8) கெத்சமனி:
இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு உண்டபின்னர், தம் சீடர்களுடன்
கெத்சமனி என்னும் ஒலிவத் தோட்டப்பகுதிக்குப் போய் அங்கே ஜெபம் செய்தார்
என்னும் செய்தி மாற்கு 14:32-42, மத்தேயு 26:3646, லூக் 22:39-46 போன்ற
நற்செய்திப் பகுதிகளில் உள்ளது. இங்கேதான் இயேசு கடுந்துயரமும்
மனக்கலக்கமும் அடையலானார். மேலும் கெத்சமனியில் தான் இயேசு யூதாசால்
காட்டிக்கொடுக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.
9) எரிகோ:
இயேசு எரிகோ நகருக்கு அருகே பர்த்திமேயு என்ற பெயர் கொண்ட ஒருவருக்குக்
கண்பார்வை அளித்த நிகழ்ச்சி மாற்கு 10:46-52 பகுதியிலும், மத்தேயு
20:29-34, லூக்கா 18:35-43 ஆகிய பகுதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயேசுவின் கைகளால் நலம்பெற்ற இருவர்கள் மட்டுமே நற்செய்தி நூல்களில்
பெயர் சொல்லிக் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்களுள் ஒருவர் பர்த்திமேயு.
மற்றவர் இலாசர்.
10) ஒலிவ மலை:
ஒலிவ மலை என்னும் இடம் நற்செய்தி நூல்களில் பலமுறை குறிக்கப்படுகிறது.
இயேசு ஒலிவ மலையினின்று இறங்கி வந்த பின் எருசலேமில் வெற்றி
ஆர்ப்பரிப்போடு நுழைந்தார் என்று மத் 21:1-11, மாற்கு 11:1-2, லூக்கா
19:28-30, யோவான் 12:12-13 பகுதிகளில் உள்ளது. மேலும், அப்.நடபடிகள்
நூலில் இயேசு உயிர்த்தெழுந்தபின் தம் சீடர்களுக்கு நாற்பது நாள்கள்
காட்சியளித்த பின் ஒலிவ மலையருகிலிருந்து விண்ணேகினார் என்பது
குறிக்கப்படுகிறது (அப் 1:9-12)
11) எருசலேம் ஆலயம்:
எருசலேம் ஆலயம் நற்செய்தி நூல்களில் பல முறை குறிப்பிடப்படுகிறது.
இயேசுவின் பெற்றோர் அவரை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்தார்கள் (லூக்கா
2:22-38). இயேசு எருசலேம் ஆலயத்திற்க்குப் பாஸ்கா விழாக் கொண்டாடச்
சென்றபோது பெற்றோரை விட்டுப் பிரிந்து ஆலயத்திலிலே தங்கிவிட்டார் (லூக்கா
2:41-52). இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைந்தார் (மத்தேயு
21:1-11; மாற்கு 11:1-11; லூக்கா 19:28-44). அங்கே மக்கள் பொருட்களை
வாங்குவதும் விற்பதுமாக இருந்தனர். இயேசு சினமுற்று, ஆலயத்தில் விற்பனை
செய்துகொண்டிருந்தவர்களை விரட்டியடித்தார் (மத்தேயு 21:12-17; மாற்கு
11:15-19; லூக்கா 19:45-48). இயேசு எருசலேமில் இருந்தபோது "ஒவ்வொரு
நாளும் ஆலயத்தில் கற்பித்துவந்தார்" (லூக்கா 19:47-48).
உ) பிற பிரதேசங்கள்:-
1) பிலிப்புச் செசரியா:
இயேசு தாம் துன்புற்று, கொலைசெய்யப்படப் போவதாக முதன்முறை முன்னறிவித்தது
இந்த நகருக்கு அருகே தான் என்று மாற்கு 8:27 கூறுகிறது. இதைக் கேட்ட
பேதுரு, இயேசுவுக்கு அவ்வாறு நிகழலாகாது என்றதும் இயேசு "என் கண்முன்
நில்லாதே சாத்தானே" என்று கடிந்துகொண்டதை மத்தேயு குறிப்பிடுகிறார்
(மத்தேயு 16:23). மேலும், பிலிப்புச் செசரியா பகுதியில் இருந்தபோது இயேசு
தம் சீடர்களிடம் "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்றும்,
"நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்றும் கேட்டபோது, பேதுரு
இயேசுவை நோக்கி "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று தம்
நம்பிக்கையை அறிக்கையிட்டார் என்ற செய்தியை மத்தேயு 16:13-20
குறிப்பிடுகிறது.
2) எகிப்து:
இயேசுவின் வாழ்க்கையில்
எகிப்துபற்றிய குறிப்பு அவருடைய இளமைப் பருவம் சார்ந்தது. இயேசுவின்
பெற்றோரான யோசேப்பும் மரியாவும் ஏரோதுக்கு அஞ்சி குழந்தை இயேசுவைத்
தூக்கிக் கொண்டு எகிப்துக்கு ஓடிபோனார்கள். அதன்பின் குழந்தையைக் கொல்லத்
தேடிய ஏரோது இறந்துவிட்டார் என்று அறிந்து மீண்டும் கலிலேயாவுக்குத்
திரும்பி நாசரேத்து ஊரில் குடியேறினார்கள். இதை மத்தேயு நற்செய்தி பதிவு
செய்துள்ளது (மத்தேயு 2:15-23).
3) தமஸ்கு சாலை:
அப்.நடபடிகள் நூலில் அதிகாரங்கள் 9, 22, 26 ஆகிய பகுதிகளில் புனித பவுல்,
கிறித்தவர்களைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் தமஸ்கு நகரை
நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், உயிர்பெற்றெழுந்த இயேசு அவருக்குத்
தோன்றி, அவரை மனம் மாற்றியதோடு, புவுலும் இயேசுவின் எதிரி என்ற
நிலையிலிருந்து மாறி, இயேசுவின் சீடராக, அப்போஸ்தலனாக மாறி, இயேசு பற்றிய
நற்செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு போதிக்கத் தொடங்கினார் என்ற செய்தி
விரிவாகத் தரப்படுகிறது. தமஸ்கு நகரைப் பற்றிய குறிப்புகள் அப்.பவுல்
எழுதிய நிருபங்களிலும் காணக்கிடக்கின்றன.
முந்தைய பதிப்புகளுக்கு
http://bibletreasure.wapka.mobi