நெகேமியா விளக்கவுரை
நெகேமியாவின் ஜெபம்
வசனம் 1:1
அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயுமாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,
நெகேமியாவின் புத்தகம் நெகேமியாவினாலேயே எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவு. தேவனுடைய மனுஷனாகிய
நெகேமியாவைப்பற்றிய மகிழ்ச்சிகரமான விளக்கங்களை இப்புத்தகம் நமக்களிக்கிறது. வேதபாரகனாகிய எஸ்றாவிற்கு நேர் எதிரான கொள்ளைகளைக் கொண்டவர் நெகேமியா என்ற போதிலும் இவ்விருவரின்
தாலந்துகளையும் தேவன் வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தி ஆசீர்வதித்துள்ளார். ஒருவிதத்தில் இருவரும் ஒரே வழியில் செயல்ப்பட்டனர் எனலாம். இருவரும் தேவனுடைய பிள்ளைகளாக விளங்கினர். இருவரும் தேவன் அருளிய வேலைகளைச் செய்ய ஆவலுடன் முற்பட்டனர்.
பெர்சியா (பாரசீக) நாட்டில் யூதர்கள் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த காலத்தில் நெகேமியாவும் சிறைவைக்கப்பட்டிருந்தான். பாரசீக நாட்டு மன்னரான அர்த்தசஷ்டா இராஜாவின் அரண்மனைப் பணியாளரில் ஒருவனாக நெகேமியா இருந்தான். இராஜாவிற்குத் திராட்சைரசம் பரிமாறும் பானபத்திரக்காரனாக அவன் இருந்ததினால் அரண்மனை வழிமுறைகளை நன்கு அறிந்திருந்தான். மோசே பார்வோன் மன்னரின் அரண்மனையில் வளர்ந்ததால் அரண்மனையின் வழிமுறைகளை நன்கு அறிய முடிந்தது (யாத்.2:1-10,
1.சாமு.18:5, 19:9). தாவீது சவுலுக்காகப்
பணியாற்றியதால் இத்தகைய அனுபவம் பெறமுடிந்தது. தானியேல்
நேபுகாத்நேச்சாரின் அரண்மனையில் இளைஞனாக சிறை
வைக்கப்பட்டிருந்தபோதும் இத்தகையதோர் நல்லனுபம் பெற்றான் (தானி.1:19). தேவன் தமது பிள்ளைகளைத் தமது பணிக்காக ஆயத்தப்படுத்த அரச அரண்மனைக்
கூடங்களைக்கூடப் பயன்படுத்த வல்லவராய் இருக்கிறார்.
வசனம் 1:2-4
என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள். அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும்
அநுபவிக்கிறார்கள். எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:
ஒருநாள் நெகேமியாவின் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும் வேறே சில மனுஷரும் எருசலேமில் இருந்து நெகேமியாவைக் காண வந்தனர். எருசலேமின் செய்தியையும் யூதர்களின் செய்தியையும் குறித்து நெகேமியா அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள் பிரதியுத்தரமாக எல்லாம் குழப்பமாக உள்ளதென்றும், அங்கே மக்கள் மகா தீங்கையும் நிந்தையையும்
அனுபவிக்கின்றனர் என்றும் கூறினர். மேலும் எருசலேமின் அலங்கங்கள் இடிக்கப்பட்டும் அதன் வாசல்கள் அக்கினியால்
சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கின்றன. ஆலயம் மறுபடியுமாய்க் கட்டப்பட்டது. ஆனால் பகைவரிடமிருந்து மக்களுக்குப் பாதுகாப்பே இல்லாமல் உள்ளது என்றும் நெகேமியாவுக்கு அறிவிக்கப்பட்டது. எருசலேமின் மோசமான நிலையை நெகேமியா ஓரளவு அறிந்திருந்தான். ஆனால் ஆலயத்தைப் பற்றிய இத்தகைய அதிர்ச்சியான செய்திகளை அவன் எதிர்பார்க்கவில்லை. இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நெகேமியா மிகவும் துக்கித்து உட்கார்ந்து அழுதான். சிலநாட்கள் வரை அவன் துக்கித்துக்
கொண்டேயிருந்தான். ஆனால் உதவிக்கு எங்கே போவது என்று அவனுக்குத் தெரியும். அவன் தேவனிடத்திற்குச் சென்றான். அவன் அங்கே தேவனிடத்தில் உட்கார்ந்து அழுது உபவாசித்து பரலோகத்தின் தேவனை நோக்கிப் பிரார்த்தனை பண்ணினான்.
வசனம் 1:5
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
நெநேகமியா எவ்வாறு தேவனிடத்தில் வேண்டுதல் செய்தான் என்பதைனை 5 முதல் 11 வரையிலான வசனங்களில் நாம் வாசிக்கிறோம். அது ஒரு முன்மாதிரி ஜெபம். முதலாவது அவன் பரலோகத்தின் தேவனை அழைக்கிறான். கர்த்தர் (இயேசு கிறிஸ்து) பூலோகத்தில் தமது சீஷர்களுக்கு ஜெபம்பண்ண போதித்ததுபோல இது உள்ளது. (லூக்.11:2). அடுத்து, அவன் தேவனை மகத்துவமுள்ளவர் என்றும் பயங்கரமானவர் என்றும் கூறுகிறான். கர்த்தருடைய ஜெபத்தில் உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக எனப்பட்டுள்ளதுபோல் இது உள்ளது. அடுத்து கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் தமது
உடன்படிக்கையையைக் காக்கிற தேவன் என்றும் கூறுகிறான். கர்த்தருடைய ஜெபத்தில் அவர் நமக்குப் போதித்து, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று போதித்துள்ளார் அன்றோ?