'தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது' - (மாற்கு 4:31-31).
மார்த்தா பெரி என்கிற இளம் பெண் தன்னுடைய மிகப்பெரிய பங்களாவிலிருந்து புத்தகத்தை படித்து கொண்டிருந்தபோது, வெளியே சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த சத்தம் கேட்டது. அவள் அங்கு போய் அவர்களை அழைத்து கொண்டு வந்து, வேதத்திலுள்ள கதைகளை சொல்லி கொடுத்து அனுப்பினாள். அதன்பிறகு வாராவாரம் ஒரு நாள் அவர்களை அழைத்து அவள் வேதாகம சம்பவங்களை சொல்லி கொடுத்தும், படிக்க தெரியாதிருந்த சிறுவர்களுக்கு படிக்கவும் எழுதவும் சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள்.
1902-ல் ஒரு பள்ளிக்கூடத்தை அந்த இடத்தில் கொஞ்சம் பணத்தை திரட்டி ஆரம்பித்து, ஏழை மாணவர்களுக்கு அங்கு பாடம் சொல்லி கொடுக்கபட்டது. அது அப்படியே வளர்ந்து இப்போது 38 தனிப்பட்ட கட்டிடங்களாக, 2000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இடமாக பெரிதாக பெரி காலேஜ் ஆக உயர்ந்து நிற்கிறது. ஒரு கடுகு விதையை போல ஏழைகளுக்கென்று ஆரம்பிக்கப்பட்ட அந்த பள்ளி, தற்போது ஒரு பெரிய கல்லூரியாக, பெயர் பெற்ற கல்லூரியாக சிறந்து விளங்குகிறது.
மேற்கண்ட வசனத்தில் தேவனுடைய ராஜ்யம் ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசுகிறிஸ்து சொன்னார். தேவனுடைய ராஜ்யம் என்றால் நாம் நினைப்பது, ஒரு பெரிய சாம்ராஜ்யம், கிறிஸ்து அதிலிருந்து இராஜாதி இராஜாவாக அரசாளுவார் என்று தான். ஒரு போதும் ஒரு சிறிய கடுகு விதைக்கு ஒப்பாக நாம் நினைக்க மாட்டோம். ஆனால் இயேசுகிறிஸ்து தேவ ராஜ்யத்தை கடுகு விதைக்கு ஏன் ஒப்பிட்டு சொன்னார்?
கடுகு விதையை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். நம் இந்திய சமையலில் கடுகு போட்டு தாளிக்காமல் எந்த குழம்பையும் நாம் செய்ததில்லை (ஒரு சில குழம்புகளை தவிர). குறைந்தது 750 விதைகளாவது இருந்தால் தான் ஒரு கிராம் எடைக்கு சரியாகும். அவ்வளவு சிறிய கடுகு விதையாயிருந்தாலும், அது சரியான நிலத்தில் விதைக்கப்படும்போது, மிக பெரிய மரமாக மாறுகிறது.
அந்த காலத்தில் வாழ்ந்த யூதர்கள் கிறிஸ்துவின் ஊழியங்களினால் என்ன பயன் கிடைக்க போகிறது என்று நினைத்தார்கள். இயேசுகிறிஸ்துவை அவர்கள் மேசியாவாக காணவில்லை, ஏதோ ஒரு போதகராகத்தான் கண்டார்கள். ஏனெனில் கிறிஸ்து ஏழ்மையான பெத்லகேமில் ஏழ்மையான நிலையில் பிறந்தார். நாசரேத்தில் வளர்க்கப்பட்டார். நாசரேத் மத காரியங்களில் மிகவும் பின்தங்கியதாக அந்நாட்களில் கருதப்பட்டது. கிறிஸ்து மூன்றரை வருட ஊழியத்தில் பணம் இருந்ததில்லை, அன்றைய மதத்தலைவர்கள் அவரை எதிரியாக நினைத்தனர். அவரோடு கூட இருந்த சீஷர்கள் பெரிய இடத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. ஆகவே இவரால் நமக்கு என்ன நடக்க போகிறது என்று அவர்கள் நினைத்தார்கள். அவரது ஊழியம் கடுகு விதையை போல மிகவும் அற்பமானதாக இருந்தாலும், பின்னாளில் நடந்தது என்ன? எங்கெல்லாம் சுவிசேஷமாகிய கடுகு விதை விதைக்கப்பட்டதோ அங்கெல்லாம் மனிதரின் வாழ்க்கை மாறியது, வாழ்க்கை தரம் உயர்ந்தது.
கடுகு விதை நல்ல நிலத்தில் விதைக்கபட்டால், அது மிகப்பெரிய மரமாக வளருமாம். குறைந்த பட்சம் 15அடி உயரத்திற்கு கூட வளருமாம். ஆம், பேதுருவினால் சுவிசேஷம் விதைக்கப்பட்டபோது, ஒரே நாளில் 3000 பேர் கர்த்தரை ஏற்று கொண்டார்கள். 5000 பேர் ஏற்று கொண்டார்கள். கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள் பலுகி பெருக ஆரம்பித்தார்கள். ஆங்காங்கே சென்று விதைக்க ஆரம்பித்தார்கள். அநேக சபைகள் எழும்பின, அநேக ஆஸ்பத்திரிகள் கிறிஸ்துவின் நாமத்தில் கட்டப்பட்டன, அனாதை ஆசிரமங்கள், தொழுநோய் மருத்துவமனைகள் கிறிஸ்துவின் நாமத்தை கொண்டு ஆரம்பிக்கப்பட்டன. ஆம், ஒரு சிறு கடுகு விதையை போன்று தான் கிறிஸ்து மூன்றரை வருடகால் ஊழியத்தை செய்தார். ஆனால் அவருடைய அந்த ஊழியம் இன்று பெரிய மரமாக வளர்ந்து பெருகி நிற்கிறது. அல்லேலூயா! 'விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும்' என்ற வசனத்தின்படி அநேகருக்கு வாழ்வு தந்து இம்மையில் மாத்திரமல்ல, மறுமையிலும் நித்திய வாழ்வு தருவதாக கர்த்தருடைய தேவ ராஜ்யம் விளங்குகிறது..
பிரியமானவர்களே, தாவீது ஒரு கடுகு விதையை போலத்தான் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். ஆனால் கர்த்தர் அவரை தெரிந்து கொண்டு, முழு இஸ்ரவேலுக்கும் அரசராக்கினார் அல்லவா? மோசே தான் ஒரு திக்குவாயன் என்று சொன்னாலும், அவரை கொண்டுதான் கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். கிதியோன் இஸ்ரவேலரின் எல்லா கோத்திரத்திலும் தன் கோத்திரம் மிகவும் எளிமையானது என்று கூறினபோதும், அவரை கொண்டு தான் கர்த்தர் இஸ்ரவேலருக்கு இரட்சிப்பை கொடுத்தார். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
நாமும் நான் என்ன ஒரு கடுகு விதையை போலத்தான் இருக்கிறேன் என்று சொல்லாம், நம்முடைய ஆரம்பம் அற்பமாயிருந்தாலும், பின்னாளில் முடிவு சம்பூரணமாக இருக்கும்படி தேவன் கிருபை செய்வார். நம்முடைய கண்களுக்கு மிக சிறியதாக தோன்றும் நம்முடைய ஊழியத்தை கொண்டு தேவனால் மிகப்பெரிய எழுப்புதலை கொண்டு வரமுடியும். 'அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?' (சகரியா 4:10) கையளவு மேகத்தை கொண்டு தேவனால் கனமழையை கொண்டு வரமுடியுமென்றால், நம்மை கொண்டும் பெரிய காரியத்தை செய்வது அவரால் முடியுமல்லவா? நம்மால் முயன்றதை நாம் கடுகளவு விதையை போலிருந்தாலும் முழு மூச்சோடு செய்வோம். கர்த்தர் அதை பெரிய மரமாக தழைத்தோங்க செய்வார். ஆமென் அல்லேலூயா!
ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூரணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் என்
வறட்சி செழிப்பாகட்டும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
.
ஜெபம்
எங்கள் அன்பின் நேச தகப்பனே, ஒரு கடுகு விதையை தேவனுடைய ராஜ்யத்திற்கு ஒப்பிட்டு சொல்லி, அதன் மூலம் சத்தியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தின தயவிற்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகை மிகவும் தாழ்மையுள்ளதாக இருந்தாலும், அவருடைய மூன்றறை வருட ஊழியமும், அவர் எங்களுக்காக தம் ஜீவனையே கொடுத்து சென்றதால், இன்று கிறிஸ்துவின் நாமத்தில் அநேக அன்பின் ஊழியங்கள் நடைபெறுகிறதே தகப்பனே அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். பெரிய மரமாகி அநேகருக்கு பயன்படும்படியாக சுவிசேஷம் வளர்ந்திருப்பதற்காகவும், இன்னும் கர்த்தருடைய இரண்டாம் வருகைக்குள்ளாய் அநேகர் அவரண்டை வந்து சேரவும் உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
Super ,very use ful this message,thanks to lord😊😊god bless u
ReplyDelete