ஆதியாகமம் 3:17;5:5

Sis.பிரேமாவின்
விளக்கம்

ஆதியாகமம் 3:17

பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச்
செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

தேவனால் ஆண்களுக்கு துணையாக படைக்கப்பட்ட பெண்களாகிய நாம் அன்பையும், ஆதரவையும், பாசத்தையும் அள்ளி வழங்கும் ஆற்றலோடு உருவாக்கப்பட்ட நாம் எவ்வள்ளவு ஜாக்கிரதையுள்ளவர்களாய் தேவன் நமக்கு கொடுத்திருக்கிற தாலந்துகளை ஆக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும். அந்த சக்தியை அழிவிற்கு பயன்படுத்தக்கூடாது என்பதற்கு இந்த வேதாகமப் பகுதியே பாடமாக அமைகிறது.

ஒரே ஒரு நிமிடம் ஏதேன் தோட்டத்துக்குள் வாருங்களேன்!

ஏவாள் தன கையில் ‘ புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கதும்’ என்று எண்ணி ஒரு விருட்சத்தின் கனியை தானும் புசித்து, அதை தன் கையில் ஏந்தி ஆதாமை நோக்கி ‘ இங்கே வாருங்களேன்! இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க! என்ன ருசி! அப்பா, மூளையின் அணுக்களைத் தட்டி எழுப்பி விடுகிறது, தேவர்களைப் போல உணர்வு கொடுகிறது. ஆதாம் தயவு செய்து இந்த பழத்தை சாப்பிடுங்க! இதற்காக வருந்த மாட்டிங்க!’ என்று கூற, ஆதாமும் மறு பேச்சில்லாமல் அந்த கனியை அவளிடத்தில் வாங்கிப் புசிக்கிறான். தேவன் இதை புசிக்க வேண்டாமென்று கட்டளையிட்டரே என்ற சிறு எண்ணம் கூட அப்போது அவனுக்கு தோன்றவில்லை.

மனைவியைப் பிரியப்படுதியதால் பாவத்தில் விழுந்தான் ஆதாம். ஒரு வேளை அவன் மனதில் ‘ இவள் இந்த கனியை சாப்பிட்டுவிட்டதால் என்ன ஆகுமோ? என் அருமை மனைவியை நான் இழக்க வேண்டியதாகிவிடுமோ? இவள் இல்லாமல் நான் தனிமையாக எப்படி வாழ்வேன்? என்ன வந்தாலும் சரி, நானும் சாப்பிடுகிறேன்’ என்று எண்ணியிருக்கலாம்.

ஆதாமைப்போன்ற, பலவீனமான, தேவனுக்கு கீழ்ப்படியாத,
முதுகெலிம்பில்லாத ஆண்கள் பலர், பெண்களின் அழகிய தூண்டுதலுக்கு ஆளாகி, கண்மூடித்தனமாய் பாவத்தில் விழுகிறார்கள்.

சகோதரிகளே! நாம் எத்தனைமுறை பெண்மை என்ற தூண்டுகோலைப் பயன்படுத்தி நமக்கு தேவையானதை சாதித்துக் கொண்டிருக்கிறோம்.

சற்று கவனியுங்கள்!

ஏவாளின் பெண்மை, ஆதாமை
பாவத்துக்குள்ளாக்கியது!

தெலிலாளின் பெண்மை சிம்சோனை வீழ்த்தியது!

ஆனால் எஸ்தர் ராணியின் பெண்மையோ தேவனுடைய மக்களை அழிவிலிருந்து காத்தது.

சிந்தித்து பார்ப்போம்! ஒவ்வொரு நொடியும் தேவனுடைய மகிமைக்காக வாழ முயற்சி செய்வோம்!

ஆதியாகமம் 5:5

ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.

ஏதேன் தோட்டத்தின் நிகழ்வுகளிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம்? ஏவாளின் பெண்மையின் சக்தி ஆதாமை பாவத்துக்குள்ளாகியது என்பதுதான். அதன்பின்பு ஆதாம் 930 வயதுவரை வாழ்ந்தான். ஏவாளும் சுமார் 900 வருடங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த நீண்ட காலத்தில் எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியததால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பாள். ஒரு நிமிட சோதனைக்கு இடம் கொடுத்ததால் விளைந்த பலனை தன்னுடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பதைப் பார்த்து வேதனையுற்றிருப்பாள்.

கர்த்தரோடு முகமுகமாய்ப் பேசி நட்பு கொண்டிருந்த நாட்களை நினைத்து ஏங்கியிருப்பாள். ஆண்டவரே என்னைக் கைவிட்டுவிட்டு விட்டீரோ? என்று கதறியிருப்பாள்.

ஆனால் நாம் தேவன் அவர்களைக் கைவிடவில்லை. மனிதனுக்கு பாவத்திலிருந்து விமோசனமே இல்லை என்று சபிக்கவில்லை. பாவத்திலிருந்து விடுவிக்க இரட்சகர் வருவர் என்ற நம்பிக்கையின் விதையை அவர்கள் மனதில் விதைத்தார்.

ஏறக்குறைய ஆயிரம் வருட ஆயிசு நாட்களில் எத்தனை முறை அவர்கள் ஏதேன் தோட்டம் அருகே சென்றிருப்பார்கள்? காவல் புரியும் கேருபின்களையும், சுடரொளி பட்டயத்தையும் கண்டு உள்ளம்
வேதனையுற்றாலும் தேவன் கொடுத்த நம்பிக்கையின் ஒளி அவர்கள் உள்ளத்தில் தோன்றியிருக்கும் . அன்பின் தேவன் அவர்களை வெறுக்காமல் நேசித்ததினால் நாம் இன்று வரை அவர்களை நினைவுகூறும்படி செய்திருக்கிறார்.

எந்த சூழ்நிலையிலும் அவர்களைக் கைவிடாமல் நேசித்த நல்ல தேவன் இன்றும் நம்மோடு கூட இருக்கிறார். தேவனை விட்டு தூரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு விமோசனம் உண்டா என்று உன் உள்ளம் கதறுகிறதா? சகோதரியே நம்பிக்கையின் தேவன் தாமே உன் வாழ்க்கையில் ஒளி வீசுவார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.