சிறுமைப்பட்டவர்களை நினைத்திருக்கிறார்!


"நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ  என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும், என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே,  தாமதியாதேயும்" (சங். 40:17).

"நினைப்பது வேறு, நினைவாயிருப்பது வேறு." நினைப்பது என்பது, எப்போதாவது ஒரு முறை ஞாபகத்துக்கு வரும்போது, அவர்களைக் குறித்து எண்ணுவது. ஆனால் நினைவாயிருப்பது என்பது, தொடர்ச்சியாய், இடைவிடாமல் நினைத்துக்கொண்டே, சிந்தித்துக்கொண்டே இருப்பதாகும்.

ஒரு இலங்கை சகோதரன், ஒருமுறை என்னிடம் அழுதுகொண்டு வந்து, "ஐயா, எனக்கு திருமணமாகி, ஆறு மாதங்களுக்குள்ளாக, மனைவியை பிரிந்து, வெளி தேசத்திற்கு ஓடிவந்தேன். தற்போது நான்கு வருடங்களாகிவிட்டன. எனக்குப் பிறந்த மகனையும் பார்க்கவில்லை. என் மனைவியையும் பார்க்கவில்லை. தற்போது, அந்த பகுதியிலே, இராணுவம் புகுந்துவிட்டது. என் மனைவி, குழந்தை என்ன ஆனார்களோ? அதே நினைவாகவே இருக்கிறேன்" என்றார். 

பால் கொடுக்கும் தாய், தன் பிள்ளையின் நினைவாகவேயிருப்பாள். பிள்ளை கொஞ்சம் அழுதாலும், துடித்துப்போய்விடுவாள். ஏதாவது பூச்சிக் கடித்ததோ, என் பிள்ளை கீழே விழுந்து விட்டதோ என்று, தவியாய் தவிப்பாள். கர்த்தரும் அப்படித்தான். உங்கள்மேல் நினைவாயிருக்கிறார். நீங்கள் ஏழையாயிருக்கலாம். படிப்பறிவில்லாதவர்களாயிருக்கலாம். கர்த்தர் எப்பொழுதும் உங்கள்மேல் நினைவாயிருக்கும்படி, அன்பின் சின்னமாக நம்மை, தனது உள்ளங்கையில் வனைந்து கொள்ள தீர்மானித்தார். அதற்காக சிலுவையிலே, தன் கைகளை தியாக மாய் நீட்டிக்கொடுத்தார். "என் பிள்ளையே பார், உன்னை நான் மறப்பேனோ? என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்" என்று சொல்லுகிறார்.

பழங்காலத்திலே, நண்பர்கள் ஒருவரையொருவர் மறந்துவிடக்கூடாது என்பதற்காக, இரண்டுபேரும் கைகளை கீறிக்கொண்டு, இரத்தத்தை ஒன்றாக கலக்கச் செய்து, தழும்புகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். அந்த தழும்புகளைப் பார்க்கும் போதெல்லாம், நண்பரை நினைவுகூர்ந்து, உதவி செய்வார்கள்.

கர்த்தர் என்னை மறந்துவிட்டாரோ, எனக்கு காட்சியோ, தரிசனமோ கிடைக்க வில்லையே என்று எண்ணின அப். தோமா சொன்னார், "அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலை யிட்டு,  என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன் என்றார்" (யோவா. 20:25). கர்த்தர் தோமாவை மறக்கவில்லை. "நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப்பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு" என்றார் (யோவா. 20:27).

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய கரங்களே உங்களை வனைந்து உருவாக்கியது. அவருடைய கரத்திலிருந்து உங்களை யாரும் பறித்துவிட முடியாது. எந்த மந்திரவாதி அவருக்கு எதிர்நிற்க முடியும்? "நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக் கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை" (யோவா. 10:28).

என்னுடைய வாழ்க்கையில் பல சிறுமைகள் வந்தன. சிறிய மளிகைக்கடை யிலே வேலை செய்தேன். வாலிபத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வந்தபோது, அநியாயமாய் சிறையில் தள்ளப்பட்டேன். கர்த்தர் என் சிறுமையைக் கண்டு, வருமான வரி இலாகாவில் ஒரு நல்ல வேலையைக் கொடுத்து மேன்மைப் படுத்தினார். உங்களுக்கும் அற்புதம் செய்வார்.

நினைவிற்கு:- "சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்" (சங். 41:1).

சகோ. J. சாம் ஜெபத்துரை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.