லஞ்சமா? தேவன் காட்டும் வழி செல்லுங்கள்!
- சகரியா பூணன்
நம் தேசத்தில்
கிறிஸ்தவர்களாகிய நாம் சந்திக்கும் நடைமுறை பிரச்சனை என்னவென்றால், ஒரு நியாயமான அனுமதியோ அல்லது லைசன்சோ பெறுவதற்குகூட அரசு அலுவலகத்தில் பணம் கொடுக்க வேண்டிய நிலை! அனேக பிரசங்கிகள் “தங்கள் பரிசுத்தத்திற்குரிய பெயர் பாதிக்கப்படும்” என்பதற்காக இதைக்குறித்து பிரசங்கித்திட அஞ்சுகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தைக் குறித்து ஓர் தெளிவான போதகம் இந்நாட்களில் மிகவும் அவசியமாயிருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற பிரச்சனைகளை கிறிஸ்தவர்கள் சந்திக்க வேண்டியதாயிருக்கிறது. இவர்களுக்கென வேதபூர்வமான ஆலோசனையை இங்கு நான் தர விரும்புகிறேன். அதன் மூலம், இன்று அநேக விசுவாசிகளின் தோளில் அழுத்திக் கொண்டிருக்கும் தேவை யில்லாத குற்ற உணர்வின் சுமை நீங்கக்கூடும் என்று நம்புகிறேன்!
1 கொரிந்தியர் 6:12; 10:23 கூறுகிறபடி ஜனங்கள் வாழ்வதற்கு மூன்று அளவுகள் உள்ளன :
1.தகுதியற்றவைகள்.
இந்த அளவில் அநீதி கைக்கொள்ளப்படுகிறது.
2.தகுதியானவைகள்.
இந்த அளவில் குறைந்த பட்ச நீதி கைக்கொள்ளப்படுகிறது.
3.பக்திவிருத்திக்குரியவைகள்.
இந்த அளவே விசுவாசத்தின் உயர்ந்த அளவாகும்.
இவைகளில், “தகுதியற்ற” காரியங்களில் ஈடுபட்டு நாம் ஒருபோதும் கீழ்த்தர அளவிற்குள் இறங்கி வந்துவிடக்கூடாது. ஆகவே, நமக்குஅநீதியான ஒன்றை செய்து முடிக்கயாருக்கும் எந்தப் பணமும் கொடுத்துவிடவே கூடாது. அப்படிச் செய்வது அரசாங்கத்தையோ அல்லது ஒரு நிர்வாகத்தையோ ஏமாற்றுவதாயிருக்கிறது. இதற்காக நீங்கள் கொடுத்த பணம் “லஞ்சம்” என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ஆனால், நியாயபூர்வமாய் உங்களுக்கு வழங்க வேண்டியஅனுமதிக்காக
(Permit) சில அதிகாரிகள் உங்களிடம் பணம் கேட்டு, நீங்கள்
அலைக்கழிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இச்சமயத்தில் அந்த அதிகாரிகளுக்கு நீங்கள் பணம் கொடுத்தால், அதைக் குறித்து என்ன? இதுபோன்ற சம்பவத்தில் நீங்கள் யாரையும் ஏமாற்றவில்லை! உங்கள் சொந்த பணத்தை நீங்களாக விரும்பித்தான் கொடுத்தீர்கள். இதை, ஒரு உணவு விடுதியில், உங்களுக்கு பரிமாறிய சர்வருக்கு “டிப்ஸ்”காசுகள் கொடுத்ததற்கே ஒப்பாகும்! அல்லது துல்லியமாகக் கூறவேண்டு மென்றால், உங்கள் முன் துப்பாக்கியை நீட்டிய கொள்ளைக்காரனுக்கு உங்கள் பணத்தை கொடுத்ததற்கும் ஒப்பாகும்! உங்கள் உயிரை பாதுகாப்பதற்காக உங்கள் பணத்தை இந்த கொள்ளைக்காரனிடத்தில் கொடுத்திருக்கிறீர்கள். இவ்விஷயத்தில் காணும் ஒரே வித்தியாசம் யாதெனில், அந்த அதிகாரி உங்களுக்கு முன் துப்பாக்கியை காட்டவில்லை, அவ்வளவுதான்! அதற்குப் பதிலாய் இதுபோன்ற வேறு ஏதோ விளைவுகளை அவன் உங்கள் முன்
காட்டியிருக்கிறான். எப்படியிருந்தாலும் இதுபோன்ற செயல் பகல் கொள்ளைதான். இருப்பினும், குறைந்த பட்சம் நீங்கள் பெற்ற அனுமதிக்காக யாதொரு அநீதியும் செய்யவில்லை! யாரையும் ஏமாற்றவில்லை.
இருப்பினும், மேற்கண்ட அதே சூழ்நிலையில் வேறொரு சகோதரனோ “அந்த அதிகாரிக்கு நான் பணம் கொடுக்காமலே கர்த்தர் எனக்கு அனுமதி பெற்றுத் தருவார்” என
விசுவாசிக்கிறான். ஆனால், இந்த விசுவாசத்தின் உயர்ந்த அளவு எல்லோருக்கும் இருப்பதில்லை.
இந்த அளவிற்குரிய விசுவாசம் கொண்டவர்கள் அதன்படி ஜீவிக்கலாம். ஆனால் இந்த அளவின்படியான விசுவாசம் இல்லாதவர்களை இவர்கள் ஒருபோதும் நியாயம் தீர்க்கக்கூடாது!
இந்த சத்தியம் ரோமர் 14-ல் தெளிவாக
போதிக்கப்பட்டுள்ளது.