தேசமெங்கும் “தூய சாட்சி” சபை வேண்டும்! - சகரியா பூணன்

தேவகுமாரன் என்ற நாமத்தோடு, சேனைகளின் கர்த்தருடைய தூதனாய் வந்த இயேசு,
சபையைச் சுத்திகரிக்கும்படி,"புடமிடுகிறவனுடைய அக்கினியைப்"போலவே
வந்தார்! (மல்கியா. 3:1-3).நம்முடைய காணிக்கைகள்நீதியுள்ளதாய்
இருக்கும்படி, அவர் தன் வசனத்தின் மூலமாகவும், பரிசுத்தாவியின்
மூலமாகவும், வெள்ளியும் பொன்னும் புடமிட்டுச் சுத்திகரிக்கப்படுவது போலவே
தன் அக்கினியால் நம்மைச் சுத்திகரிக்க விரும்புகிறார். ஆகவே, இன்றைக்கு
தேவன் நம்மிடம் காணிக்கையாய் விரும்பும் பலி "நம்முடைய சரீரமே" ஆகும்
(ரோமர் 12:1). ஆம், அது ஒன்றே அவருக்குப் பிரியமான பலி ஆகும்! இதன்
பொருள் என்ன? நாம் கிறிஸ்துவோடு அறையப்பட நம்மை ஒப்புக்கொடுத்து,
நம்முடைய அவயவங்கள் இனி ஒருபோதும் பாவத்திற்கு அடிமையாய் இல்லாமல்,
பாவத்திற்கு மரித்து நீதிக்கு அடிமையாய் இருக்கும்படி அவரோடு
உயிர்த்தெழுவதாகும்!! இந்த நம் சரீரத்திலேயே நம்முடைய சிலுவையை
அனுதினமும் சுமந்து நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டியவர்க
ளாயிருக்கிறோம்!!

சுயத்திற்கு மரித்து, தங்களைத் தாங்களே சுத்திகரித்துக்கொள்ளும் சபையாகக்
கூடிவரும் ஐக்கியத்திலுள்ளவர்கள் அடையும் பலன், பரிகாசமே!
மல்கியாவின் நாட்களில் தேவனுக்குப் பயந்து, அவர் வழிநடந்தவர்கள் மிகச்
சிலரே! அந்த வெகுசிலர் அடிக்கடி ஒன்றாய் கூடிவந்து, தங்கள் ஜீவியம்
சுத்திகரிக்கப்படுவதற்காக ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி
பேசிக்கொண்டார்கள் (மல்கியா 3:16,17). ஆனால் அவர்களோ, தங்களைச்
சுற்றியுள்ள யூதர்களால் ஏளனமாய் எண்ணப்பட்டார்கள் என்பதற்குச்
சந்தேகமேயில்லை! தங்களின் சடங்காச்சாரமான மத அனுசரிப்புகளில்
பங்குகொள்ளாமல், தன்னலமாகத் தங்களைத் தாங்களே சுத்திகரித்துக்கொண்ட ஓர்
கூட்டமாகவே இவர்கள்
பரிகசிக்கப்பட்டார்கள்!

பூமியில் தன் நாமத்திற்கென்று தூய்மையான சாட்சி கொண்ட மக்கள் வேண்டும்
என்பதே தேவனின் விருப்பம் - என்ற இந்த ஒரே செய்தியே ஆதியாகமத்திலிருந்து
வெளிப்படுத்தின விசேஷம் வரை
வலியுறுத்தப்பட்டிருக்கிறது!

ஆனால், இவர்களைப்பற்றி தேவன் கொண்டிருந்த நோக்கமோ, "இவர்கள் மாத்திரமே
பூமியில் என்னுடைய விலை உயர்ந்த சம்பத்துக்கள்! நான் திரும்பவரும்
நாட்களில், இவர்களுடைய உண்மையான மதிப்பை நான் இவ்வுலகத்திற்கு
வெளிப்படுத்தும் அந்த நாளில், அவர்களைப் புரிந்துகொள்வீர்கள்" (மல்கியா
.3:16-18)என்பதாகவேயிருந்தது. பார்த்தீர்களா, இவர்கள் மட்டுமே தேவனுடைய
இருதயத்திற்கு மனமகிழ்ச்சியைத் தந்தவர்கள்! காரணம், சடங்காச்சாரமான
சபையின் பக்தி அனுசாரங்களில் ஈடுபட்டதால் அல்ல, அவர்களுடைய "தூய்மையே"
அதற்கு காரணமாகும்!!

ஆம்! தேவன் தன் படைப்பின் நாட்களிலிருந்தேதன் நாமத்திற்கென்று தூய்மையான
சாட்சியைஅடையவே மனவிருப்பம் கொண்டு செயல்பட்டார். தேவன் தன்னுடைய மனதில்
"தூய்மைக்கு" (PURITY) கொடுத்த முதன்மையான பங்கை நம் தனிப்பட்ட
ஜீவியத்திலும் சபை ஜீவியத்திலும் ஒருக்காலும் பின்வாங்கவோ, மறந்து விடவோ
கூடாது!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.