பழைய ஏற்பாட்டில் வருகின்ற சின்ன தீர்க்கத்தரிசிகள் பன்னிரண்டு பேர். அவர்களில் ஒருவர் செப்பனியா.
பெரும்பாலான இறைவாக்கினர் மூலமாகக் கடவுள் பேசிய விஷயம் ஒன்று தான். “தீமை செய்யும் வழியை விட்டு விலகி என் பக்கம் வாருங்கள்” என்பதே அது.
இறை வார்த்தைகள் எழுத்து வடிவில் இல்லாத அந்த காலகட்டத்தில் இறைவாக்கினர்களின் மூலமாக இறைவன் பேசியவை அவை.
செப்பனியா இறைவாக்கினரின் வாழ்க்கையும், தீர்க்கத்தரிசனமும் கூட அதை அடியொற்றியே இருக்கிறது.
கிமு ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவர் இறைவாக்கு உரைத்தார். எசேக்கியாவின் கொள்ளுப்பேரன், அமரியாவின் பேரன், கெதலியாவின் மகன் என இவரைப் பற்றிய வம்ச வரலாறு குறிப்பிடப்படுகிறது.
“கடவுளின் பிரியத்துக்குரிய யூதா நாடு வேற்று தெய்வங்களை வழிபட்டுக் கொண்டிருக்கிறது. எனவே அழிவு நிச்சயம். ஆனாலும் யூதாவின் தலைநகரான எருசலேம் மீண்டும் தனது பழைய உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படும்.
இறையச்சம் கொண்ட மக்கள் அங்கே மீண்டும் வாழ்வார்கள்” என்பது செப்பனியாவின் இறைவாக்கு நூலின் சாரம்சமாகும்.
“கடவுள் கோபம் கொள்ளும் நாளில் ஒரே வினாடியில் அவர் உலகை அழித்து விடுவார். கடவுள் நல்லதும் செய்ய மாட்டார், தீமையும் செய்ய மாட்டார் என நினைத்து பஞ்சணையில் படுத்திருப்பவர்கள் அழிவார்கள்.
வேற்று தெய்வங்களைத் தொழுபவர்கள் வெட்டி வீழ்த்தப்படுவார்கள். மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள், பறவைகள் கூட அழிக்கப்படும். அந்த நாளில் மீன் கூட கூக்குரலிட்டு அழும். அந்த நாள் தான் ஆண்டவரின் நாள்.
சினத்தின் நாள்” என்றார் செப்பனியா.
கடவுளின் கோபத்தைப் பற்றிப் பேசி அதன் மூலம் மக்கள் தங்கள் பாவத்தை உணரச் செய்யும் பணியை செப்பனியா செய்தார்.
கடவுளின் சினத்தில் சிக்கிக் கொண்டால் எரிமலை மூடிய எறும்பைப் போல அழிவது உறுதி. எனவே தான் அந்த கோபம் வந்து சந்திக்கும் முன்பே மனம் திரும்ப அவர் அழைப்பு விடுக்கிறார்.
“பதரைப் போல நீங்கள் தூற்றப்படும் முன் மனம் திரும்புங்கள்” என மக்களைப் பார்த்து இறைவாக்கு உரைக்கிறார்.
இஸ்ரயேல் மக்களை கடவுள் எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மோசே மூலமாக மீட்டுக் கொண்டு வந்தார்.
எகிப்தியர்களின் படைகளை அழித்து மக்களைக் காத்தார். நாற்பது ஆண்டுகள் அவர்களுடைய பயணத்திலும் கூடவே இருந்து பாதுகாத்தார்.
ஆனாலும் மக்கள் அவரை விட்டு விலகினார்கள்.
கலகம் செய்து, தீட்டுக்குள்ளாகி, மக்களை ஒடுக்கிய அந்த நகரை செப்பனியா எச்சரித்தார்.
கர்ஜனை செய்யும் சிங்கங்களைப் போல நகரத்தின் தலைவர்கள் இருக்கிறார்கள். மாலையில் கிடைப்பதை காலை வரை வைத்திராத ஓநாய்களாய் அந்த நாட்டின் நீதிபதிகள் இருக்கிறார்கள்.
வீண்பெருமை பேசும் வஞ்சகம் மிக்க மனிதர்களே அந்த நாட்டின் இறைவாக்கினர்கள்.
புனிதமானதைக் களங்கப்படுத்தி திருச்சட்டத்தை உதறித் தள்ளும் மனிதர்களே அந்த நாட்டின் குருக்கள்.
என யூதாவின் நிலையை செப்பனியா கடிந்துரைத்தார்.
தலைவர் முதல் சாதாரண மனிதர்கள் வரை இறைவனை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று விட்டார்கள் என்பதையே அவருடைய இறைவாக்கு வெளிப்படுத்தியது.
ஆண்டவரோ நீதியுள்ளவர், கொடுமை செய்யாதவர், காலை தோறும் அவர் தீர்ப்பை வழங்குபவர் என இறைவனைக் குறித்து செப்பனியா உரைக்கிறார்.
கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அவருடைய பாதையில் நடக்கும் போது அவர் தண்டனை மனதை மாற்றி விடுகிறார்.
பின்னர் துயரம் ஆனந்தமாய் மாறிவிடும்.
“சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு;
இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்;
எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு”
என செப்பனியா இஸ்ரயேலரை ஊக்கப்படுத்தும் மகிழ்ச்சிப் பாடலைக் கடைசியாகப் பாடுகிறார்.
“இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்;
நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.
உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்;
அவர் மாவீரர்;
மீட்பு அளிப்பவர்;
உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்;
தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்;
உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.
அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்” என்கிறது அந்த மகிழ்வின் பாடல்.
செப்பனியா யூதா தேசத்தில் இறைவாக்கு உரைத்தாலும் மற்ற இறைவாக்கினர்களைப் போலவே இவரது வார்த்தைகள் காலம் கடந்து நமக்கு இறைவனின் எண்ணத்தைப் போதிக்கின்றன.
1.மனத்தாழ்மையோடு கடவுளின் வழியைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.
2.கடவுள் தீமையை வெறுப்பவர், ஆனால் மக்கள் மனம் திரும்பும் போது தனது கடும் கோபத்தைக் கூட சட்டென மாற்றி அகம் மகிழ்பவர்.
3.கடவுள் தனது மக்கள் வேறு தெய்வங்களை வழிபடுவதை ஒரு போதும் அனுமதிப்பதில்லை.
இந்த மூன்று சிந்தனைகளையும் மனதில் இருத்துவோம்.
செப்பனியாவின் இறை வார்த்தைகள் நமது வாழ்க்கையைச் செப்பனிடட்டும்.