கிளயோப்பா

கிளயோப்பா:

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டபின் மூன்றாவது நாள். யூத முறைப்படி நறுமணப் பொருட்களோடு இயேசுவின் கல்லறைக்குச் சென்றனர் மகதலா மரியாவும் வேறு சில பெண்களும்.

கல்லறை அரச காவலில் இருந்தது. கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. காவலர்களிடம் சொல்லி எப்படியாவது கல்லைப் புரட்ட வேண்டும் என அவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

கல்லறையை அடைந்த அவர்கள் திகிலடைந்தனர். கல்லறையின் கல் புரட்டப்பட்டிருந்தது. உள்ளே இயேசுவைக் காணோம். சுற்றி வைத்திருந்த துணிகள் மட்டுமே இருந்தன. சங்கிலிகள் உடைந்து தெறித்திருந்தன.

திடீரென மின்னலைப் போல இரண்டு வானதூதர்கள் அங்கே தோன்றினார்கள்.

“உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?” வானதூதர்கள் கேட்டார்கள்.

அவர்கள் குழப்பமடைந்து ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள். இயேசு கொல்லப்பட்டதையும், உயிரற்ற சடலமாய் அடக்கம் செய்யப்பட்டதையும் அருகிருந்து பார்த்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு வானதூதர்களின் பேச்சு புரியவில்லை. தூதர்கள் தொடர்ந்தார்கள்.

“அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே”

வானதூதர்கள் அப்படிச் சொன்னதும் சட்டென இயேசுவின் பேச்சு அவர்களுடைய நினைவுக்கு வந்தது. பயம் சட்டென பரவசமாக மாற, அவர்கள் சீடர்களுக்கு இந்த விஷயத்தைச் சொல்ல தலை தெறிக்க ஓடினார்கள்.

சீடர்களோ பெண்களின் பேச்சை நம்பவில்லை. ஆனால் பேதுரு மட்டும் எழுந்து கல்லறையை நோக்கி ஓடினார்.

கல்லறைக்குள் சென்று பார்த்தபோது தான் அவருக்கும் விஷயம் புரிந்தது. இயேசு உயிர்த்து விட்டார். அவருக்கு வியப்போ வியப்பு.

அதே நாளில் இரண்டு சீடர்கள் எருசலேமிலிருந்து எம்மாவு எனும் ஊருக்குப் பயணமானார்கள். அது சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அந்த இரண்டு சீடர்களில் ஒருவர் பெயர் கிளயோப்பா !

இயேசுவின் மரணத்தைக் குறித்தும், அதன் பிறகு நடந்த நிகழ்ச்சிகளைக் குறித்தும் அவர்கள் பேசிக்கொண்டே சென்றனர். இரவு நேரம். அவர்களுடைய கண்களிலும், பேச்சிலும் சோகம் வழிந்தது.

இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்தார். அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை. அவர்களுடைய கண்கள் இயேசுவைக் காணாதபடி மறைக்கப்பட்டிருந்தன.

என்ன பேசுகிறீர்கள் ?, இயேசு கேட்டார்.

“எருசலேமில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி தான் பேசிக்கொண்டே வருகிறோம்”

“எருசலேமில் என்ன நடந்தது ?”

நடந்து கொண்டிருந்த சீடர்களில் ஒருவரான கிளயோப்பா குரலில் கொஞ்சம் கோபம் கலந்து கேட்டார்.

‘எருசலேமில் நடந்த நிகழ்ச்சிகள் உமக்கு மட்டும் தான் தெரியாது போலிருக்கிறது. நாங்கள் இயேசுவைப் பற்றித் தான் பேசுகிறோம்.  அவர் உலகை மீட்பார் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் அவரை மதவாதிகளும், அரசியல்வாதிகளும் சிலுவையில் அறைந்து கொன்று விட்டார்கள்’ என்றார்.

‘ஓ… அப்படியா ?’

‘ஆம். ஆனால் இன்றைக்கு என்ன நடந்ததென்றால், சிலர் கல்லறைக்குச் சென்று பார்த்தபோது அவர் இல்லையாம். வெறும் துணிகள் தான் இருந்திருக்கின்றன.

கல்லறைக்குச் சென்றவர்கள் வானதூதர்களைக் கண்டிருக்கிறார்கள்.  இவையெல்லாம் எங்களைக் குழப்புகின்றன’ என்றார்கள் அவர்கள்.

‘இறைவாக்கினர் உரைப்பதெல்லாம் நடந்து தானே ஆகவேண்டும். அதை நம்ப மாட்டீர்களா ?

மெசியா மாட்சியடையும் முன் பாடுபட்டேயாக வேண்டும் ?’ என்று சொன்ன இயேசு மறை நூலில் தன்னைப் பற்றி எழுதப்பட்டிருந்த தீர்க்கத் தரிசனங்கள் யாவற்றையும் விளக்கத் துவங்கினார்.

சீடர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கினார்கள்.

‘நீங்கள் எங்கே போகிறீர்கள் ?’

‘இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது’ இயேசு சொன்னார்.

இன்று இரவு எங்களோடு தங்கிவிட்டு நாளை செல்லுங்கள். சீடர்கள் கேட்டார்கள். இயேசுவும் ஒத்துக் கொண்டார்.

உணவு உண்ணும் நேரம்.

இயேசு அப்பத்தை எடுத்தார். வானத்தை அண்ணந்து பார்த்து கடவுளைப் போற்றி அப்பத்தைப் பிட்டார்.

சட்டென அவர்களுடைய கண்கள் திறக்கப்பட அவர்கள் இயேசுவைக் கண்டு கொண்டார்கள். உடனே இயேசு அவர்களிடமிருந்து மறைந்து போனார்.

“வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என அவர்கள் வருந்தினார்கள்.

அவர்கள் இந்த செய்தியை சீடர்களுக்குத் தெரிவிக்க எருசலேம் நோக்கி ஓடினார்கள்.

எருசலேமில் பதினோரு அப்போஸ்தலர்களும், அவர்களோடு சிலரும் குழுமியிருந்தார்கள்.

தங்களுக்கு இயேசு காட்சியளித்ததையும், தங்களிடம் பேசிக்கொண்டு வந்த விஷயங்களையும் கிளயோப்பா விலாவரியாகப் பேசினார்.

“நீங்கள் சொல்வது உண்மை தான். ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்கும் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள் கூடியிருந்தவர்கள்.

கிளயோப்பா உயிர்த்த இயேசுவைக் காணும் பாக்கியம் பெற்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.