வசனம் 3:12
அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய அலோகேசின்
குமாரன் சல்லூமும், அவன் குமாரத்திகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
இவ் வசனம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தருகிறது. ஒரு பிரபு சல்லூம் தனது
குமாரத்திகளுடன் சேர்ந்து பழுது பார்த்தக் கட்டுகிறான். இந்தச் சல்லூம்
எருசலேமின் மறுபாதிக்கு பிரபுவானவன். அது மிகவும் கடினமான உழைப்பு.
அவனுடைய குமாரத்திகள் என்ன வேலையைச் செய்ய முடிந்தது என்பது வேதத்தில்
கூறப்படவில்லை. ஆனால் அவர்கள் தந்தையோடு சேர்ந்து அந்தக் கடுமையான
வேலையில் பங்குகொண்டனர்.
இதுபோன்ற உழைத்த பல பெண்களைப்பற்றி வேதம் நமக்குக் கூறுகிறது. ரெபேக்கா
அந்த நகரத்து மனிதர்களின் குமாரத்திகளில் ஒருத்தி தண்ணீர் எடுக்க குடத்தை
தோளின்மேல் வைத்துக்கொண்டு வந்தாள். அந்நியனுக்கும் அவனுடைய
ஒட்டகங்களுக்கும் தண்ணீர்மொண்டு வார்த்தாள் (ஆதி.24:13-20). ராகேல் தனது
தகப்பனுடைய ஆட்களை மேய்த்துக்கொண்டிருந்தான் (ஆதி.29:9). ரூத் தனது மாமி
நகோமிக்காக நாள் முழுவதும் வயல்களிலே கதிர் பொறுக்கினாள். (ரூத் 5:17).
பவுல் அப்போஸ்தலனும் சுவிசேஷ ஊழியத்தில் தனக்கு உதவிசெய்த
பெண்களைப்பற்றிக் குறிப்பிடுகிறான் (பிலி.4:3). தேவனுடைய களத்திலே
எல்லாருக்கும் பணிகளில் சமபங்கு உண்டு.
வசனம் 3:13-14
பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக்
கட்டினார்கள். அவர்கள் அதைக் கட்டி, அதற்குத் கதவுகளையும் ப+ட்டுகளையும்
தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம்
முழம் கட்டினார்கள். குப்பைமேட்டு வாசலைப் பெத்கேரேமின் மாகாணத்துப்
பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து, அதைக் கட்டி,
அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டான்.
அடுத்துப் பள்ளத்தாக்கின் வாசல். இங்கிருந்துதான் நெகேமியா முதன்
முதலில், இரவு வேளைகளில் நகரின் இடிந்துபோன நிலைகளைச் சுற்றிப் பார்க்கப்
புறப்பட்டான். சானோவாகின் குடிகளும், ஆனுனூம் இந்தப் பள்ளத்தாக்கு
வாசலையும் அங்கிருந்து குப்பை மேட்டு வாசல் மட்டாக 1000 முழந்தூரம் உள்ள
அலங்கத்தையும் கட்டினார்கள். இப்போதும் குப்பை மேட்டு வாசலைக்கட்டுவது
யார்? நகரத்தின் குப்பைகள், நாள்தோறும் இந்த வாசல் வழியாகத்தான் வெளியே
கொண்டுபோய் எறியப்படும். குப்பை மேட்டு வாசலை ரெக்காவின் குமாரன் மல்கியா
பழுதுபார்த்துக் கட்டினான். அவன் ஒரு மகாணத்துப் பிரபுவாயிருந்தும் அந்த
இழிவான இடத்தில் தேவனுடைய பணிக்காகத் தன்னைத் தாழ்த்தி ஒப்புவித்து,
அப்பணியைச் செய்துமுடித்தான். அவனன்றோ ஓர் உண்மையான தலைவன்.
வசனம் 3:15
ஊரணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன்
சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, மச்சுப்பாவி, அதற்குக் கதவுகளையும்
பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டு, ராஜாவின் சிங்காரத்
தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவின் குளத்து மதிலையும், தாவீதின்
நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்மட்டாக இருக்கிறதையும் கட்டினான்.
2ம் அதிகாரம் 14ம் வசனத்திலே ஊரணி வாசல் அண்டையிலே நான் ஏறி இருந்த
மிருகம் கடந்து போகிறதற்கு வழியில்லாதிருந்தது என்று வாசிக்கிறோம்.
நெகேமியா நடந்து செல்ல வேண்டியிருந்தது. அங்கே சீர்திருத்தப்பட வேண்டிய
வேலை அதிகமாய் இருந்தது எனலாம். மிஸ்பாவின் மகாணத்துப் பிரபு சல்லூம்
என்பவன் இதைப் பழுதுபார்த்துக் கட்டினான். ஜீவனுள்ள தண்ணீர்களின்
ஊற்றாகிய கர்த்தர் (எரேமி.17:3).
இத்தகைய ஜீவனுள்ள ஆதாரமான ஊற்றுக்கள் அடைப்பட்டுப்போனால் நாம் அதிக
தொல்லைகளுக்கு உட்பட வேண்டியிருக்கும். சல்லூம் அதனைப் பழுதுபார்த்துக்
கட்டி, மச்சுப்பாவி அதற்குக் கதவுகளையும், ப+ட்டுகளையுமத்
தாழ்ப்பாள்களையும் போட்டு முடித்தான். அதன் பின்னர் அவன் மேலும் சென்று
இராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவின் குளத்து மதிலையும்
கட்டினான்.
வசனம் 3:16
அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மகாணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய
அஸ்ப+கின் குமாரன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடமட்டாகவும்,
வெட்டப்பட்ட குளமட்டாகவும், பராக்கிரமசாலிகளின் வீடுமட்டாகவும்
இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கிற நெகேமியா பெத்சூர் மாகாணத்தின்
பாதிக்குப் பிரபுவானவன் பானபத்திரக்காரனாக பாபிலோனில் இருந்து புறப்பட்டு
வந்த நெகேமியா 1:11 விலிருந்து வேறுபட்டவன். இவன் பராக்கிரமசாலிகளின்
வீடுமட்டாக இருக்கிறதைப் பழுது பார்த்துக் கட்டினான்.
வசனம் 3:17
அவனுக்குப் பின்னாக லேவியரில் பானியின் குமாரன் ரேகூமும், அவன் அருகே
கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபுவாகிய அசபியாவும்
பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
லேவியர்களும் ஆசாரியர்களைப்போலவே பணிசெய்து பிரதான ஆசாரியரின் வீட்டின்
மறுபக்கத்தில் உள்ள மதிலைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.