ஒரு அழகான புல்வெளியில

ஒரு அழகான புல்வெளியில் வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது.  அதற்குத் தேவையான  உணவு எப்போதும்  அதற்குக் கிடைத்து வந்தது.  எந்நேரமும் பாடுவதும்,  ஆடுவதுமாகப் பொழுதைக் கழித்து வந்தது . 

அந்தப் புல்வெளியின் அருகிலிருந்த ஒரு புற்றில் எறும்பு  ஒன்று தன் கூட்டத்துடன் வசித்து வந்தது.  வெட்டுக்கிளி எறும்பை சந்திக்கும்  ஒவ்வொரு முறையும் எறும்பு ஏதேனும் ஒரு உணவுப் பண்டத்தை சுமந்தபடி சென்று கொண்டே இருக்கும். 

வெட்டுக்கிளிக்கு எறும்பின் இந்த செயல் வேடிக்கையாக  இருந்தது. 
"பரந்து விரிந்த  இந்தக்  காட்டில் உணவுக்கா பஞ்சம்? 
இந்த முட்டாள் எறும்பு ஏன்  எப்போது  பார்த்தாலும் உணவை சேமிப்பதிலேயே காலம் கழிக்கிறது?
அழகான இந்த வாழ்க்கையை ஆடிப் பாடிக் கழிப்பதல்லவோ இன்பம்.  இப்படியா வாழ்க்கையை 
வீணடிப்பது? " என்று அடிக்கடி நினைத்துக் கொள்ளும்.

ஒரு நாள் எறும்பிடம் வெட்டுக்கிளி  இந்தக்  கேள்வியைக்  கேட்டேவிட்டது. எறும்பு சிரித்தபடியே சொன்னது,
" நண்பா! திருந்த வேண்டியது  நானல்ல.  நீதான்.  இதோ கோடைக்காலம் முடியப் போகிறது.  உறைபனி வந்து சகலத்தையும் மூடிக்கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது.  அப்போது நீ தேடினாலும் உனக்கு  உணவும் கிடைக்காது ,  உறைவிடமும் இருக்காது.  இப்போதே என்னைப் போல உழைத்து உணவு சேகரிக்க  ஆரம்பி. உனக்கான  ஒரு பாதுகாப்பான உறைவிடத்தை ஏற்படுத்திக்கொள்" என்றது.

வெட்டுக்கிளி சிரித்து விட்டது.
" உன்னைப் போலத் தேவையற்ற காரியங்களை சிந்தித்து,  நிகழ்காலத்தின் சந்தோஷத்தை இழந்து போகிற முட்டாளென்றா என்னை நினைத்தாய்?"
என்றது. 
எறும்பு சொன்னது,
" நண்பா! இன்னும் காலம் இருக்கிறது.  என் வீட்டின் கதவுகள் சாத்தப்படுவதற்குள்
நீ மனம் திரும்பினால்  என் வீட்டில் கூட உனக்கு  இடமுண்டு " என்று சொல்லி விட்டு தன் வேலையைத் தொடர்ந்தது. 

"இந்த ரசனை கெட்ட முட்டாளிடம் பேசியது  என் தவறு " என்று  வெட்டுக்கிளி ஓய்வெடுத்தது.
கோடைக்காலம் முடிந்தது.  உறைபனிக் காலம் துவங்கியது.  வெட்டுக்கிளிக்கு அந்தக் குளுமை இன்பமாய் இருந்தது. 

எறும்பு சொன்னது,
" நண்பா! இன்றோடு என் வீட்டின் கதவுகள் மூடப்பட்டுவிடும்.  நீ வருவதானால் இப்போது வரலாம் " என்றது. வெட்டுக்கிளி சற்று கோபத்துடனே சொன்னது,
" வாழ்க்கையை ரசிக்கத்  தெரியாத மூடனே! என் கண் முன்னே நிற்காதே! " என்றது.  எறும்பு வேதனையுடன் கதவைப் பூட்டி விட்டு,  பனி உள்ளே வராதபடி  ஒரு சிறிய இடைவெளியை மட்டும் விட்டு மற்ற  இடங்களையெல்லாம் மண்ணால்  அடைத்து விட்டது. 

வெட்டுக்கிளி கவலைப்படாமல் வயிறு முட்ட சாப்பிட்டு நன்றாகத்  தூங்கியது.

மறுநாள் பனிப்பொழிவு துவங்கியது.  இலைகளெல்லாம் உதிரத்துவங்கின.  உதிர்ந்த  இலைகளை உறைபனி மூடிற்று. காடு முழுவதும் ஒரு  இலைகூட இல்லாதபடி எல்லா இடங்களிலும் உறைபனி. 

உண்ண  உணவில்லை. காடு முழுவதும் சுற்றியும்கூட ஒரு வாய்  உணவும் கிடைக்கவில்லை.  வெட்டுக்கிளி மிகவும் சோர்ந்து போனது.  தலைசுற்றி மயக்கம் வந்தது. 

படுத்து ஓய்வெடுக்கவும் முடியாது.  படுத்தால் பனி மூடிக்கொள்ளும். எறும்பு சொன்னதை நினைத்துக்  கொண்டது. 

அழக்கூட  உடலில் சக்தியில்லை.  தட்டுத் தடுமாறியபடியே எறும்பின் வீட்டுக்கதவை பலவீனமாய்த் தட்டியது.

வெட்டுக்கிளி கதவைத் தட்டுவது  எறும்புக்கு நன்றாகவே தெரிந்தது.  இருந்தாலும் மண்ணைக் குழைத்துப் பூசி அடைக்கப்பட்ட கதவைப் பனிக்காலம் முடியும்வரை திறக்க முடியாதே. 

" நண்பா!  நான்  எவ்வளவு சொல்லியும் நீ கேட்கவில்லை. உன் துன்பத்தைப் பார்த்தபோதிலும் உனக்கு  உதவி செய்ய முடியாதபடி  காலம் கடந்து போய்விட்டதே! ". என்றபடி உள்ளே சென்று விட்டது. 

பசியில் பலவீனப்பட்டுக்கிடந்த வெட்டுக்கிளியைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பனி மூடிக்கொண்டது.

செல்லமே! வசனத்தை  அலட்சியப்படுத்திப் பொழுது போக்கில் நேரம் செலவிடாதே. வசனம் கிடைக்காமல் நாம் பலவீனப்பட்டு சத்துரு நம்மை மூடிப் போடும் காலமும் வரும்.  கவனமாய் இருப்பாயா?

"இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும். ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்மல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்".

30. ஆமோஸ் 8 :11

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.