005 -- அப்போஸ்தலர் 01:09-12

அப்போஸ்தலர் 1:9-12

9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர
எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை
எடுத்துக்கொண்டது.

10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள்
இரண்டுபேர் அவர்களருகே நின்று:

11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்?
உங்களிடத்தினின்று வானத்துக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக
வானத்துக்கு
எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

12 அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள்
பிரயாணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத்
திரும்பிப்போனார்கள்.

கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் என்றும் அவருடைய உடல் இயற்கையின்
விதிகளுக்குக் கட்டுப்படாத ஆவிக்குரிய உடல் என்றும் சீடர்கள்
அறிந்துகொண்டார்கள். அவர் உண்மையான மனிதனாகவும் உண்மையான
இறைவனாகவும் இருந்தார்.

அவர் தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நாற்பது நாட்கள் தம்முடைய
சீடர்களுடன் இருந்து பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் அதிலும்
தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைக் குறித்த தீர்க்கதரிசனங்கள்
எத்துணை மெய்யானவை என்பதை விளக்கிக் காண்பித்தார்.

இறுதியாக அப்போஸ்தலர்களை நிரப்பப்போகும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்த
வாக்குறுதியை வழங்கியதன் மூலம் தம்முடைய போதனைகள் அனைத்திற்கும் அவர்
மணிமகுடம் சூட்டினார்.
இவ்வுலகத்தில் வாழ்ந்த கிறிஸ்துவின் இறுதி அறிக்கை இதுவாகத்தான்
இருந்தது. இதைவிட மேலானதொன்றும் தேவைப்படவில்லை.

ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் பணியை நிறைவேற்றி
முடித்துவிட்டார். அவர் தம்முடைய
பிதாவினிடத்திற்குப் புறப்படத் தயாராயிருந்தார். அவர் சீடர்களோடிருந்த
அந்த நாற்பது நாட்களில் சிலவேளைகளில் திடீரெனத் தோன்றி திடீரென மூடப்பட்ட
கதவு அல்லது கட்டடத்தின் வழியாக ஊடுருவிச் சென்றதைப் போல இப்போது
இரகசியமாக அவர் செல்லவில்லை.

யாருமறியாமல் மரணத்திலிருந்து உயிர்தெழுந்த அவர் இப்போது தம்முடைய
சீடர்களுடைய கண்களுக்கு முன்பாக பரலோகத்திற்கு எழுந்தருளிப் போனார். அவர்
காற்றைவிடவும் அடர்த்தி குறைந்தவரைப் போல பூமியின் ஈர்ப்பு சக்தியை
மேற்கொண்டு பரமேறினார்.

அவர் தம்முடைய பிதாவினிடத்திலிருந்த தமது அன்பினால்
ஈர்க்கப்பட்டவராக மேலேறிச் சென்றார். மகிமையும் பரிசுத்தமும் உடைய
இறைவனுடைய மேகங்கள் மெதுவாகவும்
அமைதியாகவும் அவரைச் சூழ்ந்துகொண்டது. கிறிஸ்து தம்முடைய பணியை முடித்தவராக,
மனிதர்களுடைய உலகத்தைவிட்டு, காணாத இறைவனுடைய மகிமைக்குள் சென்றார்.

நித்திய படைப்பாளியாகிய இறைவன் எப்போதும் மேலே வானத்தில் இருக்கிறார்
என்று நாம் கூறுவதற்கில்லை. ஏனெனில் பூமி தொடர்ந்து
சுற்றிக்கொண்டிருப்பதால் வானம் சில வேளைகளில் பூமிக்கு மேலும் சில
வேளைகளில் பூமிக்குக் கீழும் இருக்கிறது. சூரியன்கூட நமக்கு மேலாக
இருப்பதில்லை. அது மிகப்பெரிய நெருப்பு உருண்டையாக, பல சூரியன்களில்
ஒன்றாக காணாத இடத்தை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறது.

அப்படியானால் இறைவன் எங்கே இருக்கிறார்? கிறிஸ்து எங்கே இருக்கிறார்?
இந்தக் கேள்விக்கு நம்முடைய கர்த்தர் தீர்க்கமான இறுதியான பதிலைக்
கூறுகிறார்: "இதோ உலகத்தின் முடிவுபரிந்தம் நான் சகல நாட்களிலும்
உங்களோடுகூட இருக்கிறேன்".
இறைவன் நமக்கு மேலாகவோ, கீழாகவோ இருப்பதில்லை. அவர் எப்போதும்
எங்குமிருக்கிறார். அவர் காலத்தாலும் இடத்தாலும் கட்டுப்படாதவர். எந்த
மனிதனும் இறைவனுடைய மகிமையின் மேன்மையை அறிந்துகொள்ள முடியாது. சீடர்கள்
புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இயேசு அவர்களுடன் பேசினார்.

பரலோகம் மேலிருக்கிறது என்று அவர்கள் நம்பியதால் அவர் அவர்களுக்கு
முன்பாக மேலேறிச் சென்றார். இப்போது அவர் அவர்களை முற்றிலுமாக விட்டுத்
தம்முடைய
பிதாவினிடத்திற்குத் திரும்பி, அவருடைய வலதுபக்கத்தில் அமர்ந்து, அவரோடு
ஒன்றித்து முடிவில்லாத காலமாக இவ்வுலகத்தை ஆளுகை செய்யப்போகிறார்.
கிறிஸ்துவும் பிதாவும் ஒன்றே. பிதாதான் குமாரன் குமாரன்தான் பிதா.
கிறிஸ்துவைக் கண்டவர்கள் இறைவனைக் கண்டவர்கள். பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியாகிய ஒரே பரிசுத்த திரித்துவ இறைவனை நாம் விசுவாசிக்கிறோம். இந்த
ஒற்றுமையின் இரகசியத்தை எந்த மனிதனாலும் போதுமான அளவு விளக்க முடியாது.

கிறிஸ்து தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நாற்பது நாட்கள் சென்று,
மனிதர்களுடைய உலகத்தைவிட்டு இறைவனுடைய உலகமாகிய பரலோகத்திற்குச் சென்றார்
என்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது. அங்கு அவர் தம்முடைய பிதாவோடு
கிருபையின் அரியாசனத்தில் முழுமையான அன்போடும், மகிமையோடும்,
அதிகாரத்தோடும் வீற்றிருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.