சுயகிரியை சரியாக உள்ளதா?
அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். (கலாத்தியர் 6:4)
ஒரு கடற்கரையோர குடியிருப்புப் பகுதி! பூ விற்பவர் கூவிக்கூவி பூ விற்றுக்கொண்டு இருக்கையில், திடீர் மழை பிடிக்க! அருகாமையிலிருந்த வீட்டுக்குள் அனுமதிகேட்டு நுழைகிறார். அது கருவாடு விற்பவர் வீடு! வெளியே பெருமழை பிடிக்க வேறு வழியின்றி அங்கே சற்று அமரவேண்டிய நிலை! அந்த வீட்டுக்காரருக்கு பூக்கூடையிலிருந்து வந்த பூமணம் சற்று ஒவ்வாமையை ஏற்படுத்தியதுபோலும். மூக்கைப் பொத்திக்கொண்டார். பூக்காரருக்கோ, கருவாட்டு மணம் ஒத்துக்கொள்ளாமல், தானும் மூக்கைப் பொத்திக்கொண்டார். கருவாட்டுக்காரருக்கு கருவாட்டு மணமோ, பூக்காரருக்கு பூமணமோ ஒன்றும் செய்யவில்லை. ஏனெனில் அது பலவருடங்களாகப் பழகிப்போய் இருந்தது.
இவ்வாறே பரிசுத்த வாழ்வு வாழ்வோர் தாங்கள் சுத்தமாக இருப்பது பழகிப்போய் எப்போதும் போல இருப்பர். துன்மார்க்கரும் அப்படியே, துன்மார்க்கமாய் இருப்பது பழகிப்போய் அப்படியே இருப்பர். அதாவது சொரணையில்லாமல். யார்வந்து சொன்னாலும், தங்களையும் நீதிமான்களாகவே கருதுவர். என்றாவது ஒருநாள், பரிசுத்தமான இடத்தில் தாங்கள் நிற்க நேர்ந்தால்தான், பரிசுத்த மனிதர்கள் நடுவில் நடக்க நேர்ந்தால்தான் அந்த வித்தியாசம் தெரியும்! அதனால்தான் பரிசுத்தவேதம் அழைக்கிறது நம்மை, நாம் நம்மை சோதித்துப் பார்க்கவேண்டும்!
நம் வார்த்தை சரியாக உள்ளதா? நினைவுகள்? எதிர்பாலரிடம் எவ்விதம் பழகுகிறோம்? அந்தரங்க விஷயங்களில்.. தொழில்காரியங்களில் என உண்மையும் பரிசுத்தமும் மேலோங்காவிடில், நாம் நம்மை சரிசெய்துகொள்ள, சீர்செய்துகொள்ள வேண்டும்! பின்னாளில் நாம் வெட்கப்படாதபடி, இந்நாளில் சரியாவோம்! கிருபாசனம் உண்டு.. தைரியமாய் சென்று ஒப்புரவாவோம், நம் தகப்பனிடம்! ஆமென்!