நெகேமியா விளக்கவுரை
1:6-10
வசனம் 1:6
உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக. நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.
பிறகு நெகேமியா, தன் ஜெபத்திற்கு தேவன் செவிசாய்க்கவேண்டுமென்று தேவனை நோக்கி மன்றாடினான். அவன் விடா முயற்சியோடு இருந்தான் என்று நாம் காண்கிறோம். ஏனென்றால் அவன், தனது மக்களுக்காக இரவும் பகலும் தேவனிடத்தில் ஜெபித்தான். தனது நாடும் மக்களும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தனர் என்று தேவனிடத்தில் மனம் கசந்து அறிக்கையிட்டான். அதில் அவனும் அவன் குடும்பத்தாரும் சேர்ந்தே பாவம் செய்தனர் என்பதையும் சேர்த்து அறிக்கையிட்டான். எஸ்றா செய்ததுபோலவே நெகேமியாவும் தனது மக்களோடு சேர்ந்து தானும் ஒரு பாவி என்று அறிக்கையிட்டான். நமது கர்த்தராகிய இயேசுவும் கர்த்தருடைய ஜெபத்தில் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் என்று ஜெபிக்கக் கற்றுத் தந்தார்.
வசனம் 1:7
நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம். நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.
நெகேமியா தனது ஜெபத்தில் நாங்கள் பாவம் செய்தோம் என்பதற்காக மட்டும் சொல்லவில்லை. ஆனால் உமக்கு முன்பாகவும் மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம் என மிகவும் பணிவாக அறிக்கை செய்தான். நாம் ஒருவேளை அதுபோல் சொல்வதற்குப் பின்வாங்கலாம். ஆனால் நெகேமியா அப்படித்தான் ஜெபித்தான்.
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்
(1.யோ.1:9) என்று வேதம் கூறுகிறது. நாம் நமது பாவங்களை உள்ளது உள்ளபடி அறிக்கையிடவேண்டும் என்று தேவன் நம்மை
எதிர்பார்க்கிறார். அப்போது அவர் நமக்கு மன்னிப்பு அருளுகிறார்.
வசனம் 1:8
நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை
ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,
எஸ்றா ஒரு கற்றறிந்த வேதபாரகனாயிருந்தான். அதுபோல் நெகேமியாவும் வேதத்தை நன்கு அறிந்திருந்தான். அவன் தனது ஜெபத்திலே, மோசே வேதத்தில் எழுதிவைத்துள்ள சில உண்மைகளை மேற்கோளாகக் கூறுகிறான். அதாவது, நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்று கூறியிருந்தார். யூதர்களுக்கு நடந்தேறியதும் அதுவேதான்.
வசனம் 1:9
நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டுபோனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்கு கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.
தேவன் கிருபையோடும் மேலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டும் அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும் நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் கூறியிருந்தார். (உபா.30:1-6). நெகேமியா தனது ஜெபத்தில் மிகவும் உறுதியாய் இருந்து வேண்டுதல் செய்தான். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை அவன் நன்கு அறிந்திருந்ததால் அவன் தனது ஜெபத்தில் ஒழுங்கீனமாய்ப் பேசவில்லை.
வசனம் 1:10
தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.
மோசே கர்த்தரை நோக்கி, இஸ்ரவேலர்களை மன்னிக்கும்படி செய்த அந்த ஒரு ஜெபத்தை இப்போது நெகேமியாவும் ஜெபமாகச் சொல்லுகிறான்
(உபா.9:25-29). கர்த்தர், அன்று கடுங்கோபம் கொண்டு அந்த ஜனங்களை முற்றிலும் அழிக்க நினைத்தார். ஆனால் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட தமது பிள்ளையாகிய மோசே அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும் பொருட்டு அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான் (சங்.106:23). நெகேமியாவும், அதுபோன்றதொரு நிலையே இன்றும் வந்துள்ளது என தீர்மானித்து, அன்று மோசே செய்த அதே ஜெபத்தையே இன்றும் தேவனை நோக்கி ஜெபித்தான். இவர்கள் அனைவரும் கர்த்தருடைய பிள்ளைகள் தமது வல்லமையாலே அவர்களை மீட்டார் இப்போது அவர்களுக்காக தேவனுடைய சமுகத்தில் நெகேமியா வந்து நின்றான்.