008 -- அப்போஸ்தலர் 01:21-26

21 "ஆதலால், யோவான் ஞானஸ்நானம்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய
இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,

22 அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட
இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து,
எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.

23 அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட
யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:

24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன்
தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த
அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக,

25 இவ்விரண்டு பேரில் தேவரீர்
தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;

26 பின்பு,
அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு
விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே
சேர்த்துக்கொள்ளப்பட்டான்".

ஏன் யூதாஸ் இயேசுவை மறுதலித்தான் என்ற தத்துவரீதியான கேள்யை சீடர்கள்
கேட்காமல், இறைவனுடைய நியாயமான நியாயத்தீர்ப்பை அவர்கள்
ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் கடந்த காலத்தை நோக்கிப்பார்த்து கலங்கி
நிற்காமலும், தற்கால உணர்வுகளால் நிலைகுலையாமலும் இருந்து, உலகத்திற்கு
நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டிய தங்கள் கடமையை நோக்கி முன்னேறிச்
சென்றார்கள்.

அப்போஸ்தலர்களுடைய எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவை நிறைவாக்கும்படி அவர்கள்
இறைவனிடம் விண்ணப்பித்தார்கள். அவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர்
ஊற்றப்படும்போது அவர்கள் எண்ணிக்கை சரியானதாக இருக்க வேண்டும் என்று
அவர்கள் கருதினார்கள்.
அப்போஸ்தலனாக ஏற்படுத்தப்பட இருப்பவர் ஆரம்ப முதல் தொடர்ந்து இயேசுவோடு
இருந்தவராயிருக்க வேண்டும். இயேசுவின் வாழ்வையும் பணிகளையும் கண்களினால்
கண்ட சாட்சியாயிருப்பதுடன் அவருடைய
உயிர்தெழுதலுக்கும் நேரடியான
சாட்சியாயிருக்க வேண்டும்.

இயேசு ஒவ்வொரு நகரங்களாகச் சுற்றித்திரிந்து ஊழியம் செய்யும்போது,
பன்னிரவர் மட்டும் அவரோடு இருக்கவில்லை. மேலும் அநேகர் அவரைப்
பின்பற்றிச் சென்றார்கள். கலிலேயாவில் தம்முடைய பணியைச் செய்யும்படி
இயேசு எழுபது சீடர்களை அனுப்பினார்.

ஆகவே அப்போஸ்தலருடைய பணிக்கு முன்வரக் கூடியவர்களின் எண்ணிக்கையைக்
குறைக்கும்படி அதற்கான தகுதியை அவர்கள் கடுமையாக்கினார்கள். அவர்கள்
யோவான் ஸ்நானகனுக்குச் சீடர்களாக அவருடன் நிலைத்திருந்து, தங்கள்
பாவங்களை அவருக்கு முன்பாக அறிக்கையிட்டு, இறைவனுடைய அரசு வருவதை
எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களே அப்பணிக்குத்
தகுதியானவர்கள்.

உண்மையில் யோவானுடைய சீடர்களில் பலர் அவருடைய அழைப்பைக்
கேட்டிருந்தார்கள். "இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ
ஆட்டுக்குட்டி" என்று அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆகவே அவர்கள்
மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தவராகிய அவரைவிட்டு, பரிசுத்த
ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பராகிய கிறிஸ்துவைப்
பின்பற்றினார்கள்.

இடைவிடாமல் இயேசுவைப் பின்பற்றியவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் ஞானமும்
முதிர்ச்சியும் உள்ளவர்களாக மாறியிருப்பர்கள் என்று நாம்
எதிர்பார்ப்போம். ஆனால் சீடர்களுடைய நடத்தை அது உண்மையல்ல என்பதை
நிரூபிக்கிறது. ஏனெனில் மெய்யான விசுவாசத்திற்கும், மேலான அன்பிற்கும்,
பரந்த விசுவாசத்திற்கும் யாருடைய இருதயம் பரிசுத்த ஆவியினால்
ஆயத்தப்படுத்தப்பட்டதோ அவர்களைத் தவிர வேறு யாரும்
பொருத்தமானவர்களாயிருக்கவில்லை. சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளைக்
கேட்டிருந்தபோதிலும், அவர்கள் இருதயம் பெருமையுள்ளதாகவே இருந்தது.
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவருடைய மகிமையை அவர்கள்
கண்டிருந்தும், அவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இன்னும் வந்து தங்காத
காரணத்தினால் அவர்கள் நித்திய வாழ்வற்ற
வர்களாயிருந்தார்கள். சில வேத வியாக்கியானிகளுடைய கருத்துப்படி, யூதாஸின்
இடத்திற்கு அப்போஸ்தலர்கள் வேறு ஒருவரைத் தெரிவுசெய்யும் இந்த செயல் மனித
ஞானத்தின்படி மேற்கொள்ளப்பட்ட அவசர முடிவாகும்.

ஏனெனில் கர்த்தர் ஏற்ற காலத்தில் புறவினத்து மக்களுக்கு நற்செய்தியை
அறிவிக்கும்படி யூதாஸின் பணியையும் அதிகாரத்தையும் கொடுத்து
அப்போஸ்தலனாகிய பவுலை அழைத்தார்.
ஆயினும் ஆரம்பத்தில் பதினொரு சீடர்களும் உலகத்திற்கு நற்செய்தியைப்
பிரசங்கம் செய்வதைப் பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் இஸ்ரவேலின்
பன்னிரெண்டு கோத்திரங்களைத் திரும்பக் கட்டுவதைக் குறித்தே
சிந்தித்தார்கள். மற்ற அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து பேதுரு, இயேசுவின்
சீடர்கள் அனைவரையும் கூட்டி, அவர்களில் ஒருவரை அப்பணிக்காக
தெரிவுசெய்யும்படி முயற்சி செய்தார்.

இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறவராகிய கர்த்தரே ஆத்துமாவின் நோக்கங்களை
அறிந்தவராயிருப்பதால் இறுதி முடிவை அவருடைய கரத்திலேயே அவர்கள்
விட்டுவிட்டார்கள். பேதுரு இங்கு ஒரு பிஷப்பைப்போல மேலான அதிகாரத்துடன்
செயல்படவில்லை என்பதையும் இங்கு அப்பணிக்கான தேர்தல் ஒரு ஜனநாயகத்
தேர்தலைப் போல பெரும்பான்மையானவர்களுடைய வாக்குகளின் அடிப்படையில்
நடத்தப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக
அவர்கள் அனைவரும் இறைவனிடத்தில் கூடிவந்து, அவருடைய தெய்வீக
நியாயத்தையும் உடனடியான வழிநடத்துதலையும் நாடினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.