சிலுவை மொழிகளும் உயிர்த்தெழுதல் தியானமும்

'தம்முடைய தாயை நோக்கி ஸ்திரியே அதோ உன் மகன் என்றார். அந்த சீஷனைநோக்கி
அதோ உன் தாய் என்றார்'
(யோ:19:26:27)

சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசு முதலாவது தன்னை
சிலுவையிலறைந்தவர்களுக்காக ஜெபித்தார். இரண்டாவது தன்னை நோக்கி ஜெபித்த
குற்றவாளிக்கு பரதீசை வாக்களித்தார். மூன்றாவது தன் தாய்க்கு பராமரிப்பை
ஏற்படுத்தி தன் குடும்பப் பொறுப்பை நிறைவேற்றினார். அன்று தன் சீடரைப்
பார்த்து உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. உங்களை திக்கற்நவர்களாக
விடேன் என்று கூறிய இயேசு தன் தாயையும் விட்டுவிடாமல் அவருக்கு அடைக்கலம்
கொடுத்து ஒரு புதிய குடும்ப உறவை ஏற்படுத்தினார். இயேசு மனித உறவுக்கும்
இறை உறவுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்தார். இதனை மூன்று குறிப்புகளில்
தியானிப்போம்.

குடும்ப பாசம் மிகுந்தவர் இயேசு

தேவ குமாரனாகிய கிறிஸ்து மனுமக்களை மீட்கும்படி உலகுக்குவந்தபோது ஒரு
குடும்பத்தில் ஒரு நபராகப் பிறந்து வளர்ந்து தன் பணியைச் செய்தார்.
ஆதியில் தேவன் உலகைப் படைத்தபோது மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று
கண்டபோது அவனை ஒரு குடும்பமாக அமைத்தார். பாவம் செய்த மனுக்குலத்தை
மீட்கும்படி தேவன் தனது குமாரனை அனுப்பின வேளையிலும் தான் உருவாக்கிய
குடும்பத்தில் ஒரு நபராகப் பிறந்து வரும்படிச் செய்தார். இயேசு தான்
பிறந்த குடும்பத்தில் குடும்பபாசம் மிகுந்தவராக வாழ்ந்தார். அவர் தன்
உலகப் பெற்றோர்களாகிய யோசேப்பு, மரியாள் என்பவர்களுக்குக் கீழ்படிந்து
வாழ்ந்தார். அவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும்,
மனுஷர்தயவிலும் அதிகமதிகமாக விருத்தியடைந்தார். அவர் வாலிபனானபோது
தகப்பனின் தச்சு வேலையை அவர் செய்து குடும்பத்தைத் தாங்கினார். எனவே
மாற்கு 6:3-ல் இயேசுவின் பகைவர் இவன் தச்சனல்லவா என்றார்கள்.

இயேசு ஊழியம் செய்தபோதும் தன் குடும்பத்தைத் துறந்து துறவியாக ஊழியம்
செய்யவில்லை. அவர் குடும்பத்தின் ஓரு நபராக இருந்து ஊழியம் செய்தார்.
எனவே இயேசுவின் பகைவர் அவருடைய ஞானத்தைக் கண்டபோது இவன் தச்சனல்லவா?
மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சிமியோன்
என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில்
இருக்கிறார்களல்லவா? என்று சொல்லி அவரைக் குறித்து
இடறலடைந்தார்கள்(மாற.6:3). இவ்வாறு இயேசு ஒரு குடும்பத்தில் பிறந்து
குடும்ப பாசம் உடையவராக வாழ்ந்து ஊழியம் செய்தார்.

குடும்ப பாசம் மிகுந்த இயேசு இப்போது சிலுவையில்
தொங்கிக்கொண்டிருக்கிறார். சிலுவையை சூழ திரளான மக்கள் நின்று இயேசுவைப்
பரிகாசம் செய்கிறார்கள். இயேசுவை நேசித்தவர்களும் அக்கூட்டத்தில் இங்கும்
அங்குமாக நின்று தங்கள் மார்பில் அடித்து புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இயேசுவின் தாயாகிய மரியாளும் அக்கூட்டத்தில் பட்ட மரம்போல் நிற்கிறாள்.
அவள் வாழ்க்கையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை. தன் கணவன் யோசேப்பு
மரித்துவிட்டார். குடும்பத்தைப் பராமரிக்கவேண்டிய மூத்த மகன் சிலுவையில்
தொங்குகிறார். அவள் கண்கலங்கி நிற்கிறாள்.

சிலுவையில் தொங்கும் இயேசு தன் வேதனையின் மத்தியிலும் தன் குடும்பப்
பொறுப்பை மறக்கவில்லை. சோகத்தோடு நிற்கும் தாயைக் கண்ட இயேசு ஸ்திரியே
என்று அழைத்து அதோ உன் மகன் என்று யோவானை சுட்டிக் காட்டினார். யோவானைப்
பார்த்து அதோ உன் தாய் என்று மரியாளை சுட்டிக்காட்டினார். அந்நேரம் முதல்
யோவான் மரியாளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். இப்படி மரண வேளையிலும்
இயேசு தன் குடும்பத்துக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்தார்.

பிள்ளைகள் பெற்றோரை பராமரிக்க வேண்டும். தங்கள் குடும்பங்களுக்குச்
செய்யவேண்டிய கடமைகளைச் செய்யவேண்டும். அனேக குடும்பங்கிளில் பிள்ளைகள்
தங்கள் பெற்றோர்களுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதினாலும் பெற்றோர்
வேதனைப்படுகிறார்கள். சில ஊழியக்காரர்கள் கூட பெற்றோரை பராமரிப்பதில்லை.
தகப்பனையாவது, தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப்
பாத்திரனல்ல என்று கூறிவிடுகிறார்கள். ஊழியம் செய்கிறவர்களும் தங்கள்
பெற்றோரை பராமரிக்க வேண்டும். உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக
என்பது கற்பனை. பிற்காலத்தில் 'கொர்பான்' என்ற காணிக்கையை ஆலயத்தில்
செலுத்தினால் அவர்கள் பெற்றோரை கவனிக்க வேண்டாம் என்ற ஒருநியமத்தை
ரபிமார்கள் ஏற்படுத்தினார்கள். இதனை இயேசு வன்மையாக கண்டித்தார். மாற்கு
7:1:10-13. நாம் குடும்ப பாசம் உடையவர்களாக குடும்பத்துக்குச்
செய்யவேண்டியவைகளை செய்யவேண்டும்,

கிறிஸ்துவின் மீட்பு எந்தப் பாவிக்கும் உண்டு

காலமெல்லாம் கொலை, கொள்ளை செய்து மரிக்கும்போது இயேசுவை நோக்கிப்பார்த்த
பாவியினுடைய பாவங்களை மன்னித்து அவனை ஏற்றுக்கொண்டதின் மூலம்
உலகத்திலுள்ள எந்த கொடிய பாதகனுக்கும் மீட்பு உண்டு என்ற உண்மையை ஆண்டவர்
விளக்கியிருக்கிறார். துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தில்
சாவதையல்ல, அவன் மனந்திரும்பி பிழைப்பதையே விரும்புகிறேன் என்றும்
துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தை விட்டு விலகி நியாயத்தையும்
நீதியையும் செய்வானேயாகில் அவன் தன் ஆத்துமாவை பிழைக்கப்பண்ணுவான்
என்றும் தேவன் கூறுகிறார். அவர் பாவத்தை வெறுத்தாலும் பாவிகளை
நேசிக்கிறார். பாவிகளை இரட்சிப்பதற்காகவே அவர் பரலோகம் விட்டு பூலோகம்
வந்தார். பாவிகளுக்காகவே சிலுவையில் தொங்கினார்.

சாத்தான் சிலுவைக் காட்சியை நம் கண்களுக்கு மறைத்து, நமது
பலவீனங்களையும், பாவங்களையும் நமக்கு காண்பித்து, மனம் சோர்புறச் செய்து
தேவனை விட்டு பின்மாறிப் போகச் செய்கிறான். இதன்மூலம் மீட்புப் பெற
முடியாமல் செய்துவிடுகிறான்.

ஈ. க. மூடியின் கூட்டத்தில் பங்கு பெற்ற ஒரு மனிதன் கூட்டம் முடிந்தபின்
ஈ. க.மூடியை தன் காரில் அழைத்துக் கொண்டு சென்றான். அவனது வீடு வந்ததும்
காரில் இருந்து இறங்கினார்கள். அந்த மனிதன் தன் துப்பாக்கியை எடுத்து ஈ.
க மூடியின் மார்புக்கு நேராக பிடித்து இப்போது நான் கேட்கும்
கேள்விகளுக்குப் பதில் கூறாவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்றான்.
பின்பு வீட்டுக் கதவை தட்டினான். ஒரு எலும்புருவம் நடுங்கிய கரங்களுடன்
கதவை திறந்தது. அந்த மனிதன் அந்த எலும்புருவத்தை சுட்டிக் காண்பித்து
இவள் என் மனைவி. இவளை நான் அடித்து துன்புறுத்தினதால் இவள் இப்படி
இருக்கிறாள். இந்த பாவியை இயேசு நேசிப்பாரா என்று கேட்டான். ஈ. க மூடி
இயேசு உன்னை நேசிக்கிறார் என்றார்.

பின்பு ஒரு அறையைத் திறந்தான். அந்த அறை முழுவதும் மதுபானங்களினால்
நிறைந்திருந்தது. இந்த குடிகாரனாகிய என்னை இயேசு நேசிப்பாரா என்று
கேட்டான். ஆம் இயேசு உன்னை நேசிக்கிறார் எனறார் ஈ. க மூடி.

ஈ. க மூடியை மறுபடியும் வேறொரு அறைக்கு அழைத்து சென்றான். அந்த அறை
முழுவதும் மனித எலும்புக்கூடுகள் நிறைந்து கிடந்தன. இவைகள் நான்
கொலைசெய்த மனிதர்களுடைய எலும்புகள். இந்த கொலைகாரனை இயேசு நேசிப்பாரா
என்று கேட்டான். இயேசு உன்னை நேசிக்கிறார் என்றார் ஈ. க மூடி. அந்த
மனிதனுடைய கைய்யிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்தது. அவன் தேம்பித்
தேம்பி அழுதான். ஈ. க மூடியின் கால்களில் விழுந்தான். தன் பாவங்களை
தேவனிடம் அறிக்கை செய்தான். ஈ. க மூடி அவனுக்காக ஜெபித்தார். தேவன் அவன்
பாவங்களை மன்னித்தார். அவன் தேவ பிள்ளையானான். எந்தப் பாவியையும்
இரட்சிக்க இயேசு
ஆயத்தமாயிருக்கிறார்.

மீட்கப்பட்ட பாவியின் சிலாக்கியம்
இயேசுவை ஏற்றுக்கொண்ட இந்தக் குற்றவாளிக்கு கிடைத்த பாக்கியம் என்ன?
இன்றைக்கு என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்றார். இயேசுவோடுகூட
இருக்கும் பாக்கியம் அளிக்கப்பட்டது. இந்த சிலாக்கியம் 'இன்றைக்கே'
அதாவது உடனடியாகவே அளிக்கப்படுகிறது. நாளை அல்ல, சில நாட்கள் கழித்து
அல்ல. இன்றைக்கே அளிக்கப்படுகிறது.

பரதீசு என்ற வார்த்தை புதியஏற்பாட்டில் 3 இடங்களில் வருகிறது.

1. இயேசு குற்றவாளிக்கு வாக்களித்த இடம்
2. பவுல் மூன்றாம் வானம் வரை எடுத்துக்கொள்ளப்பட்டு பரதீசில் பிரவேசித்த
தாகக் கூறப்படுகிறது(2 கொரி 12:3) 3. ஜெயங்கொள்ளுகிறவனுக்கு தேவனுடைய
பரதீசின் மத்தியிலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியை புசிக்கக்கொடுப்பேன் என்று
ஆவியானவர் கூறுகிறார்(வெளி 2:7).

பரதீசு என்பது கிறிஸ்துவை தரிசிக்கும் இடம் என்று கூறலாம். சாது
சுந்தர்சிங் கூறும்போது கிறிஸ்துவோடுகூட வாழும் சிலாக்கியத்தை விட மேலான
பாக்கியம் வேறில்லை. அந்த பாக்கியத்தை இவன் பெற்றான். நாமும் இயேசுவை
ஏற்றுக்கொள்ளும்போது இந்த உலகத்திலேயே அவரோடு வாழும் பாக்கியத்தைப்
பெற்றுக்கொள்ளுகிறோம்.

சிலுவையில் நமது மீட்புக்காகத் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசுவை
விசுவாசித்து மீட்புப்பெற்று வாழ்வோமாக.

அப்பொழுது இயேசு பிதாவே இவர்களுக்கு மன்னிப்யும், தாங்கள் செய்கிறது
இன்னதென்று அறியாதிருங்கள் என்றார்
(லூக் 23:34)

சிலுவைமரணம் மிகக் கொடியது. சிலுவையில் அறையப்படும் மனிதன் உடனடி
மரிப்பதில்லை. பல நாட்கள் சிலுவையில் தொங்கி தாங்கமுடியாத வேதனைகளை
அனுபவித்து மரிப்பான். மேலும் சிலுவையில் தொங்கும் மனிதன் வேதனை தாங்க
முடியாமல், சிலுவையில் அறைந்தவர்களை சபிப்பான். வேதனை தாங்க முடியாமல்
சப்தமிடுவான். ஆனால் இயேசு, சிலுவையில் மிக அமைதியாக தொங்கினார்.
அருமையான ஏழு பொன்மொழிகளை மொழிந்தார். அதில் முதல் மொழி பிதாவே
இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருங்கள்
என்பது.

இது ஒரு ஜெபம்
சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசு பிதாவை நோக்கி ஜெபிக்கிறார்.
இயேசுவின் வாழ்வில் ஜெபம் மிக முக்கியமானதாக இருந்தது. தன் ஊழியத்தை
ஆரம்பிக்கும் முன் நாற்பது நாட்கள் உபவாசமிருந்து ஜெபித்தார். ஊழிய
காலத்தில் அதிகாலை இருட்டோடே எழுந்து ஜெபிக்கும் படியாகச் சென்றார்.
தனித்தும், சீடருடனும் சேர்ந்தும் ஜெபித்தார். கெத்சமனே தோட்டத்தில்
இரத்தத்தின் பெரும் துளிகள் வியர்வையாக விழும் அளவு ஜெபித்தார்.
சிலுவையில் தொங்கும் போதும் வேதனைகள், நிபந்தனைகள் மத்தியிலும்
ஜெபித்தார்.

இயேசுவின் இந்த ஜெபம் நமக்கு ஒரு சவால். நாம் மகிழ்ச்சியாக
இருக்கும்போதும், எல்லாம் ஆசீர்வாதமாக நடைபெறும் போதும் தேவனைத்
துதித்து, ஸ்தோத்தரித்து மகிமைப்படுத்துகிறோம். ஆனால் பாடுகளும்,
ஏமாற்றங்களும் வரும்போது ஜெபம் பறந்து போகிறது. தேவனுக்கு விரோதமாக
உதடுகள்
முறுமுறுக்கிக்கின்றன.

நமது பாடுகள், வேதனைகள் மத்தியிலும் சோர்ந்து போகாமல் ஜெபிக்கவேண்டும்.
ஏசா 400 பேருடன் வருகிறார் என்று அறிந்த யாக்கோபு தேவனிடத்தில் போராடி
ஜெபித்தான், வெற்றிபெற்றான். தேவாசீர்வாதம் பெற்றான். பவுலும் சீலாவும்
அடித்து நொறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள், பாடுகள்
மத்தியிலும் தேவனை துதித்துப் பாடி மகிமைப்படுத்தினார்கள், இதனமூலம்
விடுதலை பெற்றார்கள். சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன.
சிறைச்சாலைக்காரனும் அவன் குடும்பமும் இரட்சிக்கப்பட்டார்கள். தேவநாமம்
மகிமைப்பட்டது.
இயேசு பிதாவை நோக்கி ஜெபித்தார்
இயேசுவுக்கும் பிதாவுக்கும் உரிய உறவு பிரிக்கமுடியாத ஒரு உறவாகும்.
இயேசு திருமுழுக்கு பெற்றவேளையில் பிதா இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில்
பிரியமாயிருக்கிறேன். (மத் 31:17) என்றார். மறுரூப மலையில் இருக்கும்போது
பிதா, இவர் என்னுடைய நேசகுமாரன் இவருக்குச் செவிகொடுங்கள்(மாற் 9:7)
என்றார். கெத்சமனே தோட்டத்தில் இயேசு பிதாவிடம் ஜெபிக்கும்போது பதாவே
உமக்குச் சித்தமானால் இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்குபடிச் செய்யும்.
ஆகிலும் என்னுடைய சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின் படியே
ஆகக்கூடாது என்று ஜெபித்தார். குமாரன் ஜெபித்துவிட்டார் என்று பிதா
சிலுவையை அகற்றவில்லை. பதிலாக ஒரு தூதனை அனுப்பி பலப்படுத்தினார்.

சிலுவையில் தொங்கும் இயேசு, பிதா தன் ஜெபத்தைக் கேட்டு சிலுவையை
அகற்றவில்லையே என்று கோபப்படவில்லை. முறுமுறுக்கவில்லை. ஜெபிப்பதை
நிறுத்தவில்லை. சிலுவையில் இருக்கும்போதும் பிதாவுடன் உள்ள உறவில் எந்த
பாதிப்பும் இல்லாமல் பிதாவுடன் உறவாடுகிறாôர். பிதாவுடன் ஜெபிக்கிறார்.
நாமும், இன்ப வேளையிலும், துன்ப வேளையிலும் ஜெபிக்கவேண்டும். ஜெபத்தில்
கேட்டது கிடைக்காமல் இருந்தாலும் தேவனோடு ஐக்கியமாயிருக்க வேண்டும்.

இயேசு பகைவர்களுக்கு ஜெபித்தார்

இயேசு தன்னைச் சிலுவையில் அûற்தவர்களுக்காக ஜெபிக்கிறார். அவர்களை
மன்னிக்கும்படி ஜெபிக்கிறார். உங்கள் சத்துருக்களில் அன்பு வையுங்கள்.
உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். இப்படிச்
செய்வதால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகள்
சத்துருக்களை நேசிக்கவேண்டும். தங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக
ஜெபிக்கவேண்டும். இயேசு இதைத் தன் வாழ்க்கையில் காண்பித்தார்.

அறியாமையை மன்னிக்கும்படி ஜெபித்தார்
பிதாவே இவர்களை நீர் மன்னிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் என்ன
செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது என்கிறார். இயேசு பகைவரின்
அறியாமையை மன்னிக்குப்படி ஜெபிக்கிறார்.

அறியாமை என்றால் என்ன? ஒரு விஷயத்தைக் குறித்து முழுமையான மனத்தெளிவு
இல்லாமையே அறியாமை. யூத மதத் தலைவர்கள் வேத சத்தியங்களை
படித்திருந்தார்கள். ஆனால் அதில் முழு மனத்தெளிவு பெறாதிருந்தார்கள்.
எனவே மேசியா வந்தபோது அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. யூதர்கள்
இயேசுவை சிலுவையில் அறைவதற்குக் காரணம் அறியாமை. இயேசு மேசியா, ஜீவாதிபதி
என்பதை அறியாததினாலேயே சிலுûவியில் அறைந்தார்கள். இயேசுவை சிலுவையில்
அறைவதினால் தங்கள் சந்ததிக்கு வரப்போகும் மாபெரும் அழிவையும்
அறியாதவர்களாக இருந்தார்கள். எனவே இயேசு அவர்களுடைய அறியாமையை
மன்னிக்கும்படி ஜெபிக்கிறார்.

அறியாமை மிகப்பெரிய பாவம். ஆண்டவரே அறியாமையாகிய பாவத்திலிருந்து என்னை
விடுதலையாக்கும் என்று ஜெபிக்க வேண்டும். தேவனிடம் ஞானத்தைக் கேட்டுப்
ஜெபிக்க வேண்டும். தேவஞானம் இருக்கும்போதே தெய்வீக காரியங்களை
புரிந்துகொள்ள முடியும் தேவனிடம் ஞானத்தைக் கேட்டுப்
பெற்றுக்கொள்வோம்.

இயேசு தாமகவே மன்னித்தார்
இயேசவின் பகைவர் தங்களை மன்னிக்கும்படி இயேசுவிடம் கேட்கவில்லை என்றாலும்
பகைவர் மேலுள்ள அன்பினால் தாமகவே அவர்களை மன்னித்தார். அவர்களை
மன்னிக்கும்படி பிதாவிடம் ஜெபித்தார். இயேசுவின் ஜெபம் கேட்கப்பட்டது.
இல்லாவிட்டால் பூமி தன் வாயைப் பிளந்து அவர்களை விழுங்கியிருக்கும்.
இயேசு மரித்த போதும் பல காரியங்கள் நடைபெற்றன. ஆனால் மூன்றாம் மணி நேரம்
முதல் ஒன்பதாம் மணி நேரம்வரை பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைசிசீலை இரண்டாகக் கிழிந்தது, பூமி
அதிர்ந்தது, கன்மலைகள் பிளந்தன. கல்லறைகள் திறவுண்டு நித்திரையடைந்த
பரிசுத்தவான்கள் எழுந்தார்கள் என்று காண்கிறோம். இப்படிப்படிட்ட
நிகழ்ச்சிகள் மத்தியில் இயேசு பகைவர்களுக்காக ஜெபியாமல் இருந்திருந்தால்
அவர்களும் அழிக்கப்பட்டுப் போயிருப்பார்கள்.

மன்னிப்பு என்பது மன்னிப்பு கேட்பவர்களுக்கு மாத்தரமே. என்னிடம்
மன்னிப்புக் கேட்டால் மன்னிப்பேன். இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று
கூறுவோருக்கு இது ஒரு பாடம். நம் பகைவரை நேசிப்போமானால் அவர்கள்
மன்னிப்பு கேளாமல் இருந்தாலும் நம்மால் அவர்களை மன்னிக்க முடியும்.
நாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பாவங்களைச் செய்கிறோம். செய்கிற
பாவங்களுக்கு உடனுக்குடன் நாம் மன்னிப்பு கேட்டதில்லை என்றாலும் தேவன்
நம்மை மன்னித்துக்கொண்டே இருக்கிறார். எனவேதான் நாம் உடனுக்குடன் தண்டனை
பெறாமலிருக்கிறோம். எனவே கிறிஸ்து நமக்கு மன்னிக்கிறதுபோல நாமும் பிறரை
மன்னிக்கவேண்டும். எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் என்று
ஜெபிக்கும்படி இயேசு கற்றுத்தந்திருக்கிறார். எனவே கிறிஸ்தவவர்களாகிய
நாம் மன்னிக்கும்படி பண்புடையவர்களாக வாழ வேண்டும்.

சிலுவையில் இருந்து இயேசு ஜெபித்த இந்த ஜெபம் மிக முக்கியமானது. இந்த
ஜெபத்தின்மூலம் சிலுவையில் தொங்கிய ஒரு குற்றவாளி மனம் திரும்பினான்.
சிலுவை மரணத்தை மேற்பார்வை செய்த நூற்றுக்கதிபதி மனம் திரும்பினான்.
இரத்தசாட்சிகள் மரிக்கும்போது தங்களை துன்புறுத்தியோரை மன்னிக்கும் பண்பை
பெற்றுக்கொண்டாரஙகள். பகைவரையும் மன்னிக்கும் தேவ பண்பு உலகில்
உருவாயிற்று.

'கபால ஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொழுது அங்கே
அவரையும் அவருடைய வலது பக்கததில் ஒரு குற்றவாளியையும் அவருடைய இடது
பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவையில் அறைந்நதார்கள்'
லூக் 23:33

கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட கொல்கதா மேட்டில் 3 சிலுவைகளைப்
பார்க்கிறோம். மூன்று சிலுவைகளிலும் மூன்று பேர் தொங்கிக்
கொண்டிருக்கிறார்கள். சிலுவை என்பது ரோமர் பயன்படுத்திய
தொலைக்கருவி. நமது நாட்டில் தூக்கு மரம் பயன்படுத்துவது போல் ரோமர்கள்
சிலுவை மரத்தை பயன்படுத்தினார்கள். யூதர்கள் தொலைத்தணடனை பெற்றவர்களை கல்
எறிந்து கொல்வார்கள். சிலுவை மரணம் மிகவும் கொடியதாகும். சிலுவையில்
அறையப்பட்டவர்கள் பல நாட்கள் சிலுவையில் வேதனையோடு தொங்கி மரிப்பார்கள்.

கொல்கொதா மேட்டில் மூன்று சிலுவைகளில் தொங்கிக் கொண்டிருப்போர் பாடுகள்
மத்தியில் தொங்கிகொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று பேருடைய குணாதிசயங்கள்
மூலம் இந்த மூன்று சிலுவைகளும் மூன்று மாபெரும் சத்தியங்களை உலகுக்கு
வெளிப்படுத்துகிறது.

1. மீட்பை வழங்கிய சிலுவை
2. மீட்பை புறக்கணித்த சிலுவை
3. மீட்பை ஏற்றுக்கொண்ட சிலுவை

இந்த மூன்று சிலுவைகளைக்குறித்து சிந்திப்போம்.

மீட்பை வழங்கிய சிலுவை

இயேசுவை நடுவிலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள் யோ; 19:18. மூன்று
சிலுவைகளில் நடு சிலுவையில் இயேசு தொங்குகிறார்.

இயேசு பாவமற்றவர், பரிசுத்தர். இயேசுவுக்கு மரண தண்டனை வழங்கிய பிலாத்து
இவர் நீதிமான் என்று தீர்ப்பு செய்தான். அவரை காட்டிக் கொடுத்த யூதாஸ்
குற்றமில்லாத இரத்தம் என்று கூறினான். சிலுவை மரணத்தை மேற்பார்வை செய்த
நூற்றுக்கதிபதி இவர் தேவகுமாரன் என்றான்.

நீதிமான் ஏன் சிலுவையில் அறையப்பட வேண்டும். குற்றமில்லாத இரத்தம் ஏன்
சிலுவையில் சிந்தப்பட வேண்டும். தேவகுமாரன் ஏன் சிலுவையில் தொங்க
வேண்டும். பாவிகளாகிய நம்மை மீட்பதற்காகவே இரு குற்றவாளிகளின் நடுவின்
அவர் தொங்கினார்.

இரத்தம் சிந்துதல் அல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பது சமயங்கள்
ஒப்புக்கொள்கிற உண்மை. ஏதேன் தோட்டத்தில் ஆதாம் , ஏவாள் பாவம் செய்த போது
ஒரு விலங்கு கொல்லப்பட்டது. அதன் தோலை எடுத்து தேவன் அவர்களை
உடுத்தினார். ஆதி 3.21 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும்
தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.

பழைய ஏற்பாடு காலத்தில் மனிதனுடைய பாவங்கள் விலங்கின் மேல் சுமத்தப்பட்டு
அது கொல்லப்பட்டது. இந்த பலிகள் எல்லாம் இரயேசுகிறிஸ்துவின் மரணத்திற்கு
முன் அடையாளமாக இருந்தன. இப்பொழுது தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு
அனைத்துலக மக்களின் பாவங்களையும் தன்மேல் ஏற்று நமக்கு பாவ மன்னிப்பை
அருளும்படி சிலுவையில் அடிக்கப்பட்டார். ஆகவே தான் நீதிமானாகிய இயேசுவை
பிலாத்துவினால் விடுவிக்க முடியவில்லை. ஏசாயா இதைக் குறித்து தெளிவாக
கூறுகிறார். ஏசாயா 53:4-6ல் அவர் நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர்
நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை
அவர்மேல்வந்தது. நாமெல்லாரும் ஆடுகளைப் போல் வழிதப்பித் திரிந்து
அவனவன்தன் தன் வழியிலே போகிறோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய
அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார் என்று கூறுகிறார்.

இயேசு கூறும் போது சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய அடையும்
படிக்கு உயர்த்தப்பட வேண்டும். என்றார். (யோ 3:14இ15) வனாந்திர
யாத்திரையில் கொள்ளிவாய் சர்ப்பம் கடித்தவர்கள் உயிர் பிழைக்கும் படி
மோசே வெண்கலத்தினால் ஒரு சர்ப்பத்தைச் செய்து கம்பத்தில் தூக்கி
வைத்தான். யார் யார் அதை நோக்கிப் பார்த்தார்களோ அவர்கள் உயிர்
பிழைத்தார்கள். அது போல் பாவ அடிமைத்தனத்தில் இருப்போர். சாத்தானின்
பிடியில் உயர்த்தப்பட வேண்டும் என்று இயேசு கூறினார்.

நம்மை இரட்சிக்கும்படியாக இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.
யார் யார் அவரை விசுவாசத்தோடு நோக்கிப் பார்க்கிறார்களோ அவர்கள்
இரட்சிக்கப்படுகிறார்கள். நடுசிலுவை இரட்சிப்பை வழங்கும் சிலுவையாக
இருக்கிறது. இன்றும் இரட்சிப்பை வழங்குகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.