யோனா ஒரு இறைவாக்கினர். யோனா என்றால் புறா என்று பொருள். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களையும், புதிய ஏற்பாட்டில் தூய ஆவியானவரையும் புறா எனும் குறியீடு குறிப்பிடுகிறது.
யோனாவுக்கு கடவுளின் வாக்கு அருளப்பட்டது.
“நீ போய் நினிவே நகர மக்களை எச்சரி. அவர்களுடைய பாவம் அதிகமாகிவிட்டது” கடவுள் சொன்னார்.
யோனாவோ, கடவுளின் அழைப்பை உதாசீனப் படுத்தி விட்டு தர்கீசு எனும் இடத்துக்குப் போகும் கப்பலில் ஏறிக் கொண்டார்.
அசீரியாவின் மிக முக்கியமான நகரமான நினிவே கிழக்கில் இருந்தது. தர்கீசு மேற்கில் இருந்தது. கடவுள் அழைத்த இடத்துக்கு நேர் எதிரே ஓடினார் யோனா.
திடீரென கடலில் பெரும் காற்று வீசியது. கடல் கொந்தளித்தது. கப்பல் எப்போது வேண்டுமானாலும் உடைந்து போய்விடலாம் எனும் சூழல். கப்பலில் இருந்தவர்களெல்லாம் திகைத்துப் போய் அவரவர் கடவுளை நோக்கி கதறி வேண்டத் துவங்கினார்கள்.
கப்பலில் இருந்த சரக்குகளையெல்லாம் கடலில் எறிந்து கப்பலின் எடையைக் குறைக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். யோனாவோ எதையும் கண்டு கொள்ளாமல் கப்பலின் அடித்தளத்தில் போய் தூங்கிக் கொண்டிருந்தார்.
மாலுமி அவரை எழுப்பி செபிக்கச் சொன்னார்.
பின்னர், கப்பலில் உள்ளவர்களெல்லாம் ஒன்று கூடினார்கள். “வாருங்கள், இந்த தீங்கு யாரால் வந்தது என்பதை அறிய சீட்டுக் குலுக்குவோம்” என்று சொல்லிக் கொண்டே சீட்டில் எல்லார் பெயரையும் எழுதிப் போட்டு குலுக்கி எடுத்தார்கள்.
“யோனா” பெயர் வந்தது.
எல்லோரும் யோனாவைப் பார்த்தார்கள்.
“யார் நீ ? எங்கிருந்து வருகிறாய் ?”
“நான் ஒரு எபிரேயன். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளை வணங்குபவன். அந்த கடவுள் எனக்கு ஒரு வேலை கொடுத்தார். நான் அவரிடமிருந்து தப்பி ஓடிவந்தேன்” என்றார் யோனா.
கடல் சீற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. கொந்தளிப்பு அடங்கவில்லை.
“யோனா… நீ ஏன் இப்படிச் செய்தாய் ? இந்த கொந்தளிப்பு அடங்க என்ன செய்யவேண்டும் ? ”
“இந்த கொந்தளிப்புக்குக் காரணம் நான் தான். என்னைக் கடலில் எறிந்து விடுங்கள். அது தான் ஒரே வழி” யோனா சொன்னார்.
அவர்கள் தயங்கினர். ஆனால் கடல் சீற்றம் அதிகரித்துக் கொண்டே வந்தது. எனவே வேறு வழியின்றி யோனாவைத் தூக்கிக் கடலில் எறிந்தனர்.
மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல கடல் சட்டென அமைதியானது.
கடலில் விழுந்த யோனா மூழ்கினார். மூழ்கிக் கொண்டிருந்த அவரை ஒரு மீன் வந்து முழுதாய் விழுங்கியது !
யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தார். பாதுகாப்பாக !
மீனின் வயிற்றிலிருந்து யோனா கடவுளை நோக்கி மன்றாடினார். கடவுள் மீனுக்குக் கட்டளையிட யோனாவை அது கரையில் கக்கியது,
கடவுளின் வாக்கு மீண்டும் யோனாவுக்குக் கொடுக்கப்பட்டது.
இப்போது யோனா தயங்கவில்லை. நினிவே நகருக்குள் நுழைந்தார். இன்னும் நாற்பது நாட்களில் நினிவே நகர் அழிக்கப்படும் எனும் கடவுளின் வார்த்தையை உரைத்தார்.
மக்கள் அதிர்ந்தனர். எல்லோரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டு நோன்பிருக்கத் துவங்கினர். விஷயம் மன்னனின் காதுகளுக்கும் சென்றது.
அவனும் உடனே அரசவை விட்டிறங்கி சாக்கு உடுத்தி சாம்பலில் உட்கார்ந்தார். மக்கள் யாவரும் சாக்கு உடுத்தி சாம்பலில் அமர கட்டளையும் இட்டார்.
மக்கள் சட்டென மனம் மாறியதைக் கண்ட இரக்கத்தின் கடவுள் மனமிரங்கினார். அந்த நாட்டுக்குச் செய்ய இருந்த தண்டனையை விலக்கினார்.
யோனாவோ கடும் கோபமடைந்தார்.
‘கடவுளே, நீர் இப்படிச் செய்வது சரியல்ல, இனி நான் வாழ்வதை விட சாவதே மேல்’ என்றார்.
‘யோனாவே நீ கோபப்படுவது நியாயமா ?” என்று கேட்டார் கடவுள்.
யோனா கோபத்தோடு நாட்டை விட்டு வெளியேறி நகருக்கு வெளியே ஒரு பந்தல் அமைத்து நகருக்கு என்ன நேரும் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே ஒரு சின்ன ஆமணக்கு விதை முளைத்து ஒரே இரவில் வேகமாய் வளர்ந்து அவருக்கு நிழல் கொடுக்கும் செடியானது.
யோனா அந்த நிழலில் இருந்தார். மறு நாள் ஒரு புழு வந்து அந்தச் செடியை அரிக்க செடி அழிந்தது.
யோனா கலங்கினார். ‘கடவுளே எனக்கு சாவு வரட்டும் என வேண்டினார்’
‘ஒரு ஆமணக்குச் செடிக்காக நீ இவ்வளவு கலங்குவது முறையா ?” கடவுள் கேட்டார்.
‘ஆம். முறைதான்.’
‘தானாகவே ஒரு இரவில் முளைத்து மறு இரவில் அழிந்த செடிக்காக இவ்வளவு வருந்துகிறாயே. இந்த நினிவே நகரில் இருக்கும் இலட்சக்கணக்கான நான் மனமிரங்காமல் இருப்பேனா ?” கடவுள் கேட்க யோனா மனம் தெளிந்தார்.
கடவுளின் அளவற்ற அன்பையும், இரக்கத்தையும் உலகிற்கு வியப்புடன் சொல்கிறது யோனாவின் வாழ்க்கை.