இயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன?




இயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன?

காயங்கள் ஆறினால் அவை தழும்புகளாகும்
“அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசா53:5) என்று பழைய ஏற்பாட்டிலும், “அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1பேது2:24) என்று புதிய ஏற்பாட்டிலும் எழுதப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டு வசனம் குணமானீர்கள் என்று இறந்தகாலத்தை உச்சரிக்க வைத்து நம்முடைய விசுவாசத்தை
பெரிதுபடுத்துகிறது. இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யும் தழும்புகள் இயேசுவுக்கு எப்படி வந்தன? காயங்கள்
இருந்திருந்தால்தானே தழும்புகள் வந்திருக்க முடியும்! நம்முடைய
மீறுதல்களினிமித்தமே அவருக்கு காயங்கள் வந்தன (ஏசா: 53:5).

எப்படி?

மாசில்லாத இயேசுவை எப்படியாவது விடுதலை பண்ணவேண்டுமென்று பிலாத்து எவ்வளவோ முயற்சித்தும், முடியாமல்,
பரபாஸ் என்ற கொடூரனை விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து
சிலுவையிலறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்
(மத்27:26).

வாரினால் அடித்தல் என்பது ஏதோ ஒரு சாட்டையாலோ, பெல்ட்டாலோ அடிப்பது அல்ல.

ரோம சர்க்கார், பயங்கரமான தண்டனையை சரீரத்திலே கொடுக்க நினைத்தால் இப்படி வாரினால்தான் (Scourge) அடிப்பார்கள். இந்த வாரானது, ஒரு மரப்பிடியிலே இணைந்துள்ள12 தோல் வார்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு தோல்வாரின் இருபுறமும், எலும்பு அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட, வெளித்தள்ளியுள்ள அதாவது வெளியே நீட்டப்பட்ட கூர்மையான வளைந்த நிலையிலிருக்கும் துண்டுகள் இணைக்கப்பட்டிருக்கும்.


இப்படிப்பட்ட வாரினால் அடிக்கும்போது கடுமையான வலியும், சதை பிட்கப்படுதலும் சர்வ சாதாரணமாய் நடக்கும். குற்றவாளி ஒரு மரத்திலே கட்டப்படுவான். பின் இந்த கொடூரமான வாரினால், ஆடையில்லாத வெறுமையான முதுகிலும், இடுப்பிலும் அடிப்பார்கள். சில சமயங்களில் முகத்திலும் குடல் பகுதிகளிலும் அடிப்பார்கள். ஒவ்வொரு அடியின்போதும், சதையானது பல இடங்களில் பிய்க்கப்பட்டு விழும். இது பயங்கரமான தண்டனையாதலால், குற்றவாளி அடிக்கடி மயங்கி விழுவான். சில நேரங்களில், கட்டப்பட்ட மரத்தின் கீழேயே மடிந்தும் கூட போவான்.

இப்படிப்பட்டதான கொடூரத்தினால், குற்றவாளி உண்மையை
ஒப்புக்கொள்ளவும், அவனிடமிருந்து உண்மை இரகசியங்களை தெரிந்து கொள்ளவும் இந்த முறையை பயன்படுத்தினார்கள்
(அப்: 22:24,25). இயேசுவை இப்படி அடித்தார்கள் என்றால், பாவமில்லாத ஒன்றுமறியாத அவரிடமிருந்து என்னத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்? எதை பெற்றுக் கொண்டார்கள்?!

நியாயப்பிரமாண சட்டப்படி சவுக்கினால் 40 அடி வரைக்கும்தான் அடிக்கமுடியும் (உபா:25:3). இதனால் யூதர்கள் இப்படியாய் அடிக்கும்போது
39 அடியிலேயே நிறுத்திவிடுவார்கள்
(2கொரி:11:23-25).

இயேசுவை அடிக்க உபயோகித்த சவுக்கிலே,12 தோல் வார்கள்
இருந்திருந்தால், அதோடு அவரை 39 முறை அடித்திருந்தால்,
39X12 = 468 சதை வெட்டுகள் உருவாகியிருக்க வேண்டும்.

ஒருசில அடிகள் ஒரே இடத்திலேயே
விழுந்திருந்தால், ஒவ்வொரு முறையும் எவ்வளவு ஆழத்திலிருந்து அவரின் சதைகள் கிழிக்கப்பட்டிருக்கும்; அவருடைய சரீரம் எவ்வளவு அந்தக்கேடடைந்திருக்கும்! (ஏசா52:14) எத்தனை வெட்டுக்கள்
உருவாகியிருக்கும்!

அவரது முதுகு உழுதநிலம் போல ஆயிற்று! (சங்:129:3)


இப்படியாய் உழுதநிலம் போல, சதைகள் பிய்க்கப்பட்டு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காய் காயங்கள்பட்டார்; அந்தக் காயங்கள் இன்று தழும்புகளாய்
காணப்படுகின்றன. காயம் ஆறும்போது "தழும்பு" உண்டாகும். அந்த தழும்பை நாம்
பார்க்கும்போதெல்லாம் எதனால் இந்த காயம் உண்டானது? யாருக்காக இத்'தழும்பு'ஏற்பட்டது? என்பது நினைவுக்கு வரும்.

அவர் மரித்து உயிர்த்தெழுந்து2000 ஆண்டுகள் ஆனபின்பும் அவர் நமக்காக பட்ட காயங்கள் நினைவுக்கு வருகிறதென்றால்... அது தழும்பாக அனைவரின் உள்ளங்களிலும் பதிவாகியுள்ளது என்றுதானே அர்த்தமாகிறது.

அவர்பட்ட பாடுகள், காயங்கள் அனைத்தும் எனக்காக, உனக்காக, நமக்காகத்தானே! நம் நினைவில் நிற்கும் அவரின் காயங்களே அவரின் தழும்புகள். அத்தழும்புகளாலே நாம் சுகமாகிறோம். அதை விசுவாசிக்கும்போது குணமாகிறோம்.

இயேசுவின் மரணம் நமக்கு ஜீவன்; அவரின் ஏழ்மைப் பிறப்பு நமக்கு ஐசுவரியம்; அப்படியே அவரின் இந்த பயங்கரமான அடிகளால் வந்த காயத்தின் தழும்புகளால் நமக்கு குணம், சுகம், விடுதலை.

இது சரீர வியாதிகளால் வரும் வியாதியை மட்டுமல்ல, ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய எல்லாவற்றிலும் வரும் ஆரோக்கியமில்லாத, தேவையில்லாத அத்தனை காரியங்களையும் நீக்கிப் போடும். ஆமென்! அவரின் தழும்புகளை விசுவாசிப்போம்; எண்ணிமுடியாத அற்புதங்களை
பெற்றுக்கொள்வோம்! ஆமென்! அல்லேலூயா!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.