சுமைதாங்கி அல்ல.. கன்மலை
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். (சங்கீதம் 55:22)
முற்காலத்தில் சைக்கிள்களும், மாட்டுவண்டிகளும் பயன்பாட்டுக்கு வரும்முன்னர் பொருட்களை இடம்விட்டு இடம் கொண்டுசெல்ல தற்போதைய பாணியில் சொல்வதென்றால் "நடைவண்டி"தான் பயன்பட்டது. அதாவது கால்நடையாகவேதான் பொருட்களை கொண்டு சென்று வந்தனர். அன்றைய காலகட்டத்தில் திடமான உடல்கட்டுடன் இருந்த முன்னோர் சுமார் நூறு கிலோ எடையைக்கூட தூக்கிக்கொண்டு பல மைல்தூரம் சென்று வந்ததை தாத்தா, பாட்டியர் சொல்லக்கேட்டிருக்கலாம். அல்லது கேள்விப்பட்டிருக்கலாம்!
இன்றும் கோவில்கள், ஊரின் பாதையோரம் உள்ள மர நிழல் உள்ளிட்ட இடங்களில் சுமைதாங்கிக் கற்கள் நிற்பதைக் காண்கிறோம். 2 கற்களை குத்துக்கிடையாக நட்டு அதற்கு மேலே படுகிடையாக ஒருகல்லை போட்டு வைத்திருப்பார்கள். இதற்கு சுமை தாங்கி கற்கள் எனப் பெயர். சுமையுடன் நடந்து வருவோர் சுமைதாங்கி கல்மீது சுமையை வைத்துவிட்டு பின்னர் எளிதாக எடுத்துச்செல்ல இந்த ஏற்பாடு. இதில் கொஞ்சம் இளைப்பாறுதல் அவ்வளவுதான். பிறகு அவரவர் சுமையை மீண்டும் சுமக்க, பயணம் தொடரும்!
பாவச்சுமை எங்குமே இறக்கிவைக்க முடியாத சுமை! சில பாவபாரங்களை, யாரிடமும் நம்பி சொல்லி இளைப்பாறுதல் பெறமுடியாது! அச்சுமை இருதயத்தில் ஏற்படுத்தும் பாரம் சொல்லிமுடியாது! நாம் பார்த்த சுமைதாங்கிக்கல் போல நமக்கு ஒரு பெரிய கன்மலை உண்டு! எச்சுமையையும் தன்னகத்தே ஏற்றுக்கொண்டு, மனிதரை பாரமின்றி வாழச்செய்யும் அக்கன்மலை கிறிஸ்து இயேசுவே! அவரால் மன்னிக்கக்கூடாத பாவம் என்று ஒன்றுமில்லை!
அவர்தம் வார்த்தையால், நம்மை அழைக்கும் இந்நேரம், மன்னிப்படைய, இளைப்பாறுதலும், சமாதானமும் பெற ஏற்ற நேரமே! பாவ பாரம் சுமக்கும் மனிதரின் மேல் பாசம் வைத்த இயேசு உண்டு! இளைப்பாறுதல் அடைவோம் மெய்யான சுமைதாங்கியிடம்! இங்கே வைத்த கவலைகளை, பாரங்களை திரும்ப எடுக்கவேண்டியதில்லை! ஆமென்!
