ஒரு குருப்பில் வந்த செய்தி (என்னை மிகவும் கவர்ந்தது)
“...தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்க(ளின்)... விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?” - லூக்கா.18:7
தேவன் நம் ஜெபத்தைக் கேட்கிறவர்; ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறவர். சில ஜெபத்தின் பதில் உடனே பெற்றுக்கொள்கிறோம். சிலவற்றிற்கு தாமதமாய் பதிலை கிடைக்கப்பெறுகிறோம். வேதத்திலே, சகரியா என்ற ஆசாரியன் தனக்கு பிள்ளை வேண்டுமென்று பல ஆண்டுகளாக ஜெபித்தார். தேவன் அதற்கான பதிலை அவரது முதிர்வயதில் கொடுத்தார். அந்த பிள்ளைதான் இயேசுகிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி முன்னே அனுப்பப்பட்ட யோவான்ஸ்நானன்.
சகரியா-எலிசபெத் தம்பதியினர் கூட தங்களுக்கு வயது போய்க்கொண்டேயிருப்பதால் ஜெபத்திற்கான பதிலை எதிர்பார்ப்பதைக் கூட விட்டுவிட்டிருப்பர். ஆனால் தேவனோ அவரது சித்தப்படி அவர் நியமித்த நேரத்தில் பதிலைக் கொடுத்து தனது இரட்சிப்பின் திட்டத்தில் யோவானை பயன்படுத்துகிறார்.
நான் இரட்சிக்கப்பட்ட புதிதிலே, எப்படி ஜெபிக்க வேண்டுமென்று ஜெபிக்கத் தெரியாதவளாக இருந்தேன். ஆனாலும் எங்கள் வீட்டு உரிமையாளர் குடும்பத்தைப் பார்க்கும்பொழுதெல்லாம், “இயேசுவே இவர்கள் குடும்பத்தையும் இரட்சியும்” என்று மாத்திரம் உள்ளத்திற்குள் நினைப்பேன். இந்த சிறு ஜெபத்தை தினமும் பலமுறை செய்துவிடுவேன். ஆனாலும் சாதகமான சூழல் கடுகளவுமில்லை. காரணம் அவர்கள் வீட்டில் ஐம்பது அறுபது பேர் சேர்ந்து மன்றம் அமைத்து 40 நாட்கள் விரதம் இருந்து புனிதஸ்தலம் ஒன்றிற்கு பாதயாத்திரையாய் செல்வார்கள். இவர்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த நான்கு ஆண்டுகளாய் இவர்களுக்காய் ஜெபித்தேன். 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாய் அவர்களைச் சமீபத்தில் சந்தித்தபோது, குடும்பமாய் இரட்சிக்கப்பட்டு ஆலயத்திற்கு செல்கிறார்கள் என்ற செய்தி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த ஜெபத்திற்கான பதிலை நானே எதிர்பார்க்கவில்லை. ஆனால் பெரிய தேவன், சின்ன ஜெபத்திற்கு பதில் தந்தார்.
பிரியமானவர்களே! நீங்கள் ஏதோ ஒரு காரியத்திற்காக ஜெபித்து ஜெபித்து சோர்ந்து போய் இருக்கலாம். பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அற்றுப்போயிருக்கலாம். ஆனால் நாம் மறந்தாலும் நம் ஜெபங்களை மறவாத தேவன் தமது அநாதி தீர்மானத்தின்படி ஜெபத்திற்கான பதிலை தருவார். ஒரு குறிப்பிட்ட நபரின் இரட்சிப்பிற்காக ஜெபித்து ஜெபித்து சோர்ந்து போய்விட்டீர்களோ? இனி இவர் இரட்சிக்கப்பட வாய்ப்பேயில்லை, எல்லாம் கைமிஞ்சி போய்விட்டதென்று ஜெபிப்பதையே விட்டுவிட்டீர்களோ? நிச்சயமாகவே பதில் வரும். இன்றைக்கும் ஊழியத்தின் பாதையிலே அநேக அற்புத சாட்சிகளைக் கண்ணாரக் காண்கிறோம். அதில் ஒன்று போதைக்கு அடிமையான ஒரு வாலிபனின் தாயார் அவனுக்கு ஜெபித்த ஜெபங்களுக்கு 10 ஆண்டுகளாக பதில் வராததுபோல் காணப்பட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அவர்களை சந்தித்தபோது, “அழுகிறதற்கு என் கண்களில் கண்ணீர் கூட இப்பொழுது இல்லை” என்றார்கள். ஆனால் இன்றோ அற்புதமான பதில் கிடைத்துள்ளது. அவ்வாலிபன் அதிலிருந்து விடுதலை பெற்று, ஆண்டவருக்கு மகிமையுள்ள சாட்சியாய் வாழ்ந்து வருகிறான். இந்த தேவன் உங்கள் ஜெபத்திற்கும் நிச்சயமாய் பதில் தருவார்.
