"அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும், தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்தார்" (லூக். 24:42,43).
இயேசு கிறிஸ்து தமக்கென்று சீஷர்களை தெரிந்துகொண்டபோது, சீஷர்கள் அதை அன்போடு ஏற்றுக்கொண்டார்கள். அவரை மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள். சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்து, சகோதரனைப்போலவும், சிநேகிதரைப்போலவும் இருந்தார். இயேசு அவர்களை ஊழியத்திலே நன்றாக பழக்கினார். அவர்களுக்கு அபிஷேகத்தையும், வல்லமையையும் கொடுத்தார். பிசாசு களைத் துரத்தும்படி, வியாதியஸ்தரை குணமாக்கும்படி, உற்சாகப்படுத்தினார்.
சிலுவையிலே தொங்குகிற நேரம் வந்தது. அநேகர் அவரை விட்டு ஓடிப் போனார்கள். ஆனால் அன்பின் சீஷனான யோவானோ, கடைசிவரை கிறிஸ்துவைப் பின்பற்றினார். மரணத்துக்குப் பயப்படவில்லை. ஆகவே சிலுவையிலே இயேசு தொங்கும்போது, தன்னுடைய அன்பின் சீஷனாகிய யோவானிடம் தாயின் பொறுப்பை ஒப்புவித்தார். தன்னை பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கின மரியாளையும் மறந்துவிடவில்லை. தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டியது மகனுடைய பொறுப்பு அல்லவா? "அதோ, உன் தாய். அதோ, உன் மகன்" என்று, கர்த்தர் பொறுப்புகளை ஒப்புக்கொடுத்தார்.
சிலுவையிலே அவரோடு தொங்கிக்கொண்டிருந்த ஒரு கள்ளனை, கனிவாக நினைத்தருளினார். அவன் பாவ மன்னிப்பைப் பெறாமல் மரிப்பானென்றால், தன்னுடைய நித்தியத்தை பாதாளத்திலும், அக்கினிக் கடலிலும்தான் செலவழிக்க வேண்டியதிருக்கும். அந்த கடைசி நிமிடத்தை பயன்படுத்தி, "உம்முடைய ராஜ்யத் தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்" என்று கண்ணீரோடு மன்றாடினான். கிறிஸ்துவின் அன்பும், மனதுருக்கமும், கிருபையும், அவனைச் சூழ்ந்துகொண்டன. "இன்றைக்கு நீ என்னோடு பரதீசிலிருப்பாய்" என்று வாக்களித்தார் (லூக். 23:43).
முன்பு பேதுரு, கிறிஸ்துவை மறுதலித்தது உண்மை. அவரை அறியேன் என்று சபித்து, சத்தியம் பண்ணினதும் உண்மை. அதுபோல, இயேசு உயிர்த்தெழுந்த பின்பு, பழையபடி மீன் பிடிக்கப்போகிறேன் என்று பின்மாற்றத்தோடு புறப்பட்டு மற்ற சீஷர்களையும் பின்மாற்றத்துக்கு செல்லும்படி வழிவகுத்ததும் உண்மை. ஆனாலும், கர்த்தர் பேதுருவை மறந்துவிடவில்லை.
இரவெல்லாம் பிரயாசித்தும், ஒரு மீனைக்கூட பிடிக்க முடியாத பேதுருவிடம், "வலதுபுறமாய் உன் வலையைப் போடு" என்று இயேசு சொன்னார். வலை முழுவதிலும் 153 பெரிய மீன்கள் நிறைந்திருந்தன. மட்டுமல்ல, மற்ற சீஷர்களோடு பேதுரு கரைக்கு வந்தபோது, இயேசு கரையிலே கரியடுப்பு போடப்பட்டிருந்ததைப் பார்த்தார். அங்கே அப்பமும், மீனும் சமைத்து வைக்கப்பட்டிருந்தன. துரோகியான தனக்காக ஒரு சமையல்காரனைப்போல இயேசு தன்னைத் தாழ்த்தி, கடற்கரையில் கரியடுப்பு போட்டு, உணவு சமைத்து, காத்திருந்த அவருடைய அன்பை, பேதுரு நினைவுகூர்ந்தார் (யோவா. 21:9).
இயேசு கிறிஸ்து, பரலோகத்துக்குப் போனபின்பு, பரலோகமே அவரது வருகையால் களிகூர்ந்திருக்கும். பிதாவின் வலதுபாரிசத்திற்கு சென்று, கெம்பீரமாய் அமர்ந்த இயேசு, சீஷர்களை மறந்துவிட்டாரா? இல்லை. அங்கிருந்து பரிசுத்த ஆவியைப்பெற்று, சீஷர்களுக்கு அனுப்பிக் கொடுத்தார் (அப். 2:1-4).
நினைவிற்கு:- "ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே" (ரோம. 8:34).
சகோ. J. சாம் ஜெபத்துரை