பொதுவாக வெளிப்புறமாக தெரியும் நமது சரீர வளர்ச்சியின் மீது கவனம்
செலுத்து பலரும், உள்ளாக காணப்படும் ஆவிக்குரிய மனிதனின் வளர்ச்சியை
கண்டுக் கொள்வது இல்லை. இதனால் இரட்சிக்கப்பட்டு எவ்வளவோ ஆண்டுகள்
கடந்துவிட்டாலும், சிலருக்குள் எந்த விதமான மாற்றங்களையும் காண
முடிவதில்லை. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், பெரும்பாலான
கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய மனிதனுக்கு சீரான வளர்ச்சி இல்லை.
இதனால் தேவாலயத்திற்கு வந்து, தேவ செய்திகளை கேட்டு ஆவியில் எழுப்புதல்
அடைந்து செல்லும் பலருக்கும், ஒரு வாரம் முழுவதும் அந்த வளர்ச்சியை தக்க
வைத்து கொள்ள முடிவதில்லை. ஏனெனில் தேவாலயத்திற்கு வந்தால் மட்டுமே
தேவனோடு ஐக்கியப்பட முடிகிறது. இதற்கு ஆவிக்குரிய சுயசோதனையும்,
தேவனிடம்சமர்ப்பிக்கும் நிலையும் இல்லாததும் ஒரு காரணம் எனலாம்.
சிந்தித்தது:
இதை குறித்து கூறும் போது, நான் தான் தினமும் ஜெபிக்கிறேனே... என்று
பலரும் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் எப்படி ஜெபிக்கிறார்கள் என்பதை நாம்
ஆராய வேண்டியுள்ளது.
காலையில்...
அதிகாலையில் எழுந்து தேவ சமூகத்தில் ஜெபிக்கும் ஒரு மனிதனின் ஆவிக்குரிய
வளர்ச்சி வீழ்ச்சி அடைய வாய்ப்பு மிகவும் குறைவு. அதே நேரத்தில்,
அதிகாலையில் தேவ சமூகத்தில் நம்மையே சமர்ப்பித்து ஜெபிக்க வேண்டும்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பாவ உலகில், பிசாசின் வல்லமையுள்ள ஆவிகளை
கொண்ட எவ்வளவோ மனிதர்களுடன் தினமும் பழகுகிறோம், பேசுகிறோம்,
நடக்கிறோம், பயணிக்கிறோம்.
எனவே நமது ஆவிக்குரிய மனிதன், இவர்களின் தாக்குதலுக்கு உட்படலாம்.
எடுத்துக்காட்டாக, ஒரு வீதியில் நாம் நடந்து செல்லும் போது, சுவரில்
ஒட்டப்பட்ட ஒரு ஆபாசமான போஸ்டரை பார்க்க நேரிடுகிறது. அதனால் நமக்குள்
இச்சை ஏற்பட்டு, கண்களினால் பாவம் மனதிற்குள் பிரவேசிக்க வாய்ப்பு
உண்டாகிறது.
அதன்மூலம் அதை அச்சிட செய்த மனிதன், அதை அச்சிட்ட மனிதன், அதை ஒட்டிய
மனிதன் ஆகியோருக்குள் ஒரு மனதை உண்டாக்கி, பலரையும் பாவத்திற்குள் விழ
வைக்கும் ஒரு பொல்லாத பிசாசின் வல்லமை செயல்படுவதை கண்டுக் கொள்ளலாம்.
இதுபோல ஏராளமான பிசாசின் வல்லமைகள் கிரியை செய்கின்றன.
எனவே தினந்தோறும் அதிகாலை ஜெபத்தில், தேவ சமூகத்தில் நம்மையே
சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. நமது ஆவி, ஆத்மா, சரீரம் ஆகியவற்றில்
துவங்கி, குடும்பம், வாகனம், சபை, ஊழியம் என்று எல்லாவற்றையும் தேவ
சமூகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்போது மேற்கூறியது போன்ற பாவம் மற்றும் பிசாசின் வல்லமைகளில் நாம்
சிக்கிக் கொள்ளாமல், தேவனால் பாதுகாக்கப்படுவோம். அதற்கு ஏற்ற தேவ
ஆலோசனைகளும் நமக்கு கிடைக்கிறது.
இரவில்...
காலையில் தேவ சமூகத்தில் எல்லா காரியங்களையும் சமர்ப்பித்து விட்டு, ஒரு
நாளில் செயல்படும் போது, தேவனுக்குள் நடத்தப்படுகிறோம். இந்நிலையில்,
ஒவ்வொரு நாளும் இரவில் நாம் தூங்க செல்லும் முன், அன்றைய தினம் நாம்
பயணித்த பாதைகள், செய்த கிரியைகள், பேசிய பேச்சுகள், யோசித்த சிந்தனைகள்
ஆகியவற்றை நினைவிற்கு கொண்டு வந்து, இவை அனைத்தும் தேவனுக்கு ஏற்றதாக
இருந்ததா? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அப்போது அந்த நாளில் நமக்கு கிடைத்த தேவ ஆலோசனைகளுக்கு ஏற்ப, நமக்கு
செய்ய முடிந்த நல்ல காரியங்களுக்கு தேவனுக்கு நன்றி செலுத்த வாய்ப்பு
கிடைக்கிறது. அதேபோல நம்மில் வந்த குறைகள், குற்றங்கள் ஆகியவற்றை நாமே
கண்டறிந்து, அதை தேவ சமூகத்தில் அறிக்கையிட முடிகிறது.
இதனால் நமது ஆவிக்குரிய மனிதனின் இழப்புகள் மற்றும் வளர்ச்சியை
உடனுக்குடன் அறிந்து, அதற்கு ஏற்ப மாற்றங்களை செய்ய முடிகிறது. நமது
ஆவிக்குரிய வீழ்ச்சிகளை சரிப்படுத்த இயலுகிறது.
இதுபோல தினமும் செய்து வரும் போது, நம்மில் உள்ள பாவ எண்ணங்கள்,
சிந்தனைகள், தேவையற்ற அடிமைப்படுத்தும் வல்லமைகள் ஆகியவவற்றை எளிதாக
மேற்கொள்ளலாம். மேலும் நமது ஆவிக்குரிய மனிதன் ஒரு சீரான வளர்ச்சி பெற
முடிகிறது. எனவே தினமும் மறக்காமல், காலையில் தேவனிடம் எல்லாவற்றையும்
சமர்ப்பணம் செய்யுங்கள். இரவில் எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள்.
- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.