நெகேமியா விளக்கவுரை 3:5-11

வசனம் 3:5
அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அவர்களுடைய
பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக்
கொடுக்கவில்லை.

அந்த வேலையைச் செய்து வந்தவர்களிடையே இங்கு முதன் முறையாக
ஒத்துழையாமையைக் காண்கிறோம். அதன் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக்
கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் பிரபுக்கள் வேலைக்குத் தோள்
கொடுக்கவில்லை. அல்லது அந்த வேலையில் தங்கள் பணியின்
ஒத்துழைப்பையும்கூடத் தரவில்லை. ஒருவேளை அவர்கள் பிரபுக்கள் என்ற
நிலையில் அந்த வேலை இழிவானது என எண்ணியிருக்கலாம். முன்மாதிரியாய்
இருக்கவேண்டியவர்களே, வேலையில் தேக்கம் காட்டுதல் எவ்வளவு விசனமான
காரியம். அது தேவனுக்கடுத்த திருப்பணி. நமது பங்கு ஏதுவாயிருந்தால் என்ன?
நகமான் எலிசாவின் உத்தரவிற்குக் கீழ்ப்படிய விரும்பாமல் போனபோது, அவனுடைய
ஊழியக்காரர் அவனைக் கடிந்து, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச்
செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா...?
(2.இராஜா.5:13) என்று கேட்டதும், நாகமான் கவனித்துத் தன்னைத் தாழ்த்திச்
செயல்ப்பட்டு குஷ்டரோகம் நீங்கப்பெற்றதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.
அதுபோல் ஒருவேளை அந்தப் பிரபுக்கள் செய்வதற்காக வேறு பெரிய வேலை
ஏதாகிலும் ஒப்படைக்கப்பட்டிருந்தால், மகிழ்ச்சியோடு அதனைச் செய்ய ஒப்புக்
கொண்டிருப்பாரன்றோ? ஆனால் இங்கே அவர்கள் மற்றவரைப்போலவும் சாதாரணமான
வேலை, இடிந்துபோன அலங்கங்களைக் கட்டும்வேலையை அவர்கள்
செய்யவேண்டியிருந்தது.

வசனம் 3:6
பழைய வாசலைப் பசெயாகின் குமாரனாகிய யோய்தாவும்,
பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும்
தாழ்பாள்களையும் போட்டார்கள்.

அடுத்துக் கூறப்பட்டுள்ள வாசல் பழைய வாசல். அந்த வாசலில் உத்தரம்
பாவுதல், கதவுகள் மாட்டுதல், தாழ்ப்பாள் பூட்டு அமைத்தல் ஆகிய பணிகளைச்
செய்யும் இரண்டுபேர் இங்கு குறிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கொருவர் உதவி
செய்யும்நிலை நன்றி பாராட்டலுக்குரியது. அந்த இருவரும் சேர்ந்து ஒரு
வாசலைக் கட்டி அமைத்தனர்.

வசனம்3:7
அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனுஷரான மெலதீயா என்னும்
கிபியோனியனும், யாதோன் என்னும் மெரொனோத்தியனும், நதிக்கு
இப்புறத்திலிருக்கிற அதிபதியின் சமஸ்தானமட்டும் பழுதுபார்த்துக்
கட்டினார்கள்.

மறுபடியும், வேற்று நகரத்தார் இங்கு வந்து பணியில் துணை நிற்பதைக்
காண்கிறோம். எருசலேமின் அலங்கங்கள் எல்லா ய+தர்களுக்கும் மிக
முக்கியமானது என்ற அளவில் அதனைக் கட்டும் பணியில் அனைவரும்
ஒத்துழைத்தனர்.

வசனம் 3:8
அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல்
பழுதுபார்த்துக் கட்டினான். அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய
அனனியா பழுதுபார்த்துக் கட்டினான். அதுமுதற்கொண்டு அகலமான மதில்மட்டும்
எருசலேம் இடிக்கப்படாமல் விட்டிருந்தது.

இங்கு இரு ஒவ்வா நண்பர்கள் அலங்கத்துப் பணிகளைச் செய்வதை நாம்
காண்கிறோம். ஒருவன் தட்டான் என்ற பொற்கொல்லன். மற்றவன் தைலக்காரன்.
அவர்கள் தங்கள் சொந்த அலுவல்களிலே மிகவும் நுட்பமான வேலைகளை மட்டும்
செய்பவர்கள். இங்கே கடுமையான உழைப்புப் பணியை மேற்கொள்கிறார்கள்.
சாக்குப் போக்குகள் ஏதும் சொல்லாமல், கட்டும் பணியைச் செய்கின்றனர்.
அகலமான மதில் மட்டும் அவர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

வசனம் 3:9
அவர்கள் அருகே எருசலேம்பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன்
ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான்.

இங்கே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஒருவன் மற்றவர்களுடன்
சேர்ந்து வேலைசெய்வதை நாம் வாசிக்கிறோம். தனது கையினால் வேலைசெய்து பழுது
பார்க்கும் பணியைச் செய்வது அவனுடைய மதிப்பிற்கு இழிவானது என அவன்
கருதவில்லை. இத்தகைய நிலையிலும் உழைப்பவர்களைக் காணும்போது எத்துணை
உற்சாகம் நமக்கு எற்படுகிறது.

வசனம் 3:10
அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப்
பழுதுபார்த்துக் கட்டினான். அவன் அருகே ஆசாப்நெயாவின் குமாரன் அத்தூஸ்
பழுதுபார்த்துக் கட்டினான்.

அடுத்து நாம் காணும் யெதாயா வீட்டிற்கே சாட்சியாக இருக்கிறான். அவன் தனது
சொந்த வீட்டின் எதிரிலேயே அலங்கங்களைப் பழுது பார்த்துக் கட்டுகிறான்.
தேவனுடைய வேலையைச் செய்ய இதுவே மிகவும் கடினமான சூழ்நிலை. நமது
வீட்டாரின் கண்முன் மற்றும் அயலகத்தாரின் கண்முன், ஆனால் யெதாயா
அதைத்தான் செய்தான். எல்லாரும் பார்க்கும்படி அவர்களின் கண்முன்னே
செய்தான். யெதாயா என்னும் வார்த்தைக்கு யெகோவாவைத் துதியுங்கள் என்பது
பொருள். அவன் தனது தியாகப்பணியின் மூலம் அதைத்தான் செய்தான். அடுத்துக்
கூறப்பட்டுள்ள மூவர் சூளைகளின் கொம்மைகள் வரை பழுது பார்த்துக்
காட்டினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.