பேய்குணமும், தெய்வகுணமும் - men's dual characters

அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் எப்போழுதும் ஒரு மணிநேரம்
ஜெபத்தில் உட்காருவது என் வழக்கம். விடுமுறை நாட்களில் அதிக நேரம் ஜெபம்
பண்ணுவதுண்டு. ஒருநாள் அலுவலகம் விட்டு வந்ததும் அளவுக்கு அதிகமாக
களைப்பாயிருந்ததால் ஜெபம் பண்ணாமல் கொஞ்சம் நேரம் டிவிப்பார்க்கலாம்
என்று டிஸ்கரி சேனல் பார்க்க உட்கார்ந்துவிட்டேன்.

வழக்கமாக எனக்கு சீரியலோ, படமோ பார்க்கும் பழக்கம் கிடையாது,
இயேசுகிறிஸ்துவை அறிந்தபிறகு அதையெல்லாம் அடியோடு விட்டுவிட்டேன். சில
நேரம் உலக விஷயங்களை அறிவதற்க்காக நீயுஸ் மற்றும் டிஸ்கவரி
சேனல்களைப்பார்ப்பதுண்டு, அன்றும் அப்படியே டிஸ்கரி சேனல் பார்க்க
ஆரம்பித்து மூன்று மணிநேரம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

உள் மனது ஜெபம் பண்ண என்னை ஏவினாலும், கொஞ்ச நேரந்தான் கொஞ்ச நேரந்தான்
என்று எனக்கு நானே சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு டிவியை தொடர்ந்து
பார்த்துக்கொண்டிருந்தேன்.மூன்று மணிநேரம் கழிந்த பிறகுதான் உணர்ந்தேன்
நான் எவ்வளவு தவறு செய்துவிட்டேன் என்று.... என் இருதயத்தில் சமாதானமே
இல்லை, ஏதோ ஒரு வெறுமை காணப்பட்டது, தேவனுக்கு விரோதமான ஒரு குணம்
எனக்குள் காணப்பட்டது,மனது முழுவது ஒருவிதமான வெறுப்பும், சஞ்சலமும்
நிறைந்திருந்தது, சந்தோஷம் அறவே இல்லாமலிருந்தது.

மனிதனுடைய குணம் இயற்க்கையாகவே தேவனைவிட்டு விலகியே வாழவிரும்புகிறது,
அந்த குணம் தேவனை பகைக்கிறது, இருளான அந்த குணம் ஒளியினிடத்தில் வர
மறுக்கிறது. இந்த பூமியிலுள்ள எந்த பொருளையும் மேல்நோக்கி வீசினால் அது
எப்படி திரும்பவும் கீழ் நோக்கியே வருவது போலவே,இயேசுகிறிஸ்துவால் நாம்
பிரகாசிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் முத்திரை போடப்பட்ட பின்பும்கூட
நம்முடைய மனசும், மாம்சமும் இந்த உலகபிரகாரமான பொருளை நோக்கியே
ஈர்க்கப்படுகிறது, மேலானவைகளை தேடாமல் கீழானவைகளிலேயே அதிகம் நாடுகிறது.

*."ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள்
பொல்லாதவைகளாயிருக்கிற படியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை
விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது."

*.தேவன் நமக்கு ஏக இருதயத்தைத் தந்து, நம் உள்ளத்தில் புதிய ஆவியைக்
கொடுத்து, கல்லான இருதயத்தை நம் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு,
சதையான இருதயத்தை தந்திருக்கிறார்.

*."ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள்
இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை
அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர்
சொல்லுகிறார். "

*.ஆதலால் நம் ஆணடவர் இயேசுகிறிஸ்து இப்படியாக நம்மை எச்சரிக்கிறார் - "
ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன்
சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்."

Edited by Elango Gopal
(Mumbai)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.