தேவ மகிமை பெற்றிட சுயம் ‘பூஜ்யமாக’ வேண்டும்! - சகரியா பூணன்

தேவ வல்லமை வெளிப்பட தங்கள் வலிமையான சுயத்தில் பூஜ்ய நிலையடைந்த சில தேவ
தாசர்களின் அனுபவமே நமக்கு வேண்டும்! தேவன் யோபுவோடு அவன் ஜீவியத்தில்
பல்வேறு சோதனைகளால், பாடுகளால் இடைபட்டார். இறுதியாக, யோபு இந்த பூஜ்ய
நிலையடைந்து தன் முகத்தை புழுதியில் விழப்பண்ணி "கர்த்தாவே, நான் நீசன்
(பூஜ்யம்). . . . . என் கையினால் என் வாயைப்
பொத்திக்கொள்வேன். . . . என் காதினால் (மற்றவர்கள் சொல்ல) உம்மைக்
குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும், சாம்பலிலும் இருந்து
மனஸ்தாபப்படுகிறேன்" என்றான் (யோபு 40:4; 42:5,6).

தேவன் இறுதியாக நம்மை உடைத்துத் தன்னை வெளிப்படுத்தும் போது, யோபு அடைந்த
இந்த அனுபவமே நமக்கும் ஏற்படுகின்றது! அதேபோலவே, 40 வயதில்தன்னைப்
பெலவானாக எண்ணியமோசே, அடுத்த 40 வருடங்களில் ஏற்பட்ட தன் வாழ்வின்
வனாந்திர அனுபவத்தால் உடைக்கப்பட்ட பிறகே தேவன் அவனுக்கு தரிசனமானார்!
இப்போது அதே மோசே "ஆண்டவரேஎன்னால் பேச முடியாது,வேறு யாரையாவது
அனுப்பும்" என நொறுங்குண்டு கூறினான் (யாத் 4:10,13).

இதே நிகழ்ச்சியே, மிகப் பெரிய தீர்க்கதரிசியான ஏசாயாவிற்கும் தேவனுடைய
மகிமையைக் கண்டபோது ஏற்பட்டது! அவன் சொன்னான், "ஐயோ! அதமானேன்
(பூஜ்யமானேன்), நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்" என்றான் (ஏசாயா 6:5).
தானியேல், தேவன் தந்த தரிசனத்தைக் கண்டபோது "என் பெலனெல்லாம்
அற்றுப்போயிற்று (பூஜ்யமானது)" என்று கூறினான் (தானியேல் 10:8).

ஆவியில் நிறைந்து, 65 வருடங்கள் தேவனோடு நடந்த யோவான் அப்போஸ்தலன், பத்மு
தீவில் இயேசுவைக் கண்டபோது, செத்தவனைப் போல (பூஜ்யமாய்) அவருடைய
பாதத்தில் விழுந்தான் (வெளி 1:17)என வாசிக்கிறோம். ஆம், தேவனுடைய
மகிமையைக் கண்ட எல்லா பக்தர்களுடைய அனுபவமும் இதுதான்! தங்கள் முகம்
புழுதியில் விழ, வாய் புதைத்துப் போனார்கள்!! நம்மையும் "சுயம் முறிந்து
விழும்" இந்த இடத்திற்குத் தேவன் கொண்டுவர முடிந்தால் மாத்திரமே,
உயிர்ந்தெழுந்த அவரது வல்லமையும் இயேசுவின் ஜீவனும் நம்மில் வெளிப்பட
முடியும்!

நாம் துரிதமாய் இந்த இடத்தை கண்டடைந்து, நம் முகம் வாழ்நாள் முழுவதும்
தேவனுக்கு முன்பாக புழுதியில் விழுந்து நொறுங்குண்டு வாழ்வது எத்தனை
அருமையானது!! இப்படிப்பட்ட வாழ்க்கையில் தான் பிரகாசத்திற்கு மேல்
பிரகாசமும் (நீதிமொழிகள் 4:18),மகிமையின் மேல் மகிமையும் (2கொரிந்தியர்
3:18)அடைந்திடும் வளர்ச்சி இருக்கிறது!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.