கிறிஸ்துவின் சாயலில் மாறும் புதுரச செய்தியில் அகமகிழும் அநேகர்,
புதுதுருத்தியையும் அடைவதற்குரிய விலைக்கிரயத்தை செலுத்துவதற்கோ,
விருப்பம் கொண்டிருக்கவில்லை! ஆனால் இயேசுவோ, மிகத் தெளிவாக, "புதுரசம்
புது துருத்திகளில்தான்(MUST)" வார்த்து வைக்கப்பட வேண்டும் (லூக்கா
5:38)என்றார். இங்கு தான் நம்முடையதொடர்ச்சியான
கீழ்படிதல்சோதிக்கப்படுகிறது!
புதுரசத்தைச் சுதந்தரிக்க, நாம் பாவத்திற்கு எதிராய் நம் ஜீவியத்தில்
போராட வேண்டும்! இதைத்தொடர்ந்து, புது துருத்தியை சுதந்தரிக்க, தேவ
வசனத்தை விருதாவாக்கிய 'மனுஷீக'மார்க்க பாரம்பரியங்களுக்கு எதிராய்ப்
போராட வேண்டும்! இன்று அனேகருக்குப் பாவத்திலிருந்து விடுபடுவதைவிட,
மனுஷீகப் பாரம்பரியங்களிலிருந்து விடுபடுவதற்கே கஷ்டமாயிருக்கிறது!
எப்படியாயினும், "பலவந்தம்" செய்பவர்கள் மாத்திரமே பரலோக ராஜ்யத்தைச்
சுதந்தரித்துக் கொள்ள முடியும்! (மத் .11:12).'பலவந்தம் செய்யாமல்'
மனுஷீகமான மூட மார்க்க பாரம்பரியங்கள் அகற்றப்பட முடியவே முடியாது!!
ஆம், பாவத்திற்கு எதிராய் பிரசங்கித்ததற்காக இயேசு சிலுவையில்
அறையப்படவில்லை! தேவ வசனத்தை நிலைகுலையச் செய்த மனுஷீக மார்க்க
பாரம்பரியங்களுக்கு எதிராய் யூதர்களிடம் பிரசங்கித்ததாலேயே இயேசு
சிலுவையில் அறையப்பட்டார்! (மாற்கு 7:1-13).மனுஷீகமான மார்க்கத்
தலைவர்களின் மாய்மாலத்தையும், அவர்களின் சடங்காச்சார பாரம்பரியங்களின்
வெறுமையையும் அவர் வெளியரங்கமாக்கினார்! மார்க்கத்தின் பேரில் பணம்
சம்பாதித்தவர்களை தேவாலயத்திலிருந்து விரட்டி அடித்தார்!! தேவாலயத்தை
(சபையை) சுத்திகரிக்கும் அவருடைய வைராக்கியமே, அவரை சிலுவையில்
அறையும்படியாக மார்க்கத் தலைவர்களைக் கோபம் மூட்டியது!!
அப்படியே நாமும், "சுயம் உடைபடுதல்" "புது ரசம்" ஆகிய செய்திகளைப்
பிரசங்கிக்கும்போது, ஜனங்கள் நம்மை சிலுவையில் அறையும்படி
கூறமாட்டார்கள்! ஆனால், "புது ரசம் புது துருத்திகளில் தான் வார்த்து
வைக்கப்பட வேண்டும்" என்ற தேவனுடைய முழு ஆலோசனைகளையும் (whole Counsel of
God) பிரகடனப்படுத்த தீர்மானிப்போமென்றால், இப்போது கிறிஸ்தவ உலகில்
மார்க்க அதிகாரம் கொண்டிருக்கும் ரோமன் கத்தோலிக்கர், புராட்டஸ்டண்டு
மற்றும் பெந்தெகொஸ்தேயினரில் உள்ள அனேகர். . . 'குறிப்பாக' அதில்
முன்னிலை வகிப்பவர்கள் கடும் கோபம் கொள்வார்கள் என்பதை நாம் நிச்சயமாய்
எதிர்பார்க்கலாம்!!
"புது ரசம்" பழைய துருத்திகளில் வார்த்து வைக்கப்பட முடியாது என்று இயேசு
ஏன் சொன்னார் தெரியுமா? ஏனெனில், பழையதுருத்தி..... தொடர்ச்சியான
கிறிஸ்துவுக்குள் புதிய உடன்படிக்கை ஜீவிய தரத்திற்கு விரிந்து கொடுக்க
முடியாததால், அது வெடித்துப் போகும்!! பழைய ரசத்தை வார்ப்பதற்கு ஒரு
காலத்தில் பழைய துருத்தி உபயோகமாயிருந்தது உண்மைதான்! ஆனால்,
புதுரசத்திற்கு இனி அது, சிறிதுகூட உபயோகம் இல்லை!
பழைய ரசத்தை வார்ப்பதற்கு யூத மார்க்க அமைப்பின்படியான (Jewish Religious
System) பழைய துருத்தி ஒருகாலத்தில் 'தேவனாலேயே' மோசேயின் மூலமாக
நியமிக்கப்பட்டது! ஆனால் இயேசு வந்து புதுரச வாழ்க்கையாகிய புது
உடன்படிக்கையை ஸ்தாபித்த போதோ, அதை வார்த்து வைத்திட புது துருத்தி
தேவையாயிருக்கிறது! ஆம், பழையது ஒழிந்துதான் போகவேண்டும்! புதியதை
ஒட்டுப்போட்டு இணைத்து, பழையதை மாற்றியமைத்திட முடியாது என்றே இயேசு
சொன்னார்! இல்லாவிட்டால் "அந்த பழைய வஸ்திரம்" புதிய வஸ்திரத்தையும்
கிழித்துப்போடும் (லூக்கா 5:36)என இயேசு திட்ட வட்டமாய் கூறிவிட்டார்!!