நெகேமியா விளக்கவுரை 4:1-5

வசனம் 4:1-2
நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத்து கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, ய+தரை சக்கந்தம்பண்ணி: அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான்.

தேவனுடைய வேலைகள் செய்யப்படும்போது, எதிரிகளின் தாக்குதல்கள் ஏற்படுதல் என்பது எப்போதும் நடக்கிறதொன்றேயாகும். சன்பல்லாத்திடம் இருந்துதான் மறுபடியும் தொல்லைகள் ஆரம்பமாயின. அலங்கங்கள் கட்டப்படுகின்றனவென்று கேள்விப்பட்டவுடன் கேள்விப்பட்டவுடன் அவன் மிகவும் கோபங்கொண்டான். சாதாரணமாகக் கட்டப்படும் அந்தச் சுவரின் வேலை அவனுக்குக் கோபமூட்டடியது ஏன்? அந்த மதில்கள் இடிபாடுகளாக இருப்பதையே அவன் பார்த்துக்கொண்டிருக்க விரும்பினானோ? அவன் ஒரு சாதாரண முறைத்தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தான். இழிவுபடுத்திப் பேசும் முறைதான் அது. அந்த எளிமையான யூதர்களைச் சக்கந்தம் பண்ணினான். அவர்கள் என்ன செய்துவிடுவார்கள்? தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களால் கூடுமோ? சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர்கொடுப்பார்களோ? அவைகளைக்கொண்டு அந்தச் சுவர்களைக்கட்டி முடிப்பார்களோ? என்றெல்லாம் முட்டாள்தனமாகக் கேள்வி கேட்டான் அவன். அவர்கள் ஆரம்பித்தது மிகவும் மிகவும் பெரியதானதொரு வேலை என்பதனை அந்த ய+தர்கள் நன்கு அறிவர். கற்கள், வேண்டிய அளவிற்குக் கிடைத்தன. ஆனால் எரித்து அழிக்கப்பட்டுப்போன கதவுகள் தான் சரிசெய்யப்பட வேண்டியிருந்தன (1:3, 2:13). ஆனால் சன்பல்லாத்து மிகவும் கோபமடைந்திருந்ததினால் நேரே சமாரியாவின் சேனைகளிடம் சென்று, மற்றும் அந்நகரத்தின் முக்கிய மனிதர்களையும் சந்தித்து, மேற்கண்ட கேலிப் பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்தான்.

வசனம் 4:3
அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.

தொபியாவும்
சன்பல்லாத்துடன் அவனது சக்கந்தகப் பேச்சுக்களினாலே சீக்கிரமே சேர்ந்து கொண்டான். அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்து போகும் என்றான் அவன். அவர்களிருவரும், யூதர்கள் செய்யும் முயற்சிகளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது மதில்கள் கட்டப்பட ஆரம்பமாகி வளர்ந்துவருகிறதைப் பார்த்து அந்த யூதர்களைப் பரிகாசம் செய்து தாக்க முற்பட்டனர். இன்றைக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையும், தேவனுக்கடுத்த வேலைகளையும் கண்டு சத்துருக்கள் அவ்வாறே தாக்க முற்படுகின்றனர். நமது தன்னம்பிக்கைகளையும் செய்களையும் கண்டு பரிகசித்துச் சிரிக்கிறவர்களைக் கண்டு பொறுத்துக்கொண்டிருப்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கும். அத்தகைய பரிகாசச் சிரிப்புகள் ஒரே நேரடித்தாக்குதலைவிட மோசமானதாகும். அதை எதிர்ப்பது சற்று கடினமே.

வசனம் 4:4-5
எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்தில் சூறைக்கு ஒப்புக்கொடும். அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும். அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக. கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.

ஆனால் இத்தகைய இழிவான எதிர்ப்புகளை முறியடிக்க யாரிடமும் போக வேண்டும் என்பது நெகேமியாவிற்கு தெரியும் தேவனிடம் அவன் முறையிட்டான். நாம் சரிவரப் படித்துப் பார்த்தால் அவனுடைய அந்த ஜெபம் சற்று கடினமாகத்தான் தோன்றும். அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூரைக்கு ஒப்புக்கொடும் என்று ஜெபிக்கிறான். அது நியாயப்பிரமாண சட்டங்களின் காலம். இயேசு கிறிஸ்துவின் மரணத்தால் ஏற்பட்ட கிருபையின் காலம் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை. கிறிஸ்தேசு சிலுவையின்மீது செய்த வேண்டுதல், பிதாவே இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே (லூக்.23:24) என்பது நமக்காகத்தான் என்று நாம் அறிவோம். அந்த வேண்டுதலினால்தான் இன்று நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் (எபேசி.2:9) என்று வேதம் கூறுகிறது. நெகேமியா இத்தாக்குதல்கள் தேவன்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களே என்று கூறுகிறான். அவர்கள் எள்ளிப்பேசியது தேவனுக்கடுத்த வேலைகளையே. தேவன் அதற்காகக் கோபம் அடையவேண்டும். ஆகையால்தான் நெகேமியா தேவனிடத்தில் அவருடைய உதவிக்காக மன்றாடி ஜெபிக்கிறான்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.