வசனம் 3:18-20
அவனுக்குப் பின்னாக அவனுடைய சகோதரரில் கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப்
பிரபுவாகிய எனாதாதின் குமாரன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான். அவன்
அருகே மிஸ்பாவின் பிரபுவாகிய யெசுவாவின் குமாரன் ஏசர் என்பவன் மதிலின்
கோடியிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப்
பழுதுபார்த்துக் கட்டினான். அவனுக்குப் பின்னாகச் சாபாயின் குமாரன்
பாரூக் அந்தக் கோடி துவக்கிப் பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின்
வாசற்படிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே
பழுதுபார்த்துக் கட்டினான்.
அடுத்தடுத்துள்ள அலங்கங்கள் கட்டப்பட்டன. 29ம் வசனத்தில் பாரூக் என்பவன்
பிரதான ஆசாரியனின் வீடு மட்டும் இருக்கிற பங்கை வெகு ஜாக்கிரதையாகக்
கட்டினான் என்று வாசிக்கிறோம். தேவனுடைய பணியில் மிகவும் கவனத்துடன்
வெகுஜாக்கிரதையாக வேலைசெய்தல் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும்.
நாம் செய்யும் வேலைகள் கடமையுணர்வுடன் வெகு ஜாக்கிரதையாகச்
செய்யப்படுகின்றனவா?
வசனம் 3:23
அவர்களுக்குப் பின்னாகப் பென்ஜமீனும், அசூபும், தங்கள் வீட்டுக்கு எதிரே
இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அவர்களுக்குப் பின்னாக
அனனியாவின் குமாரனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன் வீட்டின் அருகே
இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
இவ்வசனத்தில் தங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கிறதைப் பழுது பார்த்தக்
கட்டினார்கள் என்று வாசிக்கிறோம். சகோதரனே, உனது வீட்டிற்கு எதிரே
இருக்கிறவர்களிடம் நீ தேவனுடைய வார்த்தைகளைப்பற்றிப் பேசுவதுண்டா?
வசனம் 3:26
ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற
தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும்
கட்டினார்கள்.
நீதனிமீயரைச் (கோயில் பணியாளர் வழிவந்தோர்) சேர்ந்த மனிதர்கள் தண்ணீர்
வாசல்வரை கட்டினார்கள். இந்தத் தண்ணீர் வாசல் நீரூற்றிற்கு எதிரே கிழக்கு
மதில்களில் நடுப்பகுதியண்டை உள்ளது. தண்ணீர் கடவுளுடைய வார்த்தைக்கு
ஒப்பிடப்பட்டுள்ளது. (எபேசி.5:26, சங்.119:9). இந்தத் தண்ணீர் வாசல்
மதில்கள் பழுதுபார்க்கப்படவில்லை என்ற செய்தி சற்று வியப்பாகவேயுள்ளது.
கர்த்தருடைய வார்த்தை பழுது அடைவதேயில்லை.
வசனம் 3:27
அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரார் வெளிப்புறமான பெரிய கொம்மைக்கு
எதிரே ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக்
கட்டினார்கள்.
சில குழுவினர் ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களையும் பழுது பார்த்தனர்.
தெக்கோவா ஊரார் அவ்வாறுதான் செய்தனர். தெக்கோவா ஊராரின் பிரபுக்கள்
இந்தப் பணிக்குத் தோள் கொடுக்கவில்லையென்றும் 50ம் வசனத்தில் வாசித்தோம்.
ஆனாலும் ஊரார் இரு மடங்காகச் செய்தனர்.
வசனம் 2:28
குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே
இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
மறுபடியும் ஆசாரியர்கள் பணியில் முன் மாதரியாகத் தங்கள் தங்களின்
வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள். இது
குதிரை வாசல் முதற்கொண்டு நடைபெற்றது. வேதத்திலே குதிரைகள், யுத்தத்தோடு
சம்பந்தப்படுத்தித்தான் பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளது. நமது யுத்தமோ
நமது எதிரியான சாத்தானோடுதான் உள்ளது. இந்தக் கொடுரமான குதிரை
வாசலண்டையில்தான், அரசியாயிருந்த அத்தாலியாள் கொடுரமாகக் கொன்று
போடப்பட்டாள் (2.நாளா.23:15).
வசனம் 2:29
அவர்களுக்குப் பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே
இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான். அவனுக்குப் பின்னாகக் கிழக்கு
வாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக்
கட்டினான்.
அடுத்த இருவர் சேர்ந்து அடுத்த இடங்களில் பழுதுபார்த்துக் கட்டுவதை வேதம்
கூறுகிறது. அவர்களில் இரண்டாமவன், கிழக்கு வாசலைக் காக்கிறவன். அவன் தனது
வாசல் சூரியனை நோக்கி, நிமிர்ந்து ஒழுங்காக இருக்கவேண்டுமென்ற
விரும்பியிருப்பான்.
வசனம் 2:30
அவனுக்குப் பின்னாகச் செல்மீயாவின் குமாரன் அனனியாவும், சாலாபின் ஆறாவது
குமாரனாகிய ஆனூனும், வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
அவர்களுக்குப் பின்னாகப் பெரகியாவின் குமாரன் மெசுல்லாம், தன்
அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ஆனூன் என்பவன் சாலாபின் ஆறாவது
குமாரன் என அறிகிறோம். மற்ற ஜந்து மகன்கள் என்ன ஆனார்கள்? வேதம்
அதைப்பற்றிக் கூறவில்லை. சலாப் என்பதற்கு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பது
பொருள் அவனை அவனது தியாகப் பணிகளுக்காக கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
மெசுல்லாம் என்பவன் தன் அறைவீட்டிற்கு எதிரே இருக்கிறதைப் பழுது
பார்த்துக் கட்டினான்.
வசனம் 3:31-32
அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும்
வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல்
கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
கோடியின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதைத்
தட்டாரும் மளிகைக்காரரும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
இங்கே தட்டாரும், நீதனீமியரும், மளிகைக்காரரும் அடுத்தடுத்த
பழுதுபார்க்கும் பணிகளைச் செய்வதை வேதம் கூறுகிறது. நாம் நகரத்தைச்
சுற்றிலும் மதில்களைப் பழுது பார்த்துக் கட்டியவர்களைப்பற்றிப் படித்து
மறுபடியும் ஆட்டுவாசலின் அருகே வந்து அங்கு நடைபெறும் பணியைப்பற்றி
வாசிக்கிறோம். இதிலிருந்து எல்லா தொழில் செய்வோரும் ஆசாரியர்கள்
மட்டுமின்றிக் கட்டும் பணியைச் செய்தனர். பலதரப்பட்ட மக்களும் சேர்ந்து,
ஒவ்வொருவரின் திறமைக்குத் தக்கதாக தேவபணியைச் செய்ய வேண்டுமென்பதே முறை
என்று நாம் அறிய முடிகிறது.
இவ்வாறாக எருசலேமின் அலங்கங்களையும் மதில்களையும் பற்றிய செய்தியினை நாம்
அறியமுடிகிறது. இதுதான் தேவனுடைய திருப்பணியின் சிறப்பாகும். கர்த்தர்,
நம்மை நமது வேலை, திறமை, தகுதி, கல்வி எது எத்தகையதாயினும் தமது
திருப்பணிக்கு இசைய வைக்க வல்லவராயிருக்கிறார்.