பர்த்தலோமேயு சீகன்பால்க் (பாகம் 3)
இந்திய கிறிஸ்தவர்களுக்காக கட்டிய முதல் ஆலயம்:
இந்திய திருச்சபையின் எதிர்காலத்தைக் குறித்து பெரும் எதிர்பார்ப்பு சீகன்பால்க்குக்கு இருந்தது. அவரது அருட்பணி பலனளித்து 1707-ல் ஆண்டு மே 12-ம் நாள் போர்த்துகீசிய மொழி பேசும் 5 இந்தியர்கள் இயேசுவை இரட்சகராக அறிக்கைப் பண்ணி, திருமுழுக்குப் பெற்று இயேசுவில் தங்களுக்கிருந்த மகிழ்ச்சியை
அறிக்கையிட்டனர். விரைவில் தங்களுக்கென ஒரு ஆலயம் கட்ட வேண்தியதின் தேவையை உண்ர்ந்தனர். அவர்கள் ஐரோப்பியர் ஆலயங்களில் உட்காரத் தயங்கினர். இந்தியருக்கென தனி ஆலயம் அமைக்கும் திட்டத்தை வெகுவாய் ஆட்சேபித்து, ஆலயம் கட்ட இடம் தர ஐரோப்பிய ஆளுநர் மறுத்தார்.
இருப்பினும் ஆதரவு இல்லாமையால் ஆலயம் கட்டும் திட்டம் நின்று விடவில்லை. விரைவிலேயே ஓர் இடம் கிடைத்து ஆலயம் எழுப்பப்பட்டது. ஆலயம் கட்ட பணம் குறைவு பட்ட போது மிஷனரிகள் தங்கள் சம்பளத்தில் பகுதியை கொடுத்தும் ஸ்தல மக்கள் உதவி செய்தும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 1707-ம் ஆண்டு 14-ம் நாள் இந்திய கிறிஸ்தவர்கள் பேரானந்திக்க ஆலயம் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. பின்னர் கிறிஸ்தவர்கள் பெருகிய போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புது எருசலேம் என்ற பேராலயமாக 1717-ம் ஆண்டு பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. இதுவே இன்றும் லூத்தரன் திருச்சபையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கிராமத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது:
கிறிஸ்தவரல்லாத இந்தியர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் சீகன்பால்கிற்கு மிகுந்த ஆவலும் வாஞ்சையும் இருந்தது. இவர்கள் எவ்வித பயமும் கவலையுமின்றி தங்கள் இறைவணக்கத்தைச் செய்து வந்தனர். இவர்களுக்கு நற்செய்தியை திறம்பத அறிவிக்க தமிழ் மொழியையும் மக்களின் கலாச்சாரத்தையும் சீகன்பால்க் கற்றறிருந்து அவர்களின் உணர்வுகளையும் கண்ணோட்டத்தையும் நன்கு புரிந்து கொண்டார்.
சீகன்பால்க் தனது நேரத்தை மொழி கற்றல், திருமறை மொழியாக்கம், குழந்தைகள் காப்பகம் மற்றும் பள்ளியை பராமரிதல் போன்றவற்றிற்கு செலவழித்ததோடு தூர இடங்களில் காணப்பட்ட கிராமங்களுக்கும் சென்று நற்செய்தியை பிரசங்கிக்கவும் செய்தார். சென்னைக்கும் கடலூருக்கும் அவர் விஜயம் செய்தபோது கிராமங்களைச் சந்தித்து வழியில் நற்செய்தியை பிரசங்கித்து வந்தார். நற்செய்தியை அந்தணர்களோடு விவரித்தும் தாழ்ந்த ஜாதியினருக்கு அறிவித்தும் வந்தார். போதுமான ஆன்மீக வழிநடத்துதல் இல்லாமலிருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தனது அருட்பணியைச் செய்தார்.
திருமறைத் தமிழாக்கம்:
திருமறைத் தமிழாக்கம் சீகன்பால்க் தமிழ் திருச்சபைக்கு ஆற்றிய முக்கிய தொண்டாக கருதப்படுகின்றது. மிகக்குறுகிய காலத்தில் கற்பதற்கு கடினமான தமிழ் மொழியை பிழையறக் கற்று பண்டிதரானார். விரைவில் திருமறையைக் தமிழில் மொழியாக்கம் பணியைத் துவங்கினார். ரோமன் கத்தோலிக்கர்களால் உருவாக்கிய தமிழ் பதங்களைக் கொண்ட அகராதியை அவர் பயன்படுத்தினார். புதிய ஏற்பாட்டு தமிழாக்கம் நிறைவுப்பெற்று 1713 ல் அச்சடிக்கப்பட்டது. பழைய ஏற்பாடும் ரூத் புத்தகம் வரை அவர் மொழிப் பெயர்த்திருந்தார். பின்னர் வந்த மிஷனரிகள் மீதமுள்ள நூற்களை முடித்து முழு திருமறையையும் தமிழில் தந்தனர். இந்த மொழியாக்கம் பெப்பிரிஸியஸ் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவ்விதமாக இந்திய மொழிகளில் தமிழ்மொழி தான் முதன் முறையில் திருமறையை பெறும் வாய்ப்பை பெற்றது.
தமிழ் இலக்கண நூல் பதிக்கப்பட்டது:
சீகன்பால்க் மொழியாற்றல் பெற்றவராயிருந்தார். அவர் இந்தியா வந்த ஒரு வருடத்திலேயே தளர்படமாய் தமிழைப் பேசியதைக் கண்ட தமிழர் மெய்சிலிர்த்தனர். நல்ல தமிழ் ஆசிரியர்களின் நூற்களை அனுதினமும் படித்தார். நல்ல ஆழ்ந்த வாக்கிய அமைப்புகளை மறுபடியும் படித்து மனதில் பதித்துக்கொண்டார். ஒரே வார்த்தையையோ ஒரே உச்சரிப்பையோ பலமுறைச் சொல்ல அவர் அலுத்ததே இல்லை. இந்த அயராது உழைப்பின் உயர்வாக தமிழில் இலக்கண நூலை அவர் தயாரிக்க முடிந்தது. அவர் ஹாலே பட்டணத்தில் 1715 ல் ஆண்டு இந்த இலக்கண நூல் அச்சகப் பணியை நேரடியாக கண்காணித்தார். இப்படி தமிழ் மொழிக்கு பெருந்தொண்டாற்றி வருங்கால மிஷனரிகள் தமிழ் மொழியை எளிதில் கற்க பெரிதும் உதவி புரிந்தார்.
திருமறைக் கல்லூரி நிறுவப்பட்டது:
சீகன்பால்க் தொலைத் தூரப் பார்வையுடன் எதிர்காலத்தை நினைவிற் கொண்டு வருங்கால திருச்சபைத் தலைமைத் துவத்திற்காக இந்திய கிறிஸ்தவர்கள் பயிற்றுவிக்கப்பட்ட வேண்டுமென உணர்ந்தார். இந்த தரிசனத்துடன் எட்டுப்பேரைக் கொண்டு 1716 ல் தரங்கம்பாடியில் தான் முதன் முதலில் இந்தியாவில் சீர்திருத்த திருச்சபை இறையியலை இந்தியாவில் புகட்டியது. அநேகர் கிராம நற்செய்தி மற்றும் போதக அருட்பணிக்காக இங்கு பயிற்றுவிக்கப்பட்டனர். இப்பயிற்சிக்காக தமிழ் திருச்சபையை சேர்ந்த மக்களை மிகக் கவனத்துடனும் பொறுப்புடனும் தெரிந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பின்னர் வந்த மிஷனரிகளும் சீகன்பால்க்கினால் ஏற்படுத்தப்பட்ட பயிற்சி முறைகளைக் கையாண்டனர். இதன் விளைவாக 1733 ம் ஆண்டிலேயே இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவரான ஆரோன் என்பவர் தமிழ் லுத்தரன் திருச்சபையின் முதல் போதகராய் போதகாபிஷேகம் செய்யப்பட்டார். இந்திய கிறிஸ்தவர்களை அருட்பணிக்காக பயிற்றுவிக்க ஒரு மிஷனரிக்கு தனிப் பொறுப்பு கொடுக்கப்பட்டு ஒதுக்கப்பட வேண்டுமென்று சீகன்பால்க் மிஷன் தலைமைக்கு பரிந்துரையும் செய்தார்.