நமது வெளியரங்கமான சாதனைகள் இவ்வுலகத்தையும், மாம்சப்பிரகாரம் நடக்கும்
விசுவாசிகளையும் பூரிப்படையச்செய்யும்! ஆனால் தேவனோ நமது குணாதிசயங்களில்
மட்டுமே பிரியப்படுகிறார். ஆகையால் நம்மைப் பற்றிய தேவனுடைய கருத்து
என்னவென்று அறிய விரும்பினால், நம்முடைய ஊழியசாதனைகள் நம் மனதில்
எவ்வகையிலும் இராதபடி அதை நீக்கிவிட்டு, நமது சிந்தனைகளில் காணப்படும்
பாவங்களையும், நமது தீய மனப்பான்மைகளையும் கவனம் கொண்டு ஆராய வேண்டும்.
அதுதான், அது மட்டுமே...... நமது ஆவிக்குரிய நிலையை, நிர்மாணிக்கும் ஒரு
பழுதற்ற
அளவுகோலாகும்.
"இப்படியாக" உலகமெங்கும் சுற்றி சுகமளிப்பவர்களும் பிரசங்கிமார்களும்....
வீட்டில் இருந்து ஓய்வில்லாமல் வேலை செய்யும் ஒரு தாயும், தேவனுடைய
நற்சாட்சியைப் பெறுவதற்குசரிசமமான வாய்ப்புஉள்ளவர்களாய் இருக்கின்றனர்.
இதனால்தான், இன்று கிறிஸ்தவ உலகில் முதலாவதாக இருப்பவர்கள் கிறிஸ்துவின்
நியாயாசனம் முன் கடைசியாகவும், இவ்வுலகில் கடைசியாக கருதப்படும்
அநேகர்...... அதாவது, புகழ் பெற்ற ஊழியம் இல்லாதவர்கள், அன்று
முதலானவர்களாகவும் காணப்படுவார்கள்!!
எல்லா காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவே நமக்கு முன்மாதிரி. இயேசுவின்
முதல் முப்பது வருட பூமியின் வாழ்வைக் கணிக்க, பிரதானமாக இரண்டு இடங்களை
பிதா ஏற்பாடு செய்திருந்தார். ஒன்று அவரது வீடு. மற்றொன்று, அவர் வேலை
செய்யும் இடம் (தச்சுக்கூடம்). இவ்விரு இடங்களிலேயும் இயேசுகிறிஸ்து
உண்மையுள்ளவராய் இருந்ததுவே, அவருக்குப் பிதாவின் நற்சாட்சியைக் கொண்டு
வந்தது.
இது நம் எல்லோருக்கும் மிகவும் உற்சாகமளிக்கும் விஷயமாய் இருக்கிறது!
ஏனென்றால் நாமெல்லாரும் இவ்விரு இடங்களிலேயும்தான் இடைவிடாது
காணப்படுகிறோம். அதாவது, நமது வீடு! வேலை செய்யும் இடம்! இவ்விரு
இடங்களில்தான் நம்மை தேவன் பிரதானமாக பரீட்சிக்கிறார்.
இயேசுகிறிஸ்து வாழ்ந்ததோ ஒரு எளிமையான குடும்பத்தில்! யோசேப்பும் -
மரியாளும் ஒரு ஆட்டுக்குட்டியைக் கூட தகனபலியாக கொடுக்க முடியாத அளவிற்கு
வறுமையிலிருந்தார்கள் (லூக்கா 2:24-ஐலேவி .12:8வசனத்துடன் ஒப்பிட்டு
பார்க்கவும்). இயேசுவுக்கு இளையவர்களான நான்கு சகோதரர்களும், இரண்டு
சகோதரிகளும் அதே வீட்டில் வசித்து வந்தனர் (மாற்கு 6:3).அந்த எளிய
குடும்பத்தில் வளரும்போது இயேசுகிறிஸ்து சந்தித்த கஷ்டங்களையும்,
போராட்டங்களையும் நாம் யூகித்துக் கொள்ளலாம். அவருடைய இளைய சகோதரர்களோ
அவிசுவாசிகள்! (யோவான் 7:5). பலவழிகளில் அவர்கள் அவரை பரிகசித்து
சஞ்சலப்படுத்தியிருக்க வேண்டும். அந்த வீட்டில், பிறரிடமிருந்து வரும்
சோதனைகளின் நெருக்கத்தில், சற்று தனித்திருக்க அவருக்கு ஒரு தனி அறைகூட
இருந்திருக்காது. எல்லா குடும்பங்களிலும் காணப்படும் சண்டைகளும்,
சச்சரவுகளும், தூஷணங்களும், சுயநலங்களும் அந்தக் குடும்பத்திலும்
இருந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களின் மத்தியில்தான்
இயேசுகிறிஸ்து 'நம்மைப்போல் எல்லாவிதத்திலும்' சோதிக்கப்பட்டார். ஆனால்
அவர் ஒரு முறைகூட பாவஞ்செய்யவில்லை!
(எபி. 4:15).
இயேசு, நம்மைப்போலன்றி, சோதிக்கப்பட முடியாத வேறு விதமான ஒருவகை மாம்சத்தில்
வந்திருப்பாரானால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் பரிசுத்தமாய்
வாழ்ந்ததில் ஒருவித மகிமையும் விசேஷமுமில்லை. ஆனால் அவர் எல்லாவகையிலும்
நம்மைப் போலானார் (எபி .2:17).நாம் எந்தக் காலத்திலும் சந்திக்கக்கூடிய
எல்லாவிதமான சோதனைகளுக்கும் உட்பட்டு நெருக்கப்பட்டார். இதுதான் நாம்
சோதிக்கப்படும்பொழுது,நாமும்கூட ஜெயங்கொள்ளலாம்என்கிற மாபெரும்
உற்சாகத்தையும், தைரியத்தையும் நமக்களிக்கிறது!