தமிழுக்கு கால்டுவெல்லின் பங்களிப்பு தான் சிறந்த மதபோதகராக திகழ
வேண்டுமெனில் தான் பணிசெய்யுமிடத்தின் மக்கள் பேசும் மொழியை
பேசவேண்டியதன் தேவையை கால்டுவெல்
உணர்ந்திருந்தார்.
கால்டுவெல்லின் தமிழ்ப் புலமையை அவர் பணியாற்றிய கிறித்தவ சபையும்
உணர்ந்திருந்தது. எனவேதான், "போயர் பதிப்பு' என்றழைக்கப்படும் திருத்தி
யமைக்கப்பட்ட தமிழ் பைபிள் மொழிபெயர்ப்பு உருவாக்கத்தின்போது, அதற்கான
குழுவில் கால்டு வெல்லின் ஆலோசனைகளும் ஏற்கப்பட்டன.
அந்தப் பதிப்பும் பெரிதும் பேசப்பட்டது.
ஆனால், இவை
யெதனையும்விட தமிழறிஞர்களும், தமிழ் மக்களும், "திராவிட அல்லது
தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலுக்காகவே அவரைப் பெரிதும்
போற்றுகின்றனர்.
இதன் முதல் பதிப்பு 1856-லும், திருத்திய மற்றும் விரிவாக்கப்பட்ட
பதிப்பு 1873-லும் வெளிவந்து இன்றும் அழியாப்புகழுடன் திகழ்கிறது.
தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு அவரது படைப்பு தந்த பங்களிப்பு
ஒப்பில்லாத ஒன்றாகும். தமிழுக்கான இவரது பங்களிப்பைப் போற்றும் விதத்தில்
தமிழகஅரசு இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது அவரது சிலையை சென்னை
மெரீனா கடற்கரைச் சாலையில் அவரது சிலையை நிறுவி கௌரவித்தது.
மேலும் அவரது ஒரு குறிப்பிடத்தகுந்த படைப்பாக "தொடக்க காலம் முதல் கி.பி.
1881 வரையிலான திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு'
(A Political and General History of the district of Tirunelveli from
the earliest time to AD 1881) நூலைக் கூறலாம்.
இந்நூலில், இந்தியர்களுக்கு வரலாற்று அறிவோ, நிகழ்வுகளை
ஆவணப்பூர்வமாக பதிந்துவைக்கும் அவசியமோ தெரியவில்லை என்ற
குற்றச்சாட்டுடன் தொடங்கும் கால்டுவெல், ஒன்பது பகுதிகளாக நூலை
எழுதியிருக்கிறார்.
முதல் இயலில் மாலிக்காபூர் படையெடுப்பு, காயல் துறைமுகத்தில் நடந்த
முத்துக்குளிப்பு என ஒவ்வொரு இயலையும் வரலாற்றுப் பூர்வமாக
உருவாக்கியிருக்கிறார்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்படும் நிகழ்வு, ஊமைத்துரை, மருது சகோதரர்களை
ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள், முகமது யூசுப்கானிடமிருந்து மதுரையை
ஆங்கிலேயர் கைப்பற்றிய வரலாறு போன்றவை தெளிவாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
வெறும் பாடநூல் வரலாற்றில் சலிப்புற்றவர்கள் இந்நூலை வாசித்தால் வரலாறு
எத்தனை சுவராசியமானது என்பதை அறியலாம்.
1849-இல் திருநெல்வேலி மாவட்டத்தில் அவர் பார்த்த நாடார் இன மக்களின்
வாழ்க்கை முறையை "திருநெல்வேலி நாடார்கள்' என்ற தலைப்பில் இங்கிலாந்தில்
வெளியிட்டார். ஆனால், தமிழகத்தில் அந்நூலுக்கு எதிர்ப்பும் சர்ச்சையும்
பெருகியது.
அந்நூலை எழுதியதற்கான பின்னணியிலுள்ள நோக்கத்தை எத்தனையோ விதமாக
எடுத்துரைத்தும், அந்நூலை திரும்பப் பெற நேர்ந்தது.
கட்டடக்கலைக்கு கால்டுவெல்லின்
பங்களிப்பு:-
இடையன்குடியில் கோபுர வடிவில் கால்டுவெல் எழுப்பிய பிரம்மாண்டமான
தேவாலயம் அவரது பெயர்சொல்லும் விதமாய் திகழ்கிறது. 1845-இல் ஏற்பட்ட
சூறாவளியில் பழைய தேவாலயம் பெரிதும் சேதமுற்றதால், அவர் பெரியதொரு
தேவாலயத்தைக் கட்டத் திட்டமிட்டார்.
அவரது ஓவிய அறிவும் அதற்குத் துணை நின்றது.
நான்காண்டுகளில் கட்டத் திட்டமிடப்பட்ட அந்தத் தேவாலயம், பல்வேறு
தடையினால் 32 ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவுற்றது. எனினும் கோதிக்
பாணியிலமைந்த தேவாலயக் கட்டடம் இன்றும் கால்டுவெல்லின் பெயர் சொல்லும்
கட்டடமாகத் திகழ்கிறது.
தன் வாழ்நாள் முழுவதும் மதபோதகராக பணியாற்றிய கால்டுவெல்,
இறுதிக்காலத்தில் வலிந்து பணிஓய்வு பெற நிர்பந்திக்கப்பட்டார். தன்
கடைசிக்காலத்தை கொடைக் கானலில் செலவிட்ட கால்டுவெல் 1891, ஆகஸ்டு 28-இல்
மரணமடைந்தார்.
அவரது இறுதி விருப்பப்படி அவரது உடல்
இடையன்குடியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இரு நூற்றாண்டுக் காலத்தையும் தாண்டி அசைக்கமுடியாத அளவுக்கு
கால்டுவெல்லின் புகழ் நிலைபேறடைந்திருக்கிறது.
இந்தக் கட்டுரையை ஆராய்ச்சியுடன் எழுதியிருக்கும்
க. சுப்பிரமணியன் என்கிற நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
