினைவு கூருகிறார். மரணம் மனுஷனுடைய முடிவல்ல. அது நித்திரைக்கு சமமாய் காணப்படுகிறது (மத். 9:24, யோவா.11:11). நீதிமானும் துன்மார்க்கனும் அந்த நித்திரையிலிருந்து எழும்பும் நாள் வரும். சிலர் நித்திய ஜீவனுக்கென்று எழும்புவார்கள். சிலர் நித்திய நிந்தைக்கென்று எழும்புவார்கள். இயேசுவை சொந்த இரட்சகராக கண்டவர்கள், அவருடைய இரத்தத்தினால் பாவங்களற கழுவப்பட்டவர்கள், ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவர்கள், பரிசுத்தத்தை காத்துகொண்டவர்கள், கிறிஸ்துவுக்குள்ளாய் மரித்தவர்கள் நித்திய ஜீவனுக்கென்று எழும்புவார்கள். இரட்சிப்பை அசட்டைபண்ணி, கிருபையின் இரத்தத்தை அசுத்தம் என்று எண்ணி, நாட்களை வீணடித்தவர்கள் நித்திய இகழ்ச்சிக்கென்று, நீயாயத்தீர்ப்புக்கென்று, நித்திய அக்கினிக்கென்று எழும்புவார்கள்.
நட்சத்திரங்கள்(12:3)
ஞானவான்கள் யார்? ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுகிறவன் ஞானவான் (நீதி. 11:30). எஜமானாகிய இயேசு விட்டுசென்றபணியை தொடர்ந்து செய்து அனேகரை இரட்சிப்பிற்குள்ளாக நடத்துகிறவன் ஞானவான். அப்படி அனேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போல பிரகாசிப்பார்கள். வெளி. 1:20-ல் இயேசு தன் கரங்களில் 7 நட்சத்திரங்களை வைத்திருக்கிறதைப் பார்க்கிறோம். அந்ந நட்சத்திரங்கள் சபையின் ஊழியக்காரர்கள். ஆத்தும ஆதாயப்பணி முக்கியமானது. கர்த்தருடைய ஊழியம் கனமுள்ளது.
வார்த்தைகள் முத்திரையிடப்படுதல் (12:4)
தானியேல் 10:4-ல் தரிசனங்கள் நிறைவேற நாள்செல்லும் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த தரிசனங்கள் முடிவுகாலத்திற்குரிய புதைபொருளாக காணப்படுவதால் முத்திரை போடும்படி தூதன் கூறுகிறார். ஆனால் வெளி. 22:10-ல் 'புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்@ காலம் சமீபமாயிருக்கிறது". தானியேலின் நாட்களில் தோன்றபோகிற சாம்ராஜ்யங்களைப்பற்றி அவன் ஒன்றும் அறியவில்லை. ஆனால் இந்நாட்களில் காணப்படுகிற நாம் கிரேக்க, ரோம சாம்ராஜ்யங்களின் தோற்றத்தையும் வீழ்ச்சியையும் அறிந்திருக்கிறோம். தானியேலின் நாட்களில் முத்திரை போடப்பட்ட காரியங்கள் கடைசி காலத்தில் காணப்படுகிற நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை@ காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை(நீதி. 25:2). ஓடி, தேடி ஆராய்கிறவர்கள் கண்டடைவார்கள்.
இஸ்ரவேலர்களின் உபத்திரவகாலம் (12:5-7)
தானியேல் இதெக்கல் ஆற்றின் இருகரையிலும் இரண்டுபேர் நிற்கக்காண்கிறார். வேறொரு புருஷன் சணல்வஸ்திரம் தரித்தவராய், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறார். அவர் இயேசு கிறிஸ்து. கடல் தண்ணீரின் மேல் நடந்தவருக்கு அதன் மேல் நிற்பது லேசான காரியம். அவரை கரையில் நிற்கிற இருவரில் ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவு வர எவ்வளவுகாலம் செல்லும் என்றுகேட்டான். அவர் ஒரு காலமும்(ஒரு வருடம்), காலங்களும(2 வருடம்), அரைக்காலமும்(அரை வருடம்) செல்லும் என்று கூறுகிhர். பரிசுத்த ஜனங்களாகிய இஸ்ரவேலரின் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்று என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிற பிதாவின் பேரில் ஆணையிட்டு கூறுகிறார். உபத்திரவகாலம் 7 வருடம். ஆனாலும் இரண்டாவது மூன்றரை வருஷம் மகா உபத்திரவ காலம. அப்போது மிருகம்(அந்திகிறிஸ்து) தன் சுயரூபத்தை வெளிப்படுத்துவான்.
தானியேலின் கேள்வியும் பதிலும் (12:8,9)
ஆற்றின் கரையில் நின்ற தூதன் இயேசுவோடு பேசின வார்த்தைகளை தானியேல் கேட்டான். பொருளை அறியவில்லை. ஆகையால் இவற்றின் முடிவு எப்படியிருக்கும் என்று கேட்டான். அதற்கு அவன், இவைகள் கடைசிகாலத்திற்குரியது. அந்நாள்மட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்தரிக்கப்பட்டும் இருக்கும். ஆகையால் உன்னால் புhந்துகொள்ள முடியாது. வேதத்தின் தீர்க்கதரிசனங்கள் அந்தந்த காலங்களுக்குரியதை அப்போதுதான் அறிந்துகொள்ளமுடியும்.
இரண்டுவிதமான கடைசிகால ஜனங்கள் (12:10)
கர்த்தருடைய காரியங்களை உணர்ந்துகொண்ட ஞானவான்கள் சுத்திகரிக்கப்பட்டவர்களாய், பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய், பொன்னைப்போல புடமிடப்பட்டவர்களாய் காணப்படுவார்கள். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகிகொண்டு காணப்படுவான்.
துன்மார்க்கரின் கூட்டம் உணர்வில்லாதவர்களாய் பாவத்தை தண்ணீரைப்போல பருகிக்கொண்டு காணப்படுவார்கள். மனிதன் மிருகத்தைப்போல காணப்படுவான். நோவாவின் நாட்களைப்போல லோத்தின் நாட்களைப் போல அழிவு வரும்மட்டும் உணராதவர்களாய் காணப்படுவார்கள்.
உபத்திரவகாலத்தின் முடிவு (12:11,12)
உபத்திரவகாலத்தின் துவக்கத்தில் இடிக்கப்பட்ட எருசலேம் தேவாலயம் மீண்டும் கட்டப்படும். யூதர்கள் பழைய ஏற்பாட்டின் நாட்களைப்போல பலிசெலுத்துவர்கள். மகாஉபத்திரவ காலத்தின் துவக்கத்தில் அந்திகிறிஸ்து தேவாயத்திலிருந்து அன்றாடபலியை நீக்குவான். வெளி.13:13-18-ன்படி அவன் தன்னுடைய சொரூபத்தை பண்ணி அந்த அருவருப்பை தேவாலயத்தில் ஸ்தாபிப்பான். அதிலிருந்து முடிவுக்கு 1290 நாட்கள் செல்லும். பின்னும் 45 நாட்கள் ஆர்மெகதொன் யுத்தம் நடக்கும். வெளி.19:11-21-ன்படி இயேசு வெள்ளைக்குதிரையின் மேல் வந்து மிருகத்தையும் கள்ளத்தீர்க்கதரிசியையும் அக்கினிகடலிலே தள்ளுவார். 1335 நாட்கள் (44.5 மாதங்கள் - மூன்றரை வருடமும் 75நாட்களும்) காத்திருந்து சேருகிற மனுஷன் பாக்கியவான். உபத்திரவக்காலத்தில் கிறிஸ்துவுக்கென்று நிற்கிற ஜனங்கள் பாக்கியவான்கள். அதன் பின்பு ஆண்டவருடைய ஆயிரவருட அரசாட்சி துவங்கும்.
தானியேலின் சுதந்திரவிகிதம் (12:13)
மரணம் ஆண்டவருடை பிள்ளைகளுக்கு இளைப்பாறுதலின் காலம். ஆபிரகாமின்மடி, பரதீசி என்பது இளைப்பாறுதலின் இடம். கடைசி எக்காளம் தொனிக்கும்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களும், கிறிஸ்துவுக்குள் உயிரோடு இருக்கிறவர்களும் தங்கள் சுதந்திரவிகிதத்தற்கு எழும்பி செல்வார்கள். அதே வாக்குதத்தம் தானியேலுக்கு கொடுக்கப்படுகிறது. தகப்பனுடைய சுதந்திருத்தின் விகிதம் பிள்ளைகளுக்கு கொடுக்ப்படும். அவரோடு கூட என்றன்றைக்கும் காணப்படுவோம். ஆளுகை செய்வோம். அல்லேலூயா!
Pastor. David .T
Time Word of God Church
(Non-Denominational Full Gospel Tamil Church)
Time Word of God Church
(Non-Denominational Full Gospel Tamil Church)