*அன்றன்றுள்ள அப்பம்*
6 பிப்ரவரி 2017.
*இச்சையென்னும் கண்ணி!*
*"உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே. அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே"* (நீதி. 6:25).
அன்பு வேறு, இச்சை வேறு. அதுபோல காதல் என்பது வேறு, காமம் என்பது வேறு. இயற்கையிலே ஆண்கள், பெண்களை விரும்புகிறார்கள். பெண்கள் ஆண்களை விரும்புகிறார்கள். மனுஷனுடைய மாம்ச சரீரத்திலே, ஒவ்வொரு அணுக்களும், அன்புக்காகவும், ஆசைகளுக்காகவும் ஏங்குகின்றன.
ஆனால் சாத்தான், அதைப் பயன்படுத்தி, ஜனங்களைத் தவறான வழிகளுக்குள் நடத்திச் சென்றுவிடுகிறான். சிலர் தங்களுடைய சுய ஆதாயத்துக்காக, "உன்னை நேசிக்கிறேன். உனக்காக உயிரையும் கொடுப்பேன்" என்றெல்லாம் ஆசை வார்த்தைகளைச் சொல்லி, எதிர்பாலோரை அடிமைகளாக்கி விடுகிறார்கள். முடிவில் தங்களது இச்சைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பளபளக்கும் சிலந்தி வலையிலே, பூச்சிகள் சிக்குவதுபோல, விளக்கு வெளிச்சத்தை நாடிவரும் விட்டில் பூச்சிகள், எரிந்து சாம்பலாவதைப்போல, பலரும், மடிகிறார்கள்.
உலகத்தார், "மாற்றான் வீட்டு மல்லிகை மணக்கும். திருட்டுத் தண்ணீர் தித்திக்கும்" என்றெல்லாம் சொல்லி, தங்கள் மனச்சாட்சியை மழுக்கிக்கொள்கிறார்கள்.
ஞானி ஒரு சம்பவத்தைக் கவனித்தார். "பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே, ஒரு புத்தியீன வாலிபனைக் கண்டு, அவனைக் கவனித்தேன். இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ, அவனுக்கு எதிர்ப்பட்டாள். வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம். இன்பங்களினால் பூரிப்போம் என்று, தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுர வாக்கினால், அவனை இணங்கப் பண்ணினாள். உடனே அவன், அவள் பின்னே சென்றான். ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவது போலும், ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல், அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு, அவன் ஈரலைப் பிளந்தது" (நீதி. 7:7,10,18,21-23).
ஆகவே பிரசங்கி, வாலிபர்களை எச்சரித்துச் சொல்லுகிறார், "நீ உன் வாலிபப் பிராயத்திலே, உன் சிருஷ்டிகரை நினை. தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று, நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும், இவ்விதமாக மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை" (பிர. 12:1,7) என்கிறார்.
தாவீது, தன்னுடைய வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து, வாலிபருக்கு என்ன ஆலோசனை சொல்லுகிறார்? "வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே. நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்" (சங். 119:9,11).
தேவபிள்ளைகளே, நீங்கள் கண்ணிகளில் சிக்கிவிடாமல், முதலிலே உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். "எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவது என்பது இழுக்கு." "தாண்டுவதற்கு முன்பாக, முன்னே என்ன இருக்கிறது என்பதை கவனித்துத் தாண்டு" என்பது, ஆங்கிலப் பழமொழி.
நினைவிற்கு:- *"ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை"* (ரோம. 8:1).
சகோ. J. சாம் ஜெபத்துரை.
