எரேமியா 20:13

கர்த்தரைப் பாடுங்கள், கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார். - எரேமியா 20:13

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, எரேமியா இந்த வசனத்தில் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் கர்த்தரைப் பாடி துதித்து, அவர் நமக்குப் பாதுகாப்பாய், அடைக்கலமாய் இருந்ததற்காக அவரை மகிமைப்படுத்தவேண்டும் என்று சொல்லுகிறார்.

ஆம் எனக்கன்பானவர்களே, ஒவ்வொரு நாளும் நம்முடைய ஆத்துமாவை பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறாரே, உள்ளத்தின் ஆழத்திலிருந்து கர்த்தருக்கு நன்றி சொல்வோமா? சங். 34:6ம் வசனத்தில் இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் அதைக்கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார் என்று தாவீது சொல்லுகிறார். எத்தனை உண்மை பிரியமானவர்களே. சங்.35:9-11 வரை உள்ள வசனங்களில் தாவீது சொல்லும்போது என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து. அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும். கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள் என்று சொல்லுகிறார். அவருடைய எலும்புகள்கூட கர்த்தரை துதிக்கிறதாம்.

பிரியமானவர்களே, நாம்கூட கர்த்தரை துதிப்போம். சங். 69:33ம் வசனத்தில் கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார். கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார் என்று வாசிக்கிறோம். சங்.72:4ம் வசனத்தில் ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவர்களை அவர் நொறுக்குவார் என்று வாசிக்கிறோம்.

பிரியமானவர்களே, இந்த வார்த்தைகளையெல்லாம் நாம் வாசிக்கும்போது, நம்முடைய தேவனாகிய கர்த்தர் தப்புவிக்கிறவராய், நியாயம் செய்கிறவராய், அற்புத அதிசயங்களைச் செய்கிறவராய் இருக்கிறபடியினால் நாம் அவரை முழு உள்ளத்தோடு ஸ்தோத்தரிக்க கர்த்தர் வழிநடத்த நம்மை அர்ப்பணிப்போம். சங்.109:30-31 வசனங்களில் கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவில் அவரைப் புகழுவேன். எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலது பாரிசத்தில் நிற்பார் என்ற வார்த்தையின்படி கர்த்தரை ஸ்தோத்தரிப்போம், துதிப்போம், மகிமைப்படுத்துபோம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களோடிருப்பாராக, உங்களை நடத்துவாராக.                

சகோதரி.மேரி அக்ஸிலியா,
கர்த்தருடைய வார்த்தையின் ஆசீர்வாத ஊழியங்கள்,
விழுப்புரம், தென்இந்தியா.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.