மனதிலே மறுரூபமாகுங்கள்

By  Rev. Solomon

“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (எபிரெயர் 10:23).

மனிதன் ஒரு ஆவியாயிருக்கிறான், அவனுக்கு ஒரு மனது இருக்கிறது, அவன் சரீரம் என்கிற கூட்டுக்குள் குடியிருக்கிறான். மனிதன் வெறும் சரீரமல்ல. சரீரம் இந்த பூமியிலே மனிதன் வாழ்வதற்காக தேவன் கொடுத்த ஒரு வீடாயிருக்கிறது. மனிதனுடைய ஆவிதான் கண் என்கிற ஜன்னல் வழியாக பார்க்கிறது; காது வழியாக கேட்கிறது; வாய் வழியாக பேசுகிறது. சரீரத்தை விட்டு ஆவி போகுமானால் கண் நன்றாயிருந்தாலும் பார்க்காது; காது நன்றாயிருந்தாலும் கேட்காது; வாய் நன்றாயிருந்தாலும் பேசாது. அப்படியானால் மனிதன் ஒரு ஆவிதான் என்பது தெளிவாய் விளங்குகிறது. அதுமட்டுமல்ல, தேவன் ஆவியாயிருக்கிறார் என்று வேதத்திலே பார்க்கிறோம். மனிதன் ஆவியிலே தேவனோடு இணைந்து, அவருடைய எண்ணங்களோடு ஒருமனப்பட்டு, அவரோடு உறவுகொண்டு, அன்பிலும் ஐக்கியத்திலும் வாழும்படிதான் தேவனால் உண்டாக்கப்பட்டான். அந்த உறவின் அடிப்படையிலேதான் மனிதனுக்கு எல்லா நன்மைகளும் கொடுக்கப்படுகிறது என்று வேதம் திட்டமாய்ப் போதிக்கிறது. அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் ஆதாம் பாவம் செய்வதற்கு முன்பாக வாழ்ந்தான். பகலின் குளிர்ச்சியான வேளையிலே ஆதாமும் ஏவாளும் தேவனோடு உறவுகொண்டார்கள். அதின் விளைவாக ஏதேன் தோட்டத்தின் இன்பத்தை அனுபவித்தார்கள். ஆனால், ஆதாம் பாவம் செய்தபோது ஆவியிலே தேவனைவிட்டுப் பிரிந்தான். மனிதன் தேவனில்லாமல் தன்னிச்சையாக வாழ ஆரம்பித்தான். ஆகவே, தேவனிடத்திலிருந்து வந்த எல்லா நன்மைகளும் போய்விட்டது. தேவன் மனிதனுக்கு கொடுத்த உயர்ந்த ஸ்தானத்திலிருந்து விழுந்து விட்டான். அவனுடைய ஆவிக்குள்ளே பாவம் வந்துவிட்டது, அது பிசாசின் சுபாவம் நிறைந்ததாக மாறிவிட்டது. விழுந்துபோன மனது சிறிய எண்ணங்களுடையதாய் மாறிவிட்டது. மனது தேவனுக்கு விரோதமாய் சிந்திக்க ஆரம்பித்தது. பிசாசு மனிதனுடைய மனதை ஆட்கொண்டு, பாவ எண்ணங்களாலும், வியாதியின் எண்ணங்களாலும், தரித்திரத்தின் எண்ணங்களாலும், தோல்வியின் எண்ணங்களாலும் அதை நிறைத்துப் போட்டான். உயர்ந்த நிலையிலே வைக்கப்பட்டிருந்த மனது புழுதியிலே விழுந்து விட்டது. வேதம், “ஒரு மனுஷனுடைய எண்ணங்கள் எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான்” (நீதிமொழிகள் 23:7) என்று சொல்லுகிறது. அதாவது, ஒரு மனிதனுடைய எண்ணங்களின் அடிப்படையிலேதான் அவனுடைய வாழ்க்கை இருக்கும் என்று இந்த வசனம் போதிக்கிறது. இன்னும் துல்லியமாக சொல்லப்போனால், ஒரு மனிதனுடைய எண்ணங்கள் எப்படியோ, அப்படியே அவனுடைய எதிர்காலமும் இருக்கும். இரட்சிக்கப்படாத மனிதர்கள் எல்லாரும் தங்கள் மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தின்படி கோபாக்கினையின் பிள்ளைகளாய் இருக்கிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது. அவர்கள் மாம்சத்துக்குரியவைகளை சிந்தித்து, மாம்சத்துக்குட்பட்ட வாழ்க்கை வாழுகிறார்கள். ஆனால், கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட நாம் பாக்கியவான்கள். நம்முடைய சிலாக்கியம் என்னவென்றால், நாம் ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டு புதுச்சிருஷ்டிகளாயிருக்கிறோம்.

“அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபேசியர் 2:5).

“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் அவன் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17).

இந்த வசனங்களின் அடிப்படையில் இரட்சிக்கப்பட்ட நாம் ஆவியிலே தேவ சாயலாய் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனைப் போலவே இருக்கிறோம். நாம் இரட்சிக்கப்பட்ட நாளிலே நம்முடைய மனது இரட்சிக்கப்படவில்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். மனது அதே பழைய மனதுதான். மனதைப் புதிதாக்கும்படிதான் தேவன் அவருடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு மனதை புதிதாக்க வேண்டிய ஒரு கடமையைச் செய்ய வேண்டும். யாக்கோபு என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனியுங்கள்:
“ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்திலே நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்” (யாக்கோபு 1:21).

நம்முடைய ஆவி இயேசுவை ஏற்றுக்கொண்ட நாளிலே இரட்சிக்கப்பட்டு விட்டது. அது கடந்த காலத்திலே நடந்த ஒரு நிகழ்வு. ஆனால், நம்முடைய ஆத்துமா அல்லது மனது நிகழ்காலத்திலே வசனத்தின் மூலமாய் இரட்சிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஆகவேதான் நாம் ஒவ்வொரு வாரமும் தவறாமல் ஆலயத்திற்கு வந்து தேவனுடைய வார்த்தைகளைக் கேட்க வேண்டும். இரட்சிக்கப்பட்டவர்களில் சிலர் வருடத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை ஆலயத்திற்குப் போவார்கள். இன்னும் சிலர், தங்கள் வாழ்க்கையிலே மூன்று முறைதான் தேவாலயத்துக்கு செல்வார்கள். முதல் முறை பெற்றோர்கள் பெயர் வைக்க அவர்களை ஆலயத்திற்கு கொண்டு செல்வார்கள். இரண்டாவது முறை திருமண நாளிலே ஆலயத்திற்குப் போவார்கள். மூன்றாவது முறை மரித்தவுடனே ஆலயத்திற்கு செல்வார்கள். அப்படிப்பட்டவர்களும் கிறிஸ்தவ வட்டாரத்தில் இருக்கிறார்கள். ஆனால், வாழ வேண்டுமென்று விரும்புகிறவர்கள் மனதை புதிதாக்கியே தீர வேண்டும். மனம் புதிதாக வேண்டுமானால் தேவனுடைய வார்த்தை வல்லமையாய் பிரசங்கிக்கப்படுகிற ஆலயத்திற்குச் சென்று, கேட்பதற்கு தீவிரப்பட வேண்டும். மனம் புதிதாக்கப்படும்போதுதான் இந்த பூமியிலே தேவன் நமக்கு வைத்திருக்கிற உயர்ந்த வாழ்க்கையை நாம் பெற்றனுபவிக்க முடியும்.
ரோமர் 12:2 இல், ‘மறுரூபமாகுங்கள்’ என்கிற வார்த்தை ஒரு கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மாறுகின்ற அனுபவத்தைக் குறிக்கிறது. ஒரு கூட்டுப்புழுவுக்கும் பட்டாம்பூச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை யோசித்துப் பாருங்கள். இரண்டையும் ஒப்பிடவே முடியாது. கூட்டுப்புழு பார்க்க அருவருப்பாய் இருக்கிறது, தரையிலே ஊர்ந்து ஊர்ந்து செல்லுகிறது, இலைகளை உட்கொள்ளுகிறது. ஆனால், அதே கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மாற்றமடைந்த பிறகு பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறது. வானத்திலே பறந்து செல்லுகிறது. மலர்களிலே உட்கார்ந்து தேனைக் குடிக்கிறது. அதற்குள்ளே ஏற்பட்ட மாற்றம் அதின் வாழ்க்கைத் தரத்தை எவ்வளவு மாற்றிவிட்டது என்பதைப் பாருங்கள். அதேபோலத்தான் முதலாவது விசுவாசிகளுடைய மனதிலே மாற்றம் ஏற்பட வேண்டும்; எண்ணங்கள் உயர வேண்டும். தோல்வியை சிந்திக்கிற மனது வெற்றியை சிந்திக்கிற மனதாக மாற வேண்டும். கீழானவைகளைச் சிந்திக்கிற மனது மேலானவைகளைச் சிந்திக்கிற மனதாக மாறவேண்டும். மரணத்தை சிந்திப்பதை விட்டுவிட்டு வாழ்வை சிந்திக்க பழக வேண்டும். வாழ்க்கையிலே ஜீவன் பெருக வேண்டுமானால், முதலாவது மனது ஜீவனால் நிரம்ப வேண்டியது அவசியமாயிருக்கிறது. நாம் சிந்தையிலே கிறிஸ்துவைப்போல மாற வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.

“கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” (பிலிப்பியர் 2:5).

மனது மறுரூபமாவது ஒரு நாளிலே நடக்கிற காரியமல்ல. தொடர்ந்து நாள் கணக்காக, மாதக்கணக்காக, வருஷக்கணக்காக தேவனுடைய வார்த்தையை மனதிலே வைக்கும்போதுதான் மனது மறுரூபமடைகிறது. அதன்பிறகுதான் நம்முடைய ஜெபங்களும், வாயின் அறிக்கைகளும் தேவனுடைய வார்த்தைக்கு ஒத்து இருக்கும். ஜெபங்களுக்கு துரிதமான பதில்கள் வரும். வாழ்க்கை தேவனுடைய ஆசீர்வாதங்களாலும், நன்மைகளாலும் நிரம்பும்.

அநேகருடைய மனது பிரச்சனைகளை சிந்திக்கிற மனதாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதினாலே அவர்கள் கவலையும், பாரமும் நிறைந்தவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மனக்கவலையும், பாரமும் கர்த்தருடைய நன்மைகள் வருவதற்கு பெரிய தடையாய் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள். மனதிலே இருக்கிற கவலை அவிசுவாசத்தையும், சந்தேகத்தையும் பெருகப்பண்ணுகிறது. சந்தோஷமும், உற்சாகமும் போய்விடுகிறது. பிசாசு இப்படித்தான் கிரியை செய்கிறான். இதைப் புரிந்துகொண்ட விசுவாசிகள் தீவிரமாய் தேவனுடைய வார்த்தையினாலே மனதை நிரப்புகிறார்கள். வார்த்தை மனதிலே இருக்கிற கவலைகளையும், பாரங்களையும் நீக்குகிறது. மனதை தேவனுடைய வார்த்தை புதுப்பித்து, தரிசனம் நிறைந்த மனதாக மாற்றுகிறது. மனது தரிசனத்தால் நிரம்பும்போதுதான் விசுவாசம் பெருக்கெடுக்கிறது. அதுதான் தேவனுடைய நன்மைகளை நமக்கு கொண்டுவருகிறது. ஆபிரகாமின் வாழ்க்கை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. அவனுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் பிள்ளையில்லை. அவனுடைய மனது பிள்ளையில்லையே என்கிற கவலையினால் நிறைந்திருந்தது. கவலைப்படுகிற அவனுடைய மனது குழந்தைப் பிறப்பை தடுத்து விடும் என்பதை அறிந்த தேவன் அவனோடு இடைபட்டார் என்று பார்க்கிறோம்.

“அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்” (ஆதியாகமம் 15:5).

தேவன், தம்முடைய வார்த்தையைக் கொண்டு கவலை நிறைந்த அவனுடைய மனதை தரிசனம் நிறைந்த மனதாக மாற்றினார். ஒரு பிள்ளைகூட இல்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த அவனுடைய மனதிலே ஏராளம் பிள்ளைகள் வரப்போகிறார்கள் என்கிற எண்ணத்தை வைக்கிறார். ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தான். கர்த்தர் சொன்னபடியே தன் மனதிலே கற்பனையை வளர்த்தான். கற்பனை வளம் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஈவு. அது தேவனுடைய வார்த்தையின் மூலம் வருகிறது. ஆபிரகாம் ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பார்த்து அதிலே ஒரு ஈசாக்கைக் கண்டான். பின்பு யாக்கோபையும், பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களையும், வானத்து நட்சத்திரங்களைப் போல இஸ்ரவேல் மக்களையும், அவர்களுக்குள்ளே இயேசுவையும், அவர் மூலமாய் கோடிக்கணக்கான விசுவாசிகளையும் பார்த்தான். அவனுடைய மனது கவலையிலிருந்து விடுபட்டு வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதத்தைப் பார்க்க ஆரம்பித்தது. அதின் விளைவாகத்தான் ஈசாக்கு பிறந்தான் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதன்பிறகு இயேசு வந்தார். அவர் மூலமாய் இன்றைக்கு கோடிக்கணக்கான விசுவாசிகள் இந்த உலகத்திலே வந்துவிட்டார்கள். ஆபிரகாமின் மனது மறுரூபமானதினிமித்தம் இத்தனை பெரிய காரியங்கள் நடந்திருக்கிறது. ஆபிரகாமைப் போலவே தேவனுடைய வார்த்தைகளைக் கற்பனை செய்கிற மனது உங்களுக்கு இருக்கிறதா? அப்படி இருக்குமென்றால் நீங்களும் தேவன் கொடுக்கிற பெரிய நன்மைகளைப் பெற்று இந்த உலகத்திலே சிறந்த வாழ்க்கை வாழ்வீர்கள் என்பது நிச்சயம்.

மனதின் எண்ணங்கள் தேவனுடைய நன்மைகள் வருவதற்கு வழியாகவும் அமையலாம் அல்லது தடையாகவும் அமையலாம். மறுரூபமாக்கப்படாத மனது தேவனுடைய நன்மைகள் வருவதற்கு பெரிய தடையாகத்தான் இருக்கிறது. தாயின் வயிற்றிலே பிறந்த எல்லா மனிதர்களும் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாகவே சிந்திக்கிறார்கள். இரட்சிக்கப்பட்டவர்களுடைய மனதும் ஆரம்பத்திலே அப்படித்தான் இருக்கிறது. அதை தேவனுடைய வார்த்தைக்கு ஒத்து சிந்திக்கிற மனதாக மாற்றும்படிதான் தியானம் என்னும் முறையை தேவன் கொடுத்திருக்கிறார். தியானம் என்பது தேவனுடைய வார்த்தையை முணுமுணுப்பது அல்லது அசைபோடுவது என்று பொருள். மாடு அசைபோடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அது முதலாவது நிறைய புல்லை உட்கொள்ளுகிறது. அதன்பிறகு ஓரிடத்தில் படுத்துக்கொண்டு தான் உட்கொண்ட புல்லை திரும்பவும் வாய்க்குக் கொண்டுவந்து, அதை நன்றாக அரைத்து, கூழாக்கி பின்பு விழுங்குகிறது. அப்படி கூழாக்கப்பட்ட புல் எளிதாய் ஜீரணிக்கப்பட்டு, அதின் சத்துக்களெல்லாம் மாட்டின் உடலில் ஒன்றரக் கலந்துவிடுகிறது. அதேபோலத்தான் தியானமும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தை நமக்கு ஆவிக்குரிய ஆகாரமாய் இருக்கிறது. அதற்குள்ளே தேவன் சுகத்தையும், பெலத்தையும், ஞானத்தையும், அறிவையும், ஐசுவரியத்தையும், வல்லமையையும் வைத்திருக்கிறார். அவைகளை எப்போதும் வாயிலே வைத்து முணுமுணுக்கும்போது அல்லது தனியறையிலே சத்தமாக உச்சரிக்கும்போது அந்த சத்தியம் நம்முடைய ஆவியோடும், மனதோடும் ஒன்றரக் கலக்கிறது. அது நம்முடைய பெலனாக மாறிவிடுகிறது. தேவனுடைய எண்ணங்கள் நம்முடைய எண்ணங்களாக மாறிவிடுகிறது. அதன்பிறகுதான் தேவனுடைய நன்மைகள் நம்முடைய வாழ்க்கையில் இறங்கி வருகிறது. மறுரூபமாக்கப்பட்ட எண்ணங்கள்தான் தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு வாசலாய் அமைகிறது. இதைத்தான் சங்கீதக்காரன் முதலாம் சங்கீதத்திலே இப்படிச் சொல்லுகிறான்:

“துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங்கீதம் 1:1-3).

விசுவாசிகளாகிய நாம் எதை செய்யக்கூடாது, எதை செய்ய வேண்டும் என்பது இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. துன்மார்க்கருடைய ஆலோசனையின்படி நடக்கக்கூடாது. இரட்சிக்கப்படாத மனிதர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்கக்கூடாது. பாவிகளுடைய வழியில் நிற்கக்கூடாது. பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரக்கூடாது. ஏன்? அவைகள் ஒருபோதும் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுத்தராது. ஆகவே, நம்முடைய பிரியத்தையெல்லாம் தேவனுடைய வார்த்தையிலே வைக்க வேண்டும். வார்த்தையின்மேல் பிரியமாயிருக்கிறவர்கள் தேவன்மேல் பிரியமாயிருக்கிறார்கள். ஏனென்றால், தேவன் வார்த்தையாகவே இருக்கிறார். எதைப் பார்க்கிலும் தேவனுடைய வார்த்தையை பெரிதாய் எண்ணுகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களென்று வேதம் கூறுகிறது. தேவனுடைய வார்த்தையிலே தியானமாயிருக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனென்றால், அவனுடைய மனம் மறுரூபமடைகிறது. மனம் மறுரூபமானபடியால் அவன் இலையுதிராமல் பசுமையாயும், கனிதருகிறதாயும் இருக்கிற மரத்தைப்போல இருக்கிறான். உஷ்ணம் வரும்போது மற்ற மரங்களெல்லாம் இலையை உதிர்த்துவிட்டு பரிதாபமாக நின்றுகொண்டிருக்கும்போது, நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்ட மரம் பசுமையாயும், செழிப்பாயும் நின்றுகொண்டிருக்கிறது. அதேபோல தேவனுடைய வசனத்தில் வேர்கொண்ட மனதையுடையவன் எப்போதும் பசுமையாயும் கனிதருகிறவனாயும் இருக்கிறான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். அவன் தொழில் செய்வானானால் அது வாய்க்கும். அவன் ஊழியம் செய்வானானால் அது வாய்க்கும். அவனுடைய குடும்பம் வாழ்ந்திருக்கும். அவன் நூறு சதவிகிதம் வெற்றி பெறுகிற மனிதனாயிருப்பான்.

கடைசியாக, சங்கீதம் 23 ஐ கவனியுங்கள். அது தேவனுடைய அநேக ஆசீர்வாதங்களை உள்ளடக்கிய சங்கீதம். அது, “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” என்று ஆரம்பிக்கிறது. ‘தாழ்ச்சியடையேன்’ என்பது ‘எனக்கு ஒரு குறைவுமில்லை’ என்கிற அர்த்தத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, தேவனுடைய நன்மைகள் வாழ்க்கையிலே நிரம்பி வழிவதைப் பற்றி இந்த சங்கீதம் பேசுகிறது. அநேக ஊழியக்காரர்கள் இந்த சங்கீதத்தை சாவு வீட்டிலேதான் வாசிப்பார்கள். இது செத்தவர்களுடைய சங்கீதம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அப்படியல்ல, இது நிகழ்காலத்திலே, இந்த பூமியிலே வாழுகிறவர்களுக்காக எழுதப்பட்ட சங்கீதம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய நல்ல மேய்ப்பராகிய இயேசு இன்றைக்கு நம்மை போஷித்து, பாதுகாத்து, பராமரித்து நடத்துகிறவராய் இருக்கிறார். அவர் நம்மை புல்லுள்ள இடங்களிலே மேய்த்து, அமர்ந்த தண்ணீர்களண்டையில் கொண்டுபோய் விடுகிறார். நம்முடைய வாழ்க்கையை ஆசீர்வாதத்தால் நிரம்பி வழியச் செய்கிறார். ஒவ்வொரு நாளும் நன்மையும் கிருபையும் தொடரச் செய்கிறார். ஆனால், அதிலே நாம் கவனிக்க வேண்டிய ஒரு வசனம் இருக்கிறது. அது என்னவென்றால்,

“அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்” (சங்கீதம் 23:3).

“ஆத்துமாவைத் தேற்றி” என்கிற வார்த்தை “மனதைப் புதுப்பித்து” என்கிற அர்த்தத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வீடு பழையதாய், பாழடைந்து கிடக்கும்போது அதற்குள்ளே யாரும் குடியிருக்க முடியாது. ஆனால், அது புதுப்பிக்கப்படும்போது மக்கள் வசதியாக குடியிருக்கும் இடமாக மாறிவிடுகிறது. சிலர் பழைய வீடுகளைப் புதுப்பித்து, புதிய கட்டிடத்தைப் பார்க்கிலும் அழகாக மாற்றிவிடுகிறார்கள். அதேபோல தேவன் நம்முடைய மனதைப் புதுப்பித்து, பழைய எண்ணங்களை அகற்றி, நம்மை நேரான பாதையிலே, வெற்றியின் பாதையிலே நடத்துகிறார். நம்முடைய மனம் புதிதாகவில்லையென்றால், 23 ஆம் சங்கீதத்தின் ஆசீர்வாதத்தை நாம் அனுபவிக்க முடியாது. ஆகவே, உங்கள் வாழ்க்கையிலே ஆசீர்வாதங்கள் நிரம்பி வழிய விரும்புகிறீர்களா? மனதை ஆண்டவருடைய வார்த்தைக்கு அர்ப்பணியுங்கள். வார்த்தையினாலே மனம் புதிதாகட்டும். அப்பொழுது உங்கள் வாழ்க்கைத்தரம் உயருகிற ஒரு அற்புதத்தைக் காண்பீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.