"எபேசு சபையை குறித்து அறிவதற்க்கு முன்பு எபேசு பட்டணத்தை பற்றியும்
எபேசு மக்களை பற்றியும் சபை எவ்வாறு நிறுவப்பட்டது என்பதை பற்றியும்
சுருக்கமாக பார்க்கலாம்."
"எபேசு பட்டனம் குறித்த சில வரலாற்று உண்மைகள்:-"
எபேசு என்ற வார்த்தைக்கு விரும்பப்பட்ட/பிரியமான என்று பொருள். ரோம
ஆட்சியின் போது மிகப்பெரிய துறைமுகப் பட்டணமாக இப்பட்டணம் விளங்கியது.
இப்பட்டணத்திலிருந்து புறப்படும் மூன்று மாபெரும் சாலைகள் உலகின்
கிழக்கு(பாபிலோன்), வடக்கு, தெற்கு ஆகிய திசைகளை இணைத்தன.
எபேசு அக்காலங்களில் வாணிபத்தில் கோலோச்சி விளங்கியது.ஆசியாவின் மாயச்
சந்தை என்றும் எபேசு அழைக்கப்பட்டது.
1) தியானாள் கோவில்:
————————————
எபேசுவில் இருந்த தியானாள் எனப்படும் காமதேவதையின் ஆலயம் உலகப் புகழ்
பெற்றது. (அப்போ 19:24) இக்கோவில் முதலாம் நூற்றாண்டின் உலக அதிசயங்களில்
ஒன்றாக கருதப்பட்டது.
லத்தீன் மொழியில் தியானாள்
(டயனா) என அழைக்கபடும் இது, கிரேக்க மொழியின் அர்த்தெமி என்று அழைக்கப்படுகிறது.
அர்த்தெமி என்பது கிரேக்கர்களின் அழகிய வனதேவதை. எபெசுவின் தியானாள்
அர்த்தேமியை போல அழகான தேவதை அல்ல, இது வெறும் கருப்பு உருவம் கொண்ட ஒரு
கல் அவ்வளவே.
தங்கள் தேவதை வானத்திலிருந்து விழுந்தது என அவர்கள் உரிமைப்
பாராட்டினார்கள். (அப்போ 19:35) உண்மையில் அது பெண் உருவு போன்ற ஓர்
எரிக் கல்லாக இருக்க வேண்டும் என்பது பலர் கருத்து.
இந்த தேவதையின் சொரூபங்களும் தாயத்துகளும் உலக மேன்மையை தருவதாக
கருதப்பட்டது. எபேசிய எழுத்துக்கள் எனப்படும் தாயத்துக்கள் பெருமளவில்
விற்கப்பட்டன. இக்கோவிலில் தேவதாசி முறையும் வழக்கத்தில் இருந்தது.
ஒழுக்ககேடுகளும், மூடநம்பிக்கைகளும் அங்கு கோலோச்சி இருந்தன.
உலகத்திற்கு நீங்கள் வெளிச்சமாய் இருக்கிறீர்கள் என்று வாக்குரைத்த இயேசு
கிறிஸ்துவைப் பின்பற்றிய பவுலடியார், இப்பட்டணத்தின் இருள் நீக்கும்
வெளிச்சமாய் கிபி 55 ஆம் ஆண்டு சுடர் விடத் துவங்கினார்.
பவுலடியாரின் ஊழியம் இக்கோவிலுக்கும் அதை சார்ந்த மாய சந்தைக்கும் பெரும்
அச்சுறுத்தலாகவே இருந்திருக்கிறது. (அப்போ 19:27).
2) எபெசுவின் நூலகம் :
———————————
எபெசுவில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருந்தது. இதில் மாய தந்திரங்களை
குறித்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காணப்பட்டன. (அப்போ 19:19) இங்கு
ஏறத்தாழ 15,000 க்கும் மேற்பட்ட புஸ்தக சுருள்கள் இருந்தன.
'ஆசியாவின் ஆளுநராகிய செல்சஸ் என்பரின் கட்டுப்பாட்டுக்குள் இந்நூலகம் இருந்தது.
பின்னாளில் செல்சஸின் கல்லறை இந்நூலகத்தில் அடியில் வைக்கப்பட்டது.
சுவிசேஷத்தின் ஒளி எபேசுவில் பிரகாசித்த போது,
"மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக்
கொண்டுவந்து எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்" என்று அறிகிறோம்
(அப்போ 19:19)
3) வியாபார சந்தை:
——————————
எபெசுவில் 360 அடியில் சதுர வடிவிலான பிரசித்தி பெற்ற வியாபார சந்தை
ஒன்று இருந்தது. இங்கு தான் ஆக்கிலாள், ப்ரிஸ்கிலாள் ஆகியோரோடு இணைந்து
பவுலடியார் கூடாரம் பண்ணுகிற தொழிலை செய்திருக்க வேண்டும்.
இச்சந்தைக்கு வருவோர் போவோரிடம் பவுலடியார் சுவிசேஷத்தை அவசியம்
பிரசங்கித்திருப்பார்.
4) அரங்கசாலை:
————————–
25,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கசாலை ஒன்று எபெசுவின்
மையத்தில் இருந்தது. ரோமர்களால் இது பராமரிக்கப்பட்டு வந்தது.
மல்யுத்தங்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்பட்டது. பவுலடியாரின்
ஊழியம் தியானாளின் கோவிலுக்கும், மதம் சார்ந்த வாணிபத்திற்கும் பெரும்
பாதிப்பை ஏற்படுத்திய போது, கலகக்காரர்கள் இந்த அரங்க சாலையில் தான் கூடி
வந்தார்கள். (அப்போ 19:29)
இந்த அரங்க சாலையில் "எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி
நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்" (அப்போ
19:29)
5) எபேசுவில் திருப்பணி:
———————————
விக்கிரக ஆராதனையும், பாவமும் நிறைந்த இந்தப் புறஜாதி பட்டணத்தில் கிபி
55ல் அப்போஸ்தலனாகிய பவுல் முதல் சபையை ஸ்தாபித்தார். கிட்டத்தட்ட மூன்று
ஆண்டுகள் அவர் அங்கே ஊழியம் செய்ததை அப்போஸ்தலருடைய நடபடிகள் 18,19
அதிகாரங்கள் அறிவிக்கின்றன.
யோவான், தீமத்தேயு முதலான பரிசுத்தவான்கள் சபையின் கண்காணிகளாக
செயல்பட்டு வந்தார்கள். யோவானுடைய கல்லறை இந்தப் பட்டணத்தில் இன்றும்
இருக்கிறது.
எபேசு பட்டணத்தில் உள்ள சபைக்கு பவுலடியார் எழுதிய நிரூபம்
வேதபுத்தகத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
பாவ இருளிலும், மூட நம்பிக்கைகளிலும் உழன்று கொண்டிருந்த எபேசு
பட்டணத்தில் சுவிசேஷத்தின் ஒளி பிரகாசித்த போது பரிசுத்தர் கூட்டம்
நடுவில் வாசம் செய்யும் கிறிஸ்து எபேசு சபையில் உலாவி வருவது தேவனுடைய
கிருபையின் வெளிப்பாடு. (வெளி 2:1)
வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 2 எபேசு சபை:
0
April 05, 2016
Tags