ஈ) யூதேயா:-
1) பெத்தானியா:
பெத்தானியாவில் மரியா, மார்த்தா என்று இரு சகோதரிகள் வாழ்ந்துவந்தனர்.
அவர்களுடைய சகோதரர் இலாசர் என்பவர் இறந்துபோனார். இதனால் உள்ளம் கலங்கிய
இயேசு இலாசரின் கல்லறை அருகே கண்ணீர் வடித்தார். பின்னர் அவர் இலாசருக்கு
உயிர் கொடுத்தார். இயேசு "உயிர்த்தெழுதலும் ஜீவனும் நானே. என்னிடம்
நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் பிழைப்பார்" என்று அறிவுரை வழங்கினார்.
யோர்தான் ஆற்றுக்கு அருகே இருந்த பெத்தானியா வேறோர் இடம் ஆகும்.
2) பெத்சதா குளம்:
யோவான் நற்செய்தி 5:1-18 பகுதியில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் முடக்கு
வாதத்தால் அவதியுற்றிருந்த ஒரு மனிதருக்கு இயேசு நலமளிக்கும் நிகழ்ச்சி
தரப்படுகிறது. அம்மனிதரை இயேசு பெத்சதா குளத்தின் அருகே
குணப்படுத்தினார். ஐந்து மண்டபங்கள் கொண்ட அக்குளத்தில் சரியான நேரத்தில்
இறங்கினால் எவ்வித நோயிலுமிருந்தும் நலம் பெறலாம் என்று மக்கள்
நம்பி்யிருந்தனர்.
3) பெத்லகேம்:
லூக்கா நற்செய்தியில் இயேசு கன்னி மரியாவிடமிருந்து பெத்லகேம் ஊரில்
பிறந்தார் என்னும் செய்தி உள்ளது (லூக்கா 2:1-7).
4) பெத்பகு:-
இயேசு எருசலேமில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைவதற்கு முன்னால் தாம்
ஏறிச்செல்வதற்காக ஒரு கழுதைக் குட்டியைக் கொண்டுவருமாறு பெத்பகு என்னும்
ஊரிலிருந்து சீடர்களை அனுப்பினார். இச்செய்தி மத்தேயு 21:1, மாற்கு 11:1,
லூக்கா 19:29 ஆகிய நற்செய்திப் பகுதிகளில் குறிக்கப்பட்டுள்ளது. லூக்கா,
பெத்பகு ஊர் பெத்தானியாவுக்கு அருகே இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
பண்டைய வரலாற்றாசிரியரான செசரியா நகர் யூசேபியு, பெத்பகு என்ற இடம் ஒலிவ
மலையில் அமைந்தது என்று குறிப்பிடுகிறார்.
5) கல்வாரி (கொல்கொதா):
கொல்கொதா (Golgotha) என்பது பழங்கால எருசலேம் நகரின் மதில்சுவர்களுக்கு
வெளியே இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடத்துக்குக் கொடுக்கப்பட்ட
பெயர் ஆகும். இது "கல்வாரி" (Calvary) அல்லது "கபாலஸ்தலம்" என்றும் புதிய
ஏற்பாட்டில் அழைக்கப்படுகிறது.
கொல்கொதா என்பது "குல்கல்தா" (Gûlgaltâ) என்னும் எபிரேயச் சொல்லின்
ஒலியாக்கம் ஆகும். இச்சொல்லின் விளக்கமாக புதிய ஏற்பாட்டில் மண்டை ஓட்டு
இடம் என்னும் தொடர் தரப்படுகிறது. இதே பொருள் தரும் கிரேக்கத் தொடர்
Kraniou Topos (Κρανίου Τόπος) என்றும் இலத்தீன் தொடர் Calvariae Locus
என்றும் அமையும். இலத்தீன் தொடரிலிருந்து Calvary என்னும் ஆங்கிலச்
சொல்லும், கல்வாரி என்னும் தமிழ் ஒலிபெயர்ப்பும் பெறப்பட்டன. இந்த இடம்
பற்றிய குறிப்பு மத்தேயு: 27:32=33, மாற்கு 15:21-22, லூக்கா 23:32-33,
யோவான் 19:17 ஆகிய நற்செய்திப் பகுதிகளில் உள்ளன.
6) எம்மாவு:
எம்மாவு என்னும் நகரம் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறித்துவின்
வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு பழங்கால நகரம் ஆகும். இது எருசலேம்
நகரிலிருந்து ஏறத்தாழ 7 மைல் (11 கிலோ மீட்டர்) தொலையில் உள்ளது. எம்மாவு
என்னும் சொல்லின் பொருள் மித வெப்ப நீரூற்று என்பதாகும்.
லூக்கா 24:13-35 பகுதியில் இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பின்பு,
எருசலேமிலிருந்து எம்மாவுக்குச் சென்று கொண்டிருந்த இரு சீடர்களுக்குத்
தோன்றிய செய்தி விவரிக்கப்பட்டுள்ளது. இயேசு அச்சீடர்களைச் சந்தித்தபோது
அவர்கள் அவரை ஒரு வழிப்போக்கர் என்றுதான் நினைத்தார்கள். மாலை வேளையில்
இயேசு அவர்களோடு உணவு உண்ண அமர்ந்து, அப்பத்தைப் பிட்டு அவர்களோடு
பகிர்ந்துகொண்ட வேளையில் தான் அவர்கள் இயேசுவை அடையாளம்
கண்டுகொண்டார்கள்.
7) கபதா (கல்தளம்):
இயேசுவின் வாழ்க்கையோடு தொடர்புடைய இந்த இடம் புதிய ஏற்பாட்டில் ஒரே முறை
மட்டுமே குறிக்கப்படுகிறது. அப்பகுதி யோவான் 19:13. அதில், "பிலாத்து
இயேசுவை வெளியே கூட்டிவந்தான். 'கல்தளம்' என்னும் இடத்தில் இருந்த நடுவர்
இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் 'கபதா' என்பது
பெயர்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இடம் பெரிய கல்கள் பதிக்கப்பட்ட ஒரு மேடை போன்ற அமைப்பாக
இருந்திருக்க வேண்டும். அதில் அமர்ந்து கொண்டு பிலாத்து இயேசுவை
விசாரித்தார். இது எருசலேம் நகரில் பொதுமக்கள் கூடிய வளாகத்திற்குச்
சற்று வெளியே இருந்தது என்று அகழ்வியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
முந்தைய பதிப்புகளுக்கு
http://bibletreasure.wapka.mobi