நெகேமியா விளக்கவுரை வசனம் 2:4-5


வசனம் 2:4-5

அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின்
கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப
வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.

இராஜா தனது
பரிவர்த்தனைகளிலும் மிகவும் சுருக்கமாய் இருந்தான். நீ கேட்கிற காரியம் என்ன? என்று கேட்டான். இதுபோன்ற ஒரு கேள்வி நம்மை வியப்பில் ஆழ்த்தவல்லதாய் இருக்கிறது. ஆனால் நெகேமியாவை அல்ல, அவன் நன்றாகச் சிந்தித்து, பலநாள்களுக்கு முன்னதாகவே தேவனிடத்தில் ஜெபித்து, முடித்து இருந்தான். இப்போது இராஜா அவனைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டவுடனே ஒரு நொடிப்பொழுது - இடைவெளி - தேவனை நோக்கிய ஒரு ஜெபம். நான் பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, ஒரிடைவெளி மிகச் சிறிய இடைவெளிநேரம். இராஜாவைப் பார்த்து பதிலிறுத்தி, என்று வாசிக்கிறோம். அவனுடைய அறைக்குள் ஓடி முழங்கால் படியிட்டு ஜெபம் செய்ய நேரமில்லை. அதற்குரிய நேரம் வந்தவுடனே, செயல்ப்பட தயாராக இருந்தான். நமது வாழ்விலே, நாம் தயாராக இல்லாததினால் எத்தனை அரிய சந்தர்ப்பங்களை நழுவ விட்டிருக்கிறோம். நம்முடைய மனம் பரிசுத்த ஆவியின் செயல்ப்பாட்டிற்கு உகந்ததாய் ஆயத்த நிலையில் இல்லாதிருந்ததினால் எத்தனை சந்தர்ப்பங்கள் நழுவிப் போயின. ஒருவேளை அத்தகைய சந்தர்ப்பத்தினைக்கூட, அது கடந்து போகுமுன் நாம் அறிந்துகூட இருக்கமாட்டோம்.

நெகேமியா மரியாதையான வார்த்தைகளால் பேசி, இராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என்று ஆரம்பிக்கிறான். வேதம் சொல்லுவதென்ன? தேவனுக்குப் பயந்திருங்கள், இராஜாவைக் கனம் பண்ணுங்கள் (1.பேது.2:17). அடுத்து அவன் இராஜாவினிடத்தில் வேண்டுதல் செய்கிறான். யூதா தேசத்திற்கு நீர் என்னை அனுப்பும், என்று வேண்டுகிறான். என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் பட்டணம் என்று கூறுகிறான். இன்னும்கூட எருசலேம் என்ற பெயரை அவன் கூறவில்லை. அவன் மன்றாட்டு, தனிப்பட்ட அவனுக்கு மட்டும்தான். அடுத்து, ஏன் செல்லவேண்டும் என்பதற்கான காரணத்தைக் கூறுகிறான். நெகேமியா வேடிக்கை பார்ப்பதற்காக சுற்றுலா செல்லவில்லை, அல்லது துப்பறியும் பணிக்காக அவன் அங்கு செல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட பணிக்காக வேலை செய்ய - உழைக்க - அந்ந உழைப்பு - ஒன்றைக் கட்ட. இங்கே நாம் காணும் நெகேமியா, உழைப்பின் அவசியத்தை
மேற்கொள்ளுகிறான். அவன் அதற்காக அழுதான். அதற்காகவே ஜெபித்தான். உபவாசித்திருந்தான். நன்கு திட்டமிட்டிருந்தான்.

வசனம் 2:6

அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிராயணம் எத்தனைநாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பிவருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று.

இராஜா இரண்டு கேள்விகள் கேட்பதை நாம் காண்கிறோம். அதற்குமுன் இராஜஸ்திரியைப் பற்றியும் வேதம் கூறுகிறது. அவளுடைய பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை. ஆனால் இராஜஸ்திரியும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள் என்று நாம் வாசிக்கிறோம். இந்தக் கேள்விகளும் உரையாடலும் நடக்கும்போது இராஜஸ்திரீயும் அருகில் இருந்தாள் என்று காண்கிறோம். ஆகையால் இந்த நடைமுறைகள் ஒரு தனி அறையில்
நடைபெற்றிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு.
இராஜா கேட்ட கேள்விகள்:
1. உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும்?
2. நீ எப்பொழுது திரும்பி வருவாய்?

இந்தக் கேள்விகளுக்கு சரியான விடை அறிந்திருந்த நெகேமியா அதைக் கூறுகிறான். அப்போது இராஜா அவனை அனுப்ப சம்மதிக்கிறான். நெகேமியா என்னை அனுப்பும் என்ற வார்த்தைகளையே பயன்படுத்துகிறான். தன்னைப் போகவிடும்படி இராஜாவினிடத்தில் கேட்கவில்லை. ஆனால் அனுப்பும்படி கேட்கிறான். அந்தப் பயணத்தில், அப்படி அனுப்புவதனால் இராஜாவிற்கும் ஒரு பங்கு இருக்கிறது. இராஜா நெகேமியாவை அனுப்புகிறான். எகிப்து தேசத்தில் பார்வோன் இராஜா அப்படிச் செய்யவில்லை. மோசே கேட்டது, என் ஜனங்களைப் போகவிடு என்பது. ஒரு முழுப்பயணமாக பார்வோனைவிட்டுப் போக அவர்கள் விரும்பினார்கள்.

வசனம் 2:7

பின்னும் நான் ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் தேசத்துக்குப்போய்ச் சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்கு கடிதங்கள் கொடுக்கும்படிக்கு,

அடுத்து நெகேமியா, தனக்குத் தேவையானது என்னவென்று, இராஜாவினிடத்தில் கேட்டான். யூதா தேசத்திற்குப் போய்ச் சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படி அவன் கேட்டான். அக்கடிதங்கள் அவனை இராஜாதான் அனுப்பினான் என்று காட்டும். ஆகையால் அவனுடைய பயணம் எளிதாய் அமையும் என்று எண்ணுகிறான். நாம் கிறிஸ்துவினால் இருதயங்களில் எழுதப்பட்டும் சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற நிருபங்களாக இருக்கிறோமா (2.கொரி.2:3)? மக்கள் உங்களைப் பார்க்கும்போது இராஜாதி இராஜனாகிய கிறிஸ்துவினால் அனுப்பப்பட்டவன் என்று அவர்கள் நினைக்கக்கூடுமோ? நெகேமியா புறப்படவேண்டிய நேரத்தைக் குறித்தபின் அவன் எருசலேமுக்குப் புறப்பட்டான். அவன் புறப்படுவதை எதுவும் தடுக்கக்கூடாது என்று விரும்பினான். ஆபிரகாமின் வேலைக்காரனும் அவன் திரும்புகையில் யாதொன்றும் அவன் பணியைத் தடுப்பதை அவன் விரும்பாமல் கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க நீங்கள் எனக்குத் தடை செய்யாதிருங்கள் என்றான் (ஆதி.24:25).


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.