மத்தேயு 5:9 தியானம்


மத்தேயு 5:9 தியானம்

சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.” - மத்.5:9

தொழிலில் பார்ட்னராக இருந்த வில்சனுக்கும் தேவராஜீக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு, தொழிலும் உறவும் உடைந்துவிட்டது.   ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதில்லை.  பல வருடங்கள் கழித்து அவர்களது நண்பரொருவர் ஒரு பொதுக்கூட்டத்தின்போது இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.  இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைப் பற்றி பேச வாய்ப்பை அமைத்துக்கொடுத்தார்.  சில கடினமான, கசப்பான வார்த்தைகளுக்குப் பின் அமைதி அடைந்தனர்.   ஒருவருக்கொருவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டு சமாதானமானார்கள்.  நீண்ட நாட்களாக இருந்த பாரங்களும் வேதனைகளும் நீங்கி உறவு சீர்பட்டது.  இப்படி இரு தனிமனிதர்களுக்கும் இடையில்  சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சி எத்தனை அருமையானது.  ஆனால் இதோடு நின்றுவிடாமல் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பாவமென்னும் பிளவிலே நாம்  நிற்கவேண்டிய ஒரு முக்கிய கடமையுமுண்டு.

அப்போஸ்தலனாகிய பவுல் 2கொரி. 5:19ல் கூறும்போது, “தேவனுக்கும் உலகத்தாருக்கும் இடையேயுள்ள பகையை மாற்ற ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை தேவன் எங்களிடத்தில் ஒப்புவித்தார்” என்று கூறுகிறார்.  தேவனுடைய மனிதனாகிய மோசே, தேவனுக்கும், முறுமுறுத்து தேவனை விட்டு பின்வாங்கிப்போன இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே திறப்பிலே நிற்கிறார்.  இவர்களுக்கு இரங்கும்; இல்லாவிட்டால் என் பெயரை ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடும் என்று மன்றாடுகிறார்.  ஆம், கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவரும் இந்த ஒப்புரவாகுதலின் ஊழியத்தை செய்ய வேண்டும்.

பிரியமானவர்களே!  சமாதானம் பண்ணுதல் ஒரு அற்புதமான பணியாகும்.  நாம் பிறரோடு சமாதானமாய் வாழவும் பிறரை சமாதானத்திற்கும் நேராய் வழிநடத்தவும் செய்வோம்.  குடும்பத்திலோ, வேலை ஸ்தலத்திலோ, படிக்கும் இடத்திலோ இருவருக்கிடையே வெறுப்பை உண்டாக்கும் நபராக இராமல், சமாதானம் பண்ணுபவர்களாக வாழ்வோம்.   இரட்சிக்கப்படாத ஜனங்களை தேவனுக்கு நேராக நடத்தி, அவரோடு ஒப்புரவாக்க உதவுவோம்.  அப்படியிருக்கும் பட்சத்தில் நாம் நிச்சயமாகவே தேவனுக்கு பிள்ளைகளாகிறோம்.  இதைவிட சிறந்த மதிப்பு நமக்குண்டோ?

-    Mrs.J.ஜான்சிராணி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.