வசனம் 4:6
நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம். அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது. ஜனங்கள்
வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.
அதுமட்டுமன்றி, நெகேமியா அவர்களின் பரிகாசங்களுக்கு ஏதும் பதில் பேசவில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும்.... இருந்தார் (2.பேது.2:23) என்று வேதம் இயேசுவைப் பற்றிக் கூறுகிறது. அது போலவே நெகேமியாவும் இருந்தான். நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம், என்றுள்ள அடுத்த வார்த்தைகள் நெகேமியா என்ன செய்தான் என்று விளக்குகின்றன. தொடர்ந்து நெகேமியா கட்டும் பணியைச் செய்தான். அவனைத் தடுக்கக்கூடியது ஏதுமில்லை. சிரிப்பு, பரிகாசம், சக்கந்தம் ஏதம் அவனைத் தடுக்கவில்லை. தேவனாகிய கர்த்தருடைய வேலையை அவன் செய்து வந்ததினால், அதை நிறுத்தினால் அது சத்துருக்களின் வெற்றிக்கான வழி என அவன் நினைத்திருந்தான். ஆகையால் அவன் கட்டும் பணிகளை நிறுத்தவேயில்லை. அவனுடைய இதர நண்பர்களும் அவ்வாறே தொடர்ந்து கட்டும் பணியைச் செய்தனர். சீக்கிரமே, அந்த அலங்கங்கள் அனைத்தும் இணைத்துக் கட்டப்பட்டு பாதி உயரத்திற்கு எழுப்பப்பட்டு விட்டன. ஒவ்வொருவரும் தங்கள் தங்களின் சிறுகட்டும் பணி, அடுத்தவரின் கட்டுமானப் பணியோடு இணைக்கப்பட்டு முழுத்தொடர் இணைப்பும், ஒரேமதிலாக எழுப்பப்பட்டு வளர்ந்து வருகிறது எனக்காணும்போது, அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
ஆறாம் வனத்தில் கடைசி பாகம் ஜனங்கள் வேலை செய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள் எனக் கூறுகிறது. அந்த அலங்கத்தின் மதில்களை அவர்கள் கட்ட விரும்பினார்கள். அதைக் கட்டினார்கள். இங்கே நாம் முக்கிய ஒன்றினைக் கவனிக்க வேண்டிய முன்மாதிரியைக் காண்கிறோம். அவர்கள் கட்டாயம் அதைச் செய்யவேண்டும் என்பதில்லை, அல்லது அது அவர்களின் கடமைப்பணியுமல்ல, அல்லது அதைச் செய்யப் பயப்படுத்தப்படவுமில்லை. அதைக் கட்டவேண்டுமென்று விரும்பினார்கள். தங்கள் மனதிலே அப்படி ஒரு முடிவை முதலில் எடுத்தார்கள். நம்மில் பலரும் தேவனுடைய பணியைச் செய்ய முதலில் அத்தகைய தீர்மானத்தை எடுக்கிறோமா? அதைச் செய்கிறோமா? அதைச் செய்கிறோமா? இவர்களோடு ஒப்பிட்டு நம்மை ஆராய்வோமாக.
வசனம் 4:7
எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டு வருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி,
இப்போது அதே வேலை மிகவும்
கடினமானதாகிவிட்டது. தேவனுடைய வேலை வெற்றியோடு செய்யப்பட்டு வளர்ந்தேறி வருவதை சத்துரு சகித்துக்கொள்ளமாட்டானன்றோ? அவன் முன்னே வந்து அப்பணியை நிறுத்திவிட முயற்சி செய்வானல்லவா? ஆகையால் சன்பல்லாத்தும், தொபியாவும் மறுபடியும் இடைய+று செய்யமுன்வருகிறார்கள். இப்போது, அவர்களுடன் அராபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் சேர்ந்துகொண்டார்கள். மதில்கள் கட்டப்பட்டு, வாசல்கள் பழுது பார்த்துக் கட்டப்படுகின்றனவென்று கேள்விப்பட்டவுடன் அவர்கள் மிகவும் எரிச்சலடைந்தார்கள். இந்த மதில்கள் கட்டும் விஷயத்தில் சன்பல்லாத்தும் அடிக்கடி எரிச்சலடைந்து தனது கோபத்தை எல்லாருக்கும் பரப்பிக்கொண்டிருந்தான். இந்த ஒரே கலகப்பிரியன் யாது செய்துவிடமுடியும் என்று நினைக்கும்போது நமக்கு சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.
அவனுடைய கோபத்தின் விளைவாக அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு எருசலேமைத் தாக்கவும், அந்தக்கட்டுமான வேலையத் தடுக்கவும் முற்பட்டான். அவர்கள் எல்லாருமாக சேர்ந்து இந்த மதில்கள் கட்டப்படும் பணியை நிறுத்திவிட வேண்டும் என்பதற்காக ஒரு போர் முயற்சியை மேற்கொள்ளத் தலைப்பட்டனர்.