ரெபெக்காளின் ஜெபம்!


ரெபெக்காளின் ஜெபம்!

"அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்தன. அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்" (ஆதி. 25:21,22).

"இப்படியானால் எப்படியோ?" என்று ரெபெக்காள் கலங்கினாள். காரணம்? அவளுடைய கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் உருவானது. அந்தப் பிள்ளைகள், அமைதியாய் அந்தக் கர்ப்பத்தில் இருக்கவில்லை. ஒருவரோடொருவர் மோதிக் கொண்டிருந்தார்கள். வயிற்றுக்குள்ளேயே ஒரு போராட்டம், சண்டை.

பிள்ளைகள் இன்னும் பிறக்கவில்லை. உலகத்திலுள்ள பாவம் அவர்களைத் தீண்டுவதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும் அவர்களுக்குள் ஒரு மோதல். நான் பெரியவனா? நீ பெரியவனா? எனக்கு சேஷ்ட புத்திர பாகமா? அல்லது உனக்கா? நான் முதலில் பிறப்பேனா? அல்லது நீ முதலில் பிறப்பாயா? உலக வாழ்க்கையில் யார் செழித்திருக்கப்போகிறார்கள்? என்பதைக் குறித்து, அவர்கள் மோதிக் கொண்டிருந்திருக்கக்கூடும்.

ஒரு தாயின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்ததாம். பத்து மாதங்கள் தாய் வயிற்று தண்ணீர்க் குடத்திலே மிதந்து கொண்டிருந்த, ஒரு குழந்தைக்கு மிகுந்த சலிப்பு உண்டாயிற்று. பிரசவ நேரத்தில், "அப்பாடா முடிந்தது" என்று சொன்னது. அடுத்த குழந்தை, "முடிந்தது என்று சொல்லாதே, இனிதான் ஆரம்பமாகப் போகிறது" என்றதாம். வயிற்று வாழ்க்கை முடிந்ததும், உலக வாழ்க்கை ஆரம்பமாகப் போகிறது. உலக வாழ்க்கையின் முடிவில், நித்திய வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஒன்றின் முடிவு, மற்றதின் துவக்கமாய் இருக்கிறது. பாவ வாழ்க்கை முடியும்போது, பரிசுத்த வாழ்க்கை ஆரம்பமாகிறது. "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின" (2 கொரி. 5:17).

பிள்ளைகள், வயிற்றில் கர்ப்பத்திலே மோதிக்கொண்டிருந்தபோது, இப்படி இருந்தால் எப்படியோ? என்று ரெபெக்காள் கலங்கினாள். ஒருவேளை தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ? பத்து மாதத்திற்கு முன்னாலேயே, குறை பிரசவம் ஏற்பட்டு விடுமா? பிள்ளைகளுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்? என்று பல சிந்தனைகள் அவளுக்குள் தோன்றினது. ஆகவே அவள் தேவனுடைய சமுகத்திற்குச் சென்று விசாரித்தாள்.

இந்த இடத்தில்தான் முதல் முதல், "கர்த்தரிடத்தில் விசாரிக்கிறது" என்பதைப் பற்றி நாம் அறிகிறோம். மற்ற இடங்களிலெல்லாம், கர்த்தரிடத்தில் பக்தர்கள் ஜெபித்தார்கள், தியானம் செய்தார்கள். ஆனால் இந்த இடத்தில்தான், "கர்த்தரிடத்தில் விசாரிக்க முடியும்" என்பதை ரெபெக்காள் நமக்கு உணர்த்துகிறாள். கர்த்தரிடத்திலே உறவாடுவதற்கு, இது ஒரு புதிய வழி முறையாகும்.

மோசே வனாந்தரத்திலே ஆசரிப்புக்கூடாரத்தைப் போட்டபோது, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி, இஸ்ரவேலர் அங்கே சென்றார்கள் (யாத். 33:7). சிலர் கர்த்தரிடத்தில் விசாரிக்கும் போது, கர்த்தர் மெல்லிய குரலில் அவர்களோடு பேசி, அவர்களுக்கு பதில் கொடுப்பார். சிலருக்குக் கர்த்தர் ஆசாரியனின் மூலமாக பதில் கொடுப்பார். அந்த ஆசாரியன், கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து ஊரீம், தும்மீம் என்னும் பொருட்கள் மூலமாக ஆலோசனை கேட்பான். தேவனுடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு ஆலோசனை சொல்லுகிறவராக இருக்கிறார். அவருடைய நாமம், "ஆலோசனைக் கர்த்தர்" என்பதாகும் (ஏசா. 9:6).

நினைவிற்கு:- "நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" (சங். 32:8).

சகோ. J. சாம் ஜெபத்துரை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.