இம்மட்டும் வா ! மிஞ்சி வராதே ! (யோபு 38:11)

"""""""""""""""""""""""""""""""""""
        இம்மட்டும் வா !
       மிஞ்சி வராதே !
         (யோபு 38:11)

"""""""""""""""""""""""""""""""""""

பாலியல் பண்பாட்டுக்கு 
     எல்லை குறித்தல்

         
---------------------------

உலகம் முழுவதும் பாலியல் ஒழுக்கக்கேடு இன்று தறிகெட்டுப் போய் தலைவிரித்தாடுகிறது.

'விபச்சாரம்' என்ற சொல்லே அபச்சாரமாகி "இதெல்லாம் ஒன்றுமில்லை" என்று தங்களை தேவ மனிதர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் சேர்ந்து கூத்தடிக்கும் நாட்கள் இவை..

விதிவிலக்கே இல்லாமல் திருமணமான பெண்களும் இதில் அடக்கம் என்பது தான் அபத்தம்.கள்ளக் காதல்களும் உணர்ச்சிப் பெருக்கெடுத்த  உறவுகளும் காலத்தின் கட்டாயமாகிப் போன காலமிது !

எல்லையே இல்லாத அளவு எல்லை மீறியிருக்கிறது ஒழுக்கக்கேடு. 4, 5 வயது குழந்தைகள் கூட தங்களுக்குள் உடலுறவு செய்து கொள்வதெல்லாம் ஒன்றும் புதுசு அல்ல என்று சொல்லும் அளவுக்கு அசுர வேகத்தில் தீயாய்ப் பரவுகிறது இந்த பாழாய்ப்போன செக்ஸ்.

பாலியல் இச்சைகளுக்கு விலகியோடி உடலளவில் பரிசுத்தமாய் இருப்பது என்பதெல்லாம் பாட்டி கதையாய்ப் போன நிலை இ்ன்று !

ஜனங்கள் இந்தப் பாவத்தில் செங்குத்தாய் தலைகுப்புற விழக் காரணாய் இருப்பவைகளில் ஒன்று.." அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.." என்ற ஓவர் கான்ஃபிடன்ஸ்.

"பொண்ணோட சுத்தினா என்ன?...என்றும் "அவன் என் friend தான ?..." இதிலெல்லாம் ஒண்ணும் இல்லப்பா.." என்ற தெனாவெட்டு ஒன்றே போதும் உன்னைக் கவிழ்க்க!

தேசத்துப் பெண்களைப் பார்க்கத் தான் புறப்பட்டுப் போனாள் தீனாள்...
ஆனால் பட்டதோ ஊர்த் தலைவனின் மகன் சீகேமின் கண்களில்..

அதன் பின் நடந்தவைகளும் சங்கிலித் தொடரான கொலைகளையும் எந்தக் கணக்கில் சேர்ப்பது ?

"இதப் பாக்கிறதுல என்ன இருக்குது?" என்று இறங்குவது சர்வ நாசத்தில் முடியும்..
ஜாக்கிரதை !

நீ வேறு எதையோ பார்க்கப் போக, வேறு ஏதோ உன் கண்ணில் பட்டதுமல்லாமல்,எத்தனை கண்கள் நீ அறியாமலேயே  உன்னைப் பார்க்கிறது என்று உனக்குத் தெரியுமோ ?

நீ மணமானவனோ வாலிபனோ, இந்தக் கடைசி காலத்தில் பாலியல் விஷயத்தில் பரிசுத்தத்தைப் பாதுகாத்துக் கொள்ள நீ விரும்பினால், நீ செய்ய வேண்டிய காரியங்களில்
மிக முக்கியமான ஒன்று..
உனக்கென்று கடுமையான எல்லை விதிளை நிர்ணயித்துக் கொள்வது..

நீ உன் மறுபாலாரைக் குறித்து.."அட போய்யா.."
என்று கவலையே இல்லாமல் இருப்பாயானால், உனக்கு "அய்யோ " தான்!

இது சத்தியம் !சத்தியம் !
சத்தியம் !

எவ்வளவு சீக்கிரம் நீ இதை உணர்ந்து புரிந்து சுதாரித்துக் கொண்டு உன்னை சுற்றி நீயே வேலியடைத்துக் கொள்வாயோ அவ்வளவு உனக்கு நல்லது !

"பொண்ணோடேயோ பையனோடேயோ ஜாலியா சுற்றிக் கொண்டே...அப்படியெல்லாம் நடக்காம பாத்துக்குவேன்.." என்றெல்லாம் டயலாக் அடிப்பவர்கள் சீக்கிரம் விழப்போகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எல்லைக் கோட்டைக் குறித்துக் கொள்! அடைப்பைப் பிடுங்குபவனைப் பாம்பு கடிக்கும் என்று ஞானமாய் எழுதி வைத்தான் சாலமோன் - அனுபவத்தோடு..

அடைப்பைப் பிடுங்குபவனுக்கே அந்த நிலை என்றால் அடைப்பே இல்லாதவனின் நிலை என்ன ?

சிலரோடு நீ நட்பு வைத்துக் கொள்ளவே முடியாது.பெட்டர் உன் ஆவிக்குரிய தரத்தை நீ உயர்த்தி் கொள்!

நண்பர்கள் வட்டத்திலிருந்து நீ விலகுகிறாய் என்று உன்னைக் கிண்டலடிப்பவர்கள் அடிக்கட்டும். நீ அடைய வேண்டிய இலக்கும் போய் சேர வேண்டிய ஸ்தானம் ஒன்றும் உண்டு என்பதை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்!

பொய் பித்தலாட்டம் பண்றவன், கேலி கிண்டலிலேயே காலத்தைக் கழிக்கிறவன், திருக்கும் கருக்குமான பொண்ணுங்க - பொம்பளைங்க - இவங்க வாசமும் சகவாசமுமே வேண்டாம் என்பதை உன் வாழ்க்கையின் நடைமுறை சட்டமாகவே ஆக்கிக் கொள் !

இவர்கள் உன் வாழ்க்கையை நரகமாக்கி விடுவார்கள் ஜாக்கிரதை !

லிவ் -இன் பார்ட்னர்ஸ் - பச்சையான இச்சைக்கு இவர்கள் வைத்துக் கொள்ளும் கொச்சையான பெயர் !
விலகி ஓடு !

"சேட்டிங்கில்" (chatting) சேட்டை பண்ணுகிறவர்களை கவனமாய் கண்காணி ! எவ்வளவு தான் அவர்கள் அன்பாய் ஒழுகினாலும் செய்திகளில் பாசம்  கசிந்தாலும் - மெசேஜ் அனுப்புபவர்களை எச்சரி! கேட்காவிட்டால் ப்ளாக் பண்ணி விடு! அட்லீஸ்ட் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய் !

சும்மா  தொட்டுத் தொட்டுப் பேசுவதையும் பாசமாய் கட்டிப் பிடித்துக் கொஞ்சுவதையும் கூடுமானவரை தவிர்த்துவிடு!

உனக்குப் பாசம் ரொம்பவே இருக்குமானால், அதைக் கட்டியணைத்துத் தான் காட்ட விரும்பினால் கணவன் மனைவி இருவரிடமும் பாகுபாடின்றி அதை வெளிப்படுத்து.

உன் கட்டியணைப்பு அபிஷேகம் பெண்களுக்காக மட்டுமே இருக்குமானால் - நான் வரல உன் விளையாட்டுக்கு !

உன் சொந்தக் குடும்பத்தினரும், ஒரே பாலாரும் தவிர வேறு யாரும் உன்னைச் செல்லமா "செல்லமே" என்று செல்லப் பெயரிட்டு கூப்பிட அனுமதிக்காதே !
செல்லப் பெயர்கள் செல்லமாய் மாறி மருவி வேறு வினையில் முடியும்.
இது தெரியாவிட்டால் இப்போது தெரிந்து கொள்!

கவரப்படுதலைக் குறித்து கவனமாயிரு! மறுபாலாரோடு எப்போதும் ஒட்டிக் கொண்டு அவர்களையே சுற்றி சுற்றி வராதே!

ஆணோ பெண்ணோ அவர்கள் எப்போதும் உன்னைப் பார்த்துக் கொண்டோ ரசித்துக் கொண்டோ இருந்தால்,அந்த ஆளை விட்டும் இடத்தை விட்டும் உடனடியாக நகர்ந்துவிடு!

யாராவது உன் உடல் வாகையும் முக அழகையும் நிறத்தையும் குரலையும், ஏன், ஆவிக்குரிய வரங்களையுமே கூட எப்போதும் ரசித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தால், அவர்கள் உன்னிடம் வசீகரிக்கப்பட்டு வசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

யோசேப்பைப் போல துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிப் போனாலும் தப்பில்லை..தப்பித்துக் கொள்வாய் !

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.