சங்கீதம்.5:3


“கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.”  - சங்கீதம்.5:3

ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்க ஜெபமே வழி.  அந்த ஜெபநேரம் அதிகாலை வேளையாயிருந்தால், அவருடைய கிருபையையும், வழிநடத்துதல்களையும் அதிகமாய் பெற்றுக்கொள்ளமுடியும்.  உலகம் விழித்துக்கொள்வதற்கு முன்னதாகவே ஆண்டவருடைய முகத்தை நோக்கிப் பார்ப்பது ஒரு இன்ப அனுபவம்.  திருச்சபை வரலாற்றிலே அதிகமாக தேவனால் பயன்படுத்தப்பட்டவர்கள், அதிகாலையில் எழுந்து ஜெபித்தவர்களே!  ஜான்வெஸ்லி, E.M.பவுண்ட்ஸ், ஜான்ஃப்ளெசர் போன்ற பரிசுத்தவான்களின் அனுபவமும் இதுவே.  அவர்கள் முதிர்வயதிலும் அதிகாலையில் எழும்பி கர்த்தரைத் தேடினார்கள்.

எல்லோருக்கும் மேலாக இயேசுகிறிஸ்துவே அதிகாலையில் எழுந்து ஜெபித்தார்.  தேவகுமாரனுக்கே அது தேவைப்பட்டது.  அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு வனாந்தரமான ஓரிடத்திற்கு போய், அங்கே ஜெபம் பண்ணினார் (மாற்கு.1:35).  “தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன்” என பாராட்டப்பட்ட தாவீது, ஒவ்வொருநாள் அதிகாலையிலும் தேவனுடைய முகத்தைத் தரிசிக்கும் பழக்கமுடையவர் (சங்.5:3). தேவனுடைய மனிதனாகிய மோசே சொல்லுகிறார், “வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி காலையிலே எங்களை உமது கிருபையினால் திருப்தியாக்கும் (சங்.90:14).  ஆம், கர்த்தருடைய கிருபைகள் காலைதோறும் புதியவைகள் என்று எரேமியா கூறுகிறார்.  ஒவ்வொரு புதிய நாளிலும் நாம் சந்திக்கவேண்டிய அனைத்துக் காரியங்களுக்கும் போதுமான புதிய கிருபைகளை வைத்துக்கொண்டு நம் நல்ல தகப்பன் நம் படுக்கைக்கு அருகே காத்துக்கொண்டிருக்கிறார்.  ஆர்வமுடன் அவரைத் தேட சுகமான தூக்கத்தை உதறிவிட்டு எழுந்திருப்போமானால், அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

பிரியமானவர்களே! அதிகாலையில் எழும்பும் பழக்கமில்லையென்றால் இன்றே துவங்குங்கள்.  அதற்காக முந்திய இரவே ஆயத்தமாகுங்கள்.  சீக்கிரமாய் படுக்கைக்குச் செல்வது சீக்கிரமாய் கண்விழிக்க உதவும்.  விழித்ததும் படுக்கையிலேயே முழங்கால்படியிடாதபடி மீண்டும் நான் படுக்க போவதில்லை என்ற மனநிலையை உருவாக்க படுக்கையை மடித்து வைக்கவேண்டிய இடத்தில் வையுங்கள்.  பல்துலக்கி, முகம்கழுவி, புத்துணர்வோடு தேவசமுகத்தில் அமருங்கள்.  ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது தூக்கத்தை வருவித்தால் கொஞ்சநேரம் நடந்து ஜெபியுங்கள்.  அல்லது திறந்தவெளி மாடியை பயன்படுத்துங்கள்.  அந்த இருண்ட நேரத்தில் வானத்து நிலவும் நட்சத்திரங்களும் தேவமகிமையை நமக்குச் சொல்லும்.  அண்டசராசரங்களின் ஆச்சரியங்களை நினைக்கும்போது நம்மால் தேவனை துதிக்காமல் இருக்கமுடியாது.  தேவனது படைப்பிற்கு முன் நாம் ஒரு தூசி என்பதை உணருவோம்.  நம் உண்மை நிலையை உள்ளத்தில் உணர்ந்தபின், நம்மைச் சுற்றியுள்ள வீடுகளில் குடியிருப்பவர்களைக் குறித்த பாரத்தால் நிரப்பப்படுவோம்.  அவர்களுக்காக ஜெபிப்போம்.  அழியும் மாந்தருக்காய் கண்ணீர் சிந்துவோம்.  ஐயோ இதற்குள் விடிந்துவிட்டதா இன்னும் எத்தனையோ காரியத்திற்காக ஜெபிக்கவேண்டுமே என திருப்தியற்று உள்ளம் ஏங்கும்.  நாளை இன்னும் சற்று முன்பே எழுந்து கொள்வேன் என தீர்மானிப்பீர்கள்.  ஆம், இந்த அதிகாலை ஜெபத்தை முயற்சியுங்கள்.  இன்றே முயற்சியுங்கள்.

-Mrs.எபன் சந்தோஷ்         

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.