<p>
<h6 style="color:blue;">வசனம் 3:1
</p>
<p>
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய
ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டி, அவர்கள்
பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மைமுதல்
அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.</h6>
</p>
இந்த அதிகாரத்தின் செய்திகள் மற்ற அதிகாரங்களைவிட வேறுபட்டிருக்கிறதைக்
காண்கிறோம். வாசல்களையும், அலங்கங்களையும் கட்டுகிறவர்களின் வரலாற்றுப்
பட்டியலை இதில் காண்கிறோம். சிலர் குடும்பத்தினராகவும், சிலர்
குறிப்பிட்ட
தொழிலாளராகவும், சிலர் நகரத்தினராகவும் உள்ள வெவ்வேறு வகைப்பட்ட
குழுவினரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. குழு முயற்சிகள் எவ்வாறு
செயல்ப்படமுடியும் என்பதை இது காட்டுகிறது. ஒவ்வொருவரும் உழைக்க
உதவுகின்றனர்.
ஆசாரியர்களின்
குழுபற்றி முதலில்
குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளனர்.
எலியாசீயும் அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டு வாசலைக்
கட்டினார்கள். தங்கள் பணியை, அந்த வாசலைப் பிரதிஷ்டை செய்தபின்
ஆரம்பிக்கின்றனர். தங்களுடைய பணிகளிலே தேவனுடைய ஆசீர்வாதம்
இருக்கத்தக்கதாய், ஜெபத்தோடு தங்கள் பணியைத் துவங்க ஆரம்பிக்கின்றனர்.
ஆகையால் முதல் பணி முடிந்தவுடன் அதனைத் தேவனுக்கு பிரதிஷ்டை
செய்கிறார்கள். நாம் நமது காரியங்களைத் தேவனுக்குப் பிரதிஷ்டை
செய்கிறோமா?
தங்கள் பணியைத் துவங்குவதற்கு ஆட்டுவாசல், ஆசாரியர்களுக்கு மிகவும்
ஏற்றதென காணப்பட்டது போலும். அந்த வாசல் வழியாகத்தான் ஆசாரியர்களால்
பலியிடப்படுவதற்கு ஆடுகள் நகரத்திற்குள் கொண்டுபோகப்பட்டன. அது
மக்களுக்காகச் செலுத்தப்பட்ட பலி. ஆடு என்பது கர்த்தராகிய இயேசுவுக்கு
முன்னறிவிப்பான ஓர் அடையாளம். அவர் தேவ ஆட்டுக்குட்டியன்றோ!
அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும் தன்னை
மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும்,
அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார் (ஏசா.53:7). அவர்கள் ஆட்டுவாசலிலே
முதற் பணியைத் துவங்கினார்கள். ஆட்டுக்குட்டியின் பலி முதலில்
வரவேண்டுமன்றோ!
அதன்பிறகு ஆசாரியர்கள் அந்த வாசலின் கதவுகளைப் பொருத்தினார்கள்.
அங்கிருந்து மேயா என்கிற கொம்மைக்குச் சென்று அதைக் கட்டி முடித்துப்
பிரதிஷ்டை செய்தனர். அடுத்து அனானெயேலின் கொம்மைக்குச் சென்று அதைக்கட்டி
பிரதிஷ்டை செய்தார்கள் (கொம்மை என்பது கோபுரமான ஓரு கட்டடம்).
வசனம் 3:2
அவன் அருகே எரிகோவின் மனுஷர் கட்டினார்கள். அவர்கள் அருகே இம்ரியின்
குமாரனாகிய சக்கூர் கட்டினான்.
ஆசாரியர்கள் கட்டத் துவங்கி வேலைசெய்துகொண்டிருந்தபோது அவர்களின் அருகே
எரிகோவின் மனுஷர் கட்டிக்கொண்டிருந்தனர். எரிகோ பட்டணம் ஒரு சபிக்கப்பட்ட
பட்டணம் ஆகும் (யோசு.6:26, 1.இராஜா.16:34). ஆனால் அந்த சபிக்கப்பட்ட
நகரமாகிய எரிகோவின் மக்கள், எருசலேமின் அலங்கங்களைக் கட்ட உதவிசெய்தனர்.
கர்த்தர் சாபத்தின் முடிவுகளைக்கூட ஆசீர்வாதங்களாக மாற்ற வல்லவராய்
இருக்கிறார். கிறிஸ்து..... சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி
மீட்டுக்கொண்டார்.
(கலா.3:13). ஆகையால் இவர்கள் சாபத்தின் பட்டணத்தை விட்டு ஆசீர்வாதத்தின்
பட்டணத்தைக் கட்டவந்தனர். அதற்கு அப்பால் சக்கூர் என்ற தனி மனிதன்
அலங்கத்தைக் கட்டும் பணியைச் செய்வதைக் காண்கிறோம். கர்த்தர் நம்மைக்
கூட்டமாகவோ அல்லது தனிமையாகவோ பயன்படுத்த வல்லவராய் இருக்கிறார். சக்கூர்
என்ன வேலைசெய்து கொண்டிருந்தான் என்று வேதம் நமக்குக் கூறவில்லை. ஆனால்
அது கர்த்தருக்குத் தெரியும். கர்த்தருடைய வேதத்தில் அவன் பெயர்
குறிக்கப்பட கர்த்தர் கிருபை செய்துள்ளார்.
கூட்டமாகவோ அல்லது தனியாகவோ அவர்கள் வேலைசெய்தனர். ஒருவர் மற்றவரின்
வேலையில் தலையிடவில்லை. அல்லது பிறர்வேலையைக் குற்றப்படுத்தவில்லை,
அல்லது பொறாமைப்படவுமில்லை. அவரவர் வேலையில் கடுமையாக உழைத்தனர். அது
வியத்தகு ஒற்றுமையான பணியாகும்.
வசனம் 3:3
மீன்வாசல் அசெனாவின் குமாரர் கட்டினார்கள். அதற்கு உத்தரம்பாவி, அதற்குக்
கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டார்கள்.
அடுத்து மீன்வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள். அதன் உத்திரங்கள்
நிலைநிறுத்தி கதவுகளை மாட்டி அதன் தாழ்ப்பாள்களையும் பூட்டுகளையும்
போட்டார்கள்.
வசனம் 3:4
அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரேமோத்
பழுதுபார்த்துக் கட்டினான். அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய
பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்.
அடுத்து பழுது பார்த்துக்கட்டிய மூன்றுபேரைப் பற்றி வேதம் கூறுகிறது.
1.கொரிந்தியர் 12:28ல் தேவனுடைய சபையில் உள்ள வெவ்வேறான ஊழியங்களைச்
செய்கிறவர்களைக் குறிப்பிட்டு அப்போஸ்தலர், தீர்க்கதரசிகள் முதலியவர்கள்
உள்ளது விளக்கப்பட்டு இருக்கையில் ஊழியம் என்ற ஒரு சிறுவார்த்தை
பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். நாம் ஒருவேளை அப்போஸ்தலராகவோ,
தீர்க்கதரிசிகளாகவோ, அல்லது போதகர்களாகவோ இல்லாமல் போகலாம். ஆனால்
உதவியாளர்களாக நிச்சயமாகப் பணியாற்ற முடியும். இங்கே இருந்த பலரும்கூட
இடிந்துபோன அலங்கங்களைக்கட்ட மிகவும் உதவினார்கள். நீங்கள்கூட
சிதைந்துபோன வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஓர்
உதவி செய்யக்கூடும் அல்லது உமது சபையில் தேவஆலயத்தில் ஒரு வேலையில் உதவி
செய்யமுடியும். தேவன் உனக்குத் தந்த வரங்களின்படி நீ ஏதாவது நல்லது
ஒன்றைச் செய்ய முடிந்தால் அதைத் தவறாமல் செய்வாயாக.