மரணத்திற்குப் பின் நடப்பது என்ன?

மரணத்திற்குப் பின் நடப்பது என்ன என்பதைக் குறித்து கிறிஸ்தவ
மதத்திற்குள்ளேயே கொஞ்சம் குழப்ப நிலைதான் உள்ளது.

சிலர் மரணத்திற்குப்பின் கடைசி நியாயத்தீர்ப்பு வரை எல்லோரும்
"நித்திரையடைகிறார்கள்", அதன்பின்பு பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனைவரும்
அனுப்படுவார்கள் என்று கருதுகிறார்கள். வேறு சிலர் மரிக்கும்
தருணத்தில்தானே மனிதர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு தங்களது நித்திய
குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள்.

இன்னும் சிலர் மனிதர்கள் இறக்கும்பொழுது, கடைசி உயிர்த்தெழுதலுக்கும்
கடைசி நியாயத்தீர்ப்பிற்கும், இறுதியாக, தங்கள் நித்திய
குடியிருப்புக்கும் காத்திருக்கும்படி ஒரு "தற்காலிகமான" பரலோகத்திற்கோ
நரகத்திற்கோ அனுப்படுகிறார்கள் என்று கோருகிறார்கள். ஆகமொத்தம்,
மரணத்திற்குப்பின் நடப்பது என்ன என்பதைக் குறித்து வேதாகமம் என்னதான்
சொல்லுகிறது?

முதலாவது, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி
வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது என்னவென்றால் மரணத்திற்குப்பின்
விசுவாசிகளுடைய ஆத்துமா/ஆவி பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஏனென்றால், கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருப்பதினால் அவர்கள்
பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன (யோவான் 3:16,18,36).

விசுவாசிகளுக்கு, மரணம் என்பது "இந்த தேகத்திலிருந்து குடிபோகுதலும்
கர்த்தரிடத்தில் குடியிருத்தலுமாம்" (2கொரிந்தியர் 5:6-8; பிலிப்பியர்
1:23). ஆனால், 1கொரிந்தியர் 15:50-54 மற்றும் 1தெசலோனேக்கியர் 4:13-17
போன்ற வேதபகுதிகள் விசுவாசிகள் மறுபடி எழுந்திருப்பதையும் மகிமையின்
தேகம் கொடுக்கப்படுவதையும் விவரிக்கின்றன. விசுவாசிகள் மரித்தவுடனே
கிறிஸ்துவோடுகூட இருக்கச் செல்வார்கள் என்றால், இந்த எழுந்திருக்குதலின்
நோக்கம் என்ன? இப்படியிருக்கையில், மரித்தவுடன் விசுவாசிகளின்
ஆத்துமா/ஆவி கிறிஸ்துவுடனே இருக்கச் செல்லுகிறதென்றும், மாம்சசரீரம்
கல்லறையில் "நித்திரையில்" இருக்கும் என்று தோன்றுகிறது.

விசுவாசிகளின் எழுந்திருக்குதலின்போது மாம்சசரீரமானது உயிர்த்தெழப்பட்டு,
மகிமையடைந்து பின்பு ஆத்துமா/ஆவியுடன் மறுபடி இணைக்கப்படுகிறது.
மீண்டுமாய் இணைக்கப்பட்ட இந்த மகிமையின் ஆவி ஆத்துமா சரீரமே புதிய
வானமும் புதிய பூமியும் உண்டாகும்பொழுது விசுவாசிகள்
சுதந்தரித்துக்கொள்ளும் நித்திய சொத்தாயிருக்கும் (வெளிப்படுத்தின
விசேஷம் 21-22).

இரண்டாவது, இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு மரணம்
என்பதன் பொருள் நித்திய ஆக்கினை. ஆனாலும், விசுவாசிகளுக்கு
நடப்பதைப்போலவே, அவிசுவாசிகளும் தங்களுடைய கடைசி உயிர்த்தெழுதலுக்கும்,
நியாயத்தீர்ப்பிற்கும், நித்தியமாக வாழும்நிலைக்கும் காத்திரும்படி ஒரு
தற்காலிகமான ஒரு குடியிருப்புக்கே அனுப்பப்படுகிறார்கள் என்று
தோன்றுகிறது. லூக்கா 16:22-23 ஐசுவரியமுள்ள மனுஷன் மரித்தவுடனே
வேதனைக்குள்ளாகிறதாக கூறுகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 மரித்த
அவிசுவாசிகள் அனைவரும் உயிர்தெழப்பட்டு, வெள்ளைச் சிங்காசனத்தின் முன்
நியாயந்தீர்க்கப்பட்டு பின்பு அக்கினிக்கடலிலே தள்ளப்படுவதாக
விவரிக்கிறது. ஆகவே அவிசுவாசிகள் மரித்தவுடனேயே நரகத்திற்கு
(அக்கினிக்கடல்) அனுப்பப்படுவதில்லை பதிலாக நியாயத்தீர்ப்பிற்கும்
தண்டனைக்குமெனெ ஒரு தற்காலிகமான இடத்தில் இருக்கிறார்கள். ஆனால்,
அவிசுவாசிகள் உடனடியாக அக்கினிக்கடலுக்கு அனுப்பப்படவில்லையெனினும்
மரணத்திற்கு அடுத்த நிலை என்பது இன்பமானது ஒன்றுமில்லை. "இந்த
அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே" (லூக்கா 16:24) என்றுதான் அந்த
ஐசுவரியமுள்ள மனுஷனும் கூப்பிட்டான்.

ஆகவே, மரணத்திற்குப் பின்பு, ஒரு மனிதர் ஒரு "தற்காலிகமான" பரலோகத்திலோ,
நரகத்திலோ வசிக்கிறார். இந்த தற்காலிகமான இடத்திற்குப்பின் கடைசி
உயிர்தெழுதலின்போது அவருடைய நித்தியமாக வாழும்நிலையில் மாற்றம்
இருக்காது. நித்தியமாக வாழும்படி குறிப்பிடப்படும் "இடத்தில்" மட்டுமே
மாற்றம் இருக்கும். விசுவாசிகள் புதிய வானத்திலும் புதிய பூமியிலும்
நுழையும்படி இறுதியாக அனுமதி பெறுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 21:1).
அவிசுவாசிகள் அக்கினிக்கடலுக்கு இறுதியாக அனுப்பப்படுவார்கள்
(வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15). இதுவே மனிதர்களின் இறுதியான,
நித்தியமான குடியிருப்பு - இது அவர்கள் இரட்சிப்பிற்காக இயேசு
கிறிஸ்துவில் மாத்திரம் நம்பிக்கை கொண்டிருந்தார்களா என்பதை மட்டுமே
பொறுத்தமைகிறது (மத்தேயு 25:46; யோவான் 3:36).

முந்தைய பதிவுகளுக்கு
http://tamilbibleqanda.wapka.mobi

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.