விசுவாசத்திற்கு ‘சுயபுத்தியின் அறிவு’ பரம எதிரி! - சகரியா பூணன்

ஆதாம், ஏவாள் அடைந்த தோல்வி, பிரதானமாக ஒரு விசுவாசத்தோல்வியே ஆகும்.
தேவனுடைய ஞானம்; அன்பு; வல்லமை ஆகியவைகளின் மேலுள்ள முழு
நம்பிக்கையினால், மனுஷ ஆத்மாவானது (Human Personality) முற்றிலும் தேவனை
சார்ந்து கொள்வதே விசுவாசமாகும். ஏவாள், தேவன்மேல் அந்த நம்பிக்கை
கொள்ளத் தவறியதால், தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போகும்படி,
சாத்தானால் கவர்ந்து கொள்ளப்பட்டாள்.

அந்த மரத்தை அவர்கள் அனுபவிக்கத் தடுத்ததினால், தேவனுடைய ஞானத்தில்
பிழைகளுண்டு என ஏவாளிடம் சாத்தான் ஓதினான். அந்த மரம் ஏன் விலக்கப்பட்டது
என, தேவனும் ஆதாமுக்கு எந்தவித காரணமும் கொடுக்கவில்லை! விசுவாசத்தைக்
கொண்டு நாம் ஜீவிக்கும்போது, தேவனுக்கு கீழ்ப்படிவதற்கு முன்பாக நாம்
காரணங்களை அறிந்திடத் தேவையில்லை. காரணத்தை முதலாவது அறிய வேண்டுமென்று
நிபந்தனை போடுவது நமது சுயபுத்தியே ஆகும்
(ரோமர் 1:5; 16:26).

நமதுசுயபுத்திவிசுவாசத்திற்கு விரோதமானது என்பதைநீதிமொழிகள்
3:5,6வசனங்கள் தெளிவாக்குகின்றன. "உன் சுயபுத்தியின் மேல் சாயாமல் உன்
முழு இருதயத்தோடும்('தலை'யோடல்ல)கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து" என்றே
சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய ஞானமானது, திறமைசாலிகளுக்கும்,
அறிவாளிகளுக்கும் மறைவாயிருந்து,சிறு குழந்தைகள் போல(மத்தேயு
11:25)அப்படியே விசுவாசிப்போருக்கு மாத்திரமே
வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சுயபுத்தியானது சிறந்த வேலைக்காரன், ஆனால்
பொல்லாத எஜமான்! ஆதலால் தேவனை நம்பி விசுவாசத்துடன் வாழும் மனிதனின்
ஆவிக்கு, "புத்தி" ஒரு வேலைக்காரனாய் இருக்க வேண்டும் என்பதே தேவன்
நமக்கென்று நியமித்திருக்கும் நியதி!

எனவேதான், விலக்கப்பட்ட மரத்தின் கனியை ஏன் ஆதாம் புசிக்கக்கூடாது என்ற
காரணத்தை தேவன் கொடுக்கவில்லை. ஏனெனில், தம்மேலுள்ள ஆதாமின் விசுவாசத்தை
தேவன் வர்த்திக்க விரும்பினார். தேவன் நம்மை பரீட்சிக்கும் முதல் தருணமே
இதுதான்! ஏதாவதொன்றைச் செய்யும்படி தேவன் நம்மை அழைக்கும்போது, ஏனென்று
விளக்கங்கள் அறியாமல் கூட நம்மால் கீழ்ப்படிய முடியுமா? நமது
புத்தியின்படி ஆபத்தானது என அறிந்ததைச் செய்ய தேவன் அழைத்தால் என்ன
செய்வோம்?
அநேக கிறிஸ்தவர்கள் வல்லமையின்றி இருப்பதற்கும், அநேக விசுவாசிகள்
இயற்கைக்கு மிஞ்சிய தேவசெயல்களை தங்கள் வாழ்க்கையில் அனுபவியாமல்
போவதற்கும் இதுவே காரணம். அவர்கள் தங்கள் விசுவாசத்தாலல்ல, தங்கள்
புத்தியில் பிழைக்கிறார்கள்.

ஆம், விசுவாசம் என்பது தேவனுடைய அன்பில் வைத்திருக்கும் முழு நம்பிக்கையே
ஆகும். அவர்களை ஏற்ற அளவு தேவன் நேசிக்காதபடியினால்தான், அவர்களுக்கு
அந்த இன்பமான கனியை விலக்கியிருக்கிறார் என்று சாத்தான் ஏவாளிடம்
ஓதினான். ஏவாள் தன் புத்தியின்படி பிழைக்காமல் விசுவாசத்தினால்
பிழைத்திருப்பாளேயானால், அவள் இப்படியாக பதில் சொல்லியிருப்பாள், "நல்லது
சாத்தானே, அந்த மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்று தேவன் ஏன் சொன்னார்
என்பதை நான் தெளிவாக அறியவில்லை. ஆனால் ஒன்றை தெளிவாக நான்
அறிந்திருக்கிறேன். தேவன் எங்களை வெகு அதிகமாய் நேசிக்கிறார் என்பதையும்;
ஆனபடியால் நன்மையான யாதொன்றையும் அவர் எங்களுக்கு மறுக்கமாட்டார்
என்பதையும் நிச்சயமாக அறிந்திருக்கிறேன். எனவே அவர் இந்தக் கனியை
எங்களுக்கு விலக்கினால் அதற்கு மிகச் சரியானதொரு காரணம் இருக்கும்.
அதுவும், எங்கள் நன்மையை மனதில் கொண்டே செய்திருப்பார்!" என்றே பதில்
சொல்லியிருப்பாள். விசுவாசத்தினால் வரும் பதில் அப்படித்தான்
இருந்திருக்கும். ஆனால் இதற்கு மாறாக, அவள் பிசாசின் பொய்யில்
விழுந்துவிட்டாள்! பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் நாம்
அவித்துப்போட, "நம்பால் தேவன் வைத்திருக்கும் அன்பின் மேலுள்ள விசுவாசம்"
என்னும் கேடகத்தினால் மாத்திரமே முடியும் (எபே. 6:16).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.