அன்பின் விசாரிப்பு!

"மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்" (சங். 8:4). "காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?" (யோபு 7:18).

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார். ஆகவே, அன்போடு விசாரிக்கிறார். நீங்கள் ஒருநாளும் கர்த்தரால் மறக்கப்படுவதில்லை. ஒரு செல்வ சீமாட்டி, சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு நிறைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் இருந்தார்கள்.  ஆனாலும் அவர்களுடைய வயதான நாட்களில், பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் சேர்த்தார்கள்.

அந்த மூதாட்டி, ஒவ்வொரு நாளும் தன்னுடைய பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஒருவரும் அந்தப் பக்கமாய் வரவேயில்லை. ஆகவே, அவர்கள் மனம்சோர்ந்துபோய், மரித்துப் போனார்கள். அவர்கள் எழுதி வைத்த நாட்குறிப்பிலே ஒவ்வொரு நாளும் துக்கத்தோடு, "இன்றைக் காவது யாராவது என்னை பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒருவரும் வரவில்லை. எல்லோரும் என்னை மறந்துவிட்டார்கள், கைவிட்டு விட்டார்கள்" என்று எழுதியிருந்தார்கள்.

உலகம் அன்புக்காக ஏங்குகிறது. அன்பற்ற உலகத்திலே, இயேசு கிறிஸ்து நம்மை சிருஷ்டித்ததாலும், நம்மை தேடி வந்ததினாலும், நமக்காக சிலுவை சுமந்த தினாலும், நம்மை நினைத்திருக்கிறார். நான் உன்னைவிட்டு விலகுவதில்லை என்று உடன்படிக்கை செய்திருக்கிறார் (யோசு. 1:5). நிச்சயமாகவே உலகத்தின் முடிவுபரியந்தம், சகல நாட்களிலும் உங்களோடுகூட, இருப்பார் (மத். 28:20). 

வேதம் சொல்லுகிறது, "தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தான் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார், தேவன் அவர்களை நினைத்தருளினார்" (யாத். 2:24,25). ஆகவே கர்த்தர் மோசேயைப் பார்த்து, "எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற, ஒடுக்குதலையும் கண்டேன். இஸ்ரவேலரை பாலும், தேனும் ஓடும் தேசத்துக்கு அழைத்துச் செல்ல உன்னை அனுப்புவேன் வா" என்று மோசேயிடம் கூறினார் (யாத். 3:8-10).

உலகத்தார், உங்களை ஒடுக்கலாம். இனத்தவர்களும், ஒடுக்கலாம். மறுபக்கம், சாத்தானும் வியாதிகளையும், பெலவீனங்களையும் கொண்டு வரலாம். ஆனால் ஒன்றை மறந்துவிடாதிருங்கள். கர்த்தர் உங்களை நினைத்திருக்கிறார். பதினெட்டு வருடமாய் கூனியாயிருந்தாலும், அந்த ஸ்திரீயை கர்த்தர் மறந்துவிடாமல், ஜெப ஆலயத்தில் இயேசு அவளைக் கண்டு,  தம்மிடத்தில் அழைத்து, ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்றார். அப்பொழுது அவளுடைய பலவீனம் அவளைவிட்டு நீங்கிற்று. அவளுடைய முதுகு நிமிர்ந்தது. தலை நிமிர்ந்து நடந்தாள் (லூக் 13:11-13). ஆம், கர்த்தர் உங்களை நினைவுகூர்ந்து, அற்புதம் செய்வார்.
கர்த்தர் உங்களை மறக்காமல், தம்முடைய குமாரனால் விடுதலையாக்குவார். நீங்கள் ராஜாதி ராஜாவின் பிள்ளைகள். இயேசுவோடு ஆளுகை செய்ய அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். பரம கானான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிறது. "அவர் தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்" ( எபி. 2:18).

நினைவிற்கு:- "உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே" (எபி. 6:10).

சகோ. J. சாம் ஜெபத்துரை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.