இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி:
பர்த்தலோமேயு சீகன்பால்க் (பாகம் 2)
மிஷனரிப் பணி அழைப்பு:
சீகன்பால்க்கின் இறையல் பயிற்சி நாட்களில் திருச்சபை போதக அருட்பணிக்குப் பல இடங்களிலிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் மிஷனரி அருட்பணியில் அவர் கொண்டிருந்த பேராவலும் அதற்கு அவர் செய்த அர்ப்பணிப்பும் மற்ற பணிகளின் அழைப்பை ஏற்றுக்கொள்ளாது மறுப்பு செய்ய உதவின.
நான்காம் பிரடெரிக் மன்னை தென்னிந்தியக்குடி அமைப்பிற்கு மிஷனரிகளை அனுப்பி
கிறிஸ்தவரல்லாதோர் மத்தியில் அருட்பணியாற்றிட பேராவல் கொண்டிருந்தார். இளைஞனாய் ஹாலேயில் இறைஇயல் பயின்றுக் கொண்டிருந்த சீகன்பால்கிற்கு மிஷனரி அழைப்பு மன்னர் சார்பில் அளிக்கப்பட்டது. உண்மையில் இந்த அழைப்பினால் அவர் இறைஇயல் கல்வியை அப்போது தான் ஆரம்பித்திருந்ததாலும் அவரது உடல்நிலை மோசமாயிருந்ததாலும் அவரது வாலிபம் மிஷனரி அழைப்பை ஏற்றுக் கொள்ள முதலில் தயாராக இல்லை. அவர் மிஷனரி அழைப்பை ஏற்றுக்கொள்ளச் சற்று தயக்கம் காட்டியதற்கு காரணமே அவரால் மிஷனரி பணியை நன் முறையில் நிறைவேற்ற முடியாது என்ற எண்ணமே தவிர அது தீர்வான மறுப்பில்லை. பின்னர் அந்த அழைப்பை தூர தேசத்தில் அருட்பணி செய்யும் படியாக இறைவனே தந்த அழைப்பாக எண்ணி அதனை ஏற்றுக் கொண்டார். சீகன்பால்க்கின் பெயரும் ஹென்றி புளுட்சோவின் பெயரும் டென்மார்க்கிலுள்ள கோப்பனேகனுக்கு அனுப்பப்பட்டது. அரசாணையின்படி இந்த இரு இறைஇயல் மாணவர்களும் லூத்தரன் பேராயரால் குரு அபிஷேகம் பண்ணப்பட்டனர். பின்னர் அரச குடும்பத்தினர் இவர்கள் இருவரையும் சிறப்பு விருந்தினராக அரச மாளிகைக்கு அழைத்தனர்.
அப்போஸ்தலர் நடபடிகளின் நூலின் அடிப்படையில் ஓர் சிறப்பு செய்தியை மன்னரின் குடும்பத்திற்கு சீகன்பால்க் அளித்தார். அந்த நாள் முதல் அரச குடும்பத்துடன் மிகுந்த நட்பு ஏற்பட்டது. அவரது மரணம் வரை அந்த நட்பு தொடர்ந்தது. பல தேசங்களைக் குறித்து சிந்தித்தப் பின்னர் இந்தியாவிற்கு மிஷனரிகளை அனுப்ப பிரடெரிக் மன்னர் தீர்மானித்தார். புளூட்சோ, சீகன்பால்க்கை விட சற்று திறமை குறைந்தவராகயிருந்தபடியால் அவர் பின்னணியில் தான் செயல்பட்டார். இருப்பினும் இவ்விருவரும் ஒன்றுபட்டு ஒரு நல்ல மிஷனரி அணியாகத் திகழ்ந்தனர்.
தரங்கம்பாடி வருகை:
இளம் மிஷனரிகளான சீகன்பால்க்கும் புளுட்சோவும் 1706ம் ஆண்டு ஜூலை 6ம் நாள் தமிழ்நாட்டின் காயிதேமில்லத் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி வந்து சேர்ந்தனர். தரங்கம்பாடியில் டென்மார்க் குடியமைப்பு ஆளுநரும் மற்றும் ஐரோப்பிய போதகர்களும் மிஷனரிகளுக்கு நல்வரவு அளிக்கவில்லை. தரங்கம்பாடிக்கு வர அனுமதியாமல், மூன்று நாட்கள் கப்பலில் தங்கும் நிர்பந்தத்தை ஆளுநர் ஏற்படுத்தினார். பட்டணத்திற்குள் வந்த பிறகும் சந்தைவெளியில் பலமணிநேரம் கொளுத்தும் வெயிலில் அதிகாரிகளால் கைவிடப்பட்ட நிலையில் எங்கே தங்குவதென திகைத்து நின்றனர். அவர்களை யாரும் சட்டை பண்ணவில்லை.
அனைத்து சூழ்நிலைகளும் அவர்களுக்கு எதிராய் செயல்பட்டன. டென்மார்க் அரசனால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் என்று மக்கள் இவர்களை
சந்தேகிக்கலாயினர். ஆனால் அதைரியப்படாது இந்தியாவில் சீர்திருத்த திருச்சபை முதல் மிஷனரிகள் அனைத்து பிரச்சனைகளையும் துன்பங்களையும் சகித்தனர். பின்னர் அடிமைகளாக எண்ணப்பட இந்திய ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் சென்று தங்கினர். மனிதனால் கைவிடப்பட்டும் தேவனால்
நெகிழப்படவில்லை
இந்த கொடூர எதிர்ப்புகள் மத்தியிலும் தனது அருட்பணியாளருக்கு உதவி செய்ய ஆண்டவர் ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். அவர்கள் படகிலிருந்தபோது முதலியப்பா என்ற இந்திய இளைஞன் அவர்களுக்கு உதவியாயிருக்க முன் வந்தான். அத்துடன் இராணுவத்தில் பணியாற்றிய ஜெர்மானிய படைவீரர் அவருக்கு பக்கபலமும் பண உதவியும் அளிக்க முன் வந்தனர். விரைவில் வெகு விமரிசையாக சீகன்பால்க் தன் மிஷனரிப்பணியை ஆரம்பித்தார்.
இந்திய குழந்தைகளுக்கு தங்கும் வசதி கொண்ட பள்ளிகூடம் நிறுவினார்:
இந்திய அடிமைகளோடு மிஷனரிகள் வாழ்ந்தபடியால், அவர்கள் மத்தியில் தங்கள் முதல் அருட்பணியை ஆரம்பித்தனர். குடியமைப்பில் வாழ்ந்த ஐரோப்பியர்களின் இல்லங்களில் பணியாற்றிய இம்மக்களின் ஏழ்மை சீகன்பால்க்கை மிகவும் ஈர்த்தது.
முதல் மிஷனரிப் பள்ளி இந்த அடிமை மக்களின் குழ்ந்தைகளுக்காக ஆரம்பமாயிற்று. ஜெர்மானியில் பிராங்கே என்பவரின் மாதிரியைப் பின்பற்றி அநாதை குழந்தை காப்பகத்தை ஏற்படுத்தினார். இந்த அடிமைக் குழந்தைகளை அவர்களது ஐரோப்பிய காப்பாளரிடம் கிரயம் கொடுத்து வாங்கி பின்பு திருமுழுக்கு கொடுத்து கிறிஸ்தவ நெறிப்படி வளர்ந்து வந்தார். இந்த இளஞ் சிறுவர்களுக்கு கல்வி புகட்டி, பயிற்சி அளித்து வருங்கால நற்செய்திப் பணிக்கு பயன்பதுத்த வேண்டும் என்பதே அவர் திட்டம்.