சமயப் பணியும் சமூகப் பணியும்:-
நாசரேத் வந்தடைந்த கால்டுவெல், அங்கிருந்து செம்மண் தேரியான
இடையன்குடியை கால்நடையாகவே சென்று பார்வையிட்டார். இடையன் குடியைச்
சுற்றியிருந்த கிராமங்களில் கிறித்தவர்கள் பரவலாகக் காணப் பட்டதையும்,
அங்குள்ள உள்ளூர் மக்கள் படிப்பறி வில்லாதவர்களாக, கடின உழைப்பாளிகளாக,
ஏழைகளாக இருப்பதையும் கண்டார்.
பெரும்பாலோர் பனையேறிகளாகவும் விவசாயத்
தொழிலாளர்களாகவும் காணப்பட்டனர்.
அப்பகுதியில் கிராமங்கள் ஒழுங்கின்றிக் காணப்பட்டன. முறையான
தெருக்களின்றி, வீடுகள் காற்றோட்டமோ, சுகாதாரமோ இன்றிக் காணப்பட்டன.
இதனையெல்லாம் கண்ணுற்ற கால்டுவெல்
இடையன்குடியில் ஒரு முன்மாதிரிக் கிராமத்தை உருவாக்கவும், அப்பகுதியில்
மாறுதலைக் கொண்டுவரவும் விரும்பினார்.
ஆனால் கிராமம் கிறித்தவ சபைக்கு சொந்தமாக இல்லாத பட்சத்தில் மாற்றங்களை
நடை முறைப்படுத்துவது கடினமென்பதைக் கண்டார். எனவே அப்பகுதியுள்ளோரின்
நிலத்தை தான் சார்ந்த அமைப்பின் மூலம் முறைப்படி விலைக்குப் பெற்றார்.
அப்பகுதி மக்கள் தொடக்கத்தில் மாற்றத்துக்கு உடன்பட மறுத்தாலும்,
நாளடைவில் இணங்கினர். தேவாலயம், வீடுகள், தெருக்கள், சாலைச்
சந்திப்புகள், கிணறுகள் என அந்தக் கிராமத்தை திட்டமிட்டு அவரே
வடிவமைத்தார்.
அவர் தெருக்களில் வரிசையாக மரங்களை நட்டு அழகுபடுத்தினார். உண்மையில்
அவர் தன் வாழ்வின் இறுதிவரை மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டினார்.
அவர் தொடர்ந்து இடையன்குடிக்கும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும்
வருகைதந்து கிறித்தவ நம்பிக்கையைப் பரப்புவதில் ஆர்வம் காட்டினார்.
தமிழில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த அவரால் அடித்தட்டு மக்களுடன் தொடர்பு
கொள்ளவும் உரையாடவும் முடிந்தது.
வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் இடையன்குடியில் தங்கியிருந்து
செயல்பட்டார்.
அதேபோன்று,
திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பிற கிறித்தவ அமைப்புகளிடமும் நெருக்கமான
தொடர்புகளைப் பேணினார். அவர்களுள் மெய்ஞானபுரம் சி.எம்.எஸ்.
கிறித்தவசபையின் ஜான் தாமஸ், நாகர்கோவிலின் லண்டன் கிறித்தவர் கழகத்தைச்
சேர்ந்த சார்லஸ் மால்ட் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சார்லஸ் மால்ட்டின் மகள் எலிஜாவைத்தான் கால்டுவெல் 1844, மார்ச் 20-இல்
திருமணம் செய்துகொண்டார்.
1842-இல், கேள்விகள் எழுப்பி பதிலளிக்கும் முறையில் கிறித்துவ
மதபிரசாரகர்களை உருவாக்கும்
பள்ளியொன்றைத் தொடங்கினார். மாதிரி பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தி, பைபிளில்
குறிப்பிட்ட பகுதிகளைத் தந்து அதிலிருந்து எப்படி பிரசங்கம் நிகழ்த்துவது
என பயிற்சியளித்தார்.
ஆண்டுக்கொருமுறை இப்படி பயிற்சி பெற்றவர்களுக்கு தேர்வும் நடத்தி,
திறமையானவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்.
கால்டுவெல் திருநெல்வேலி வரும்முன்பே பிற கிறித்தவ அமைப்புகளால் ஆரம்பப்
பள்ளிகள் உருவாக்கப் பட்டிருந்தாலும், அவர் வந்தபோது அவை நலிவடைந்த
நிலையில் காணப்பட்டன. மாணவர்கள் பள்ளி வருவதும் அபூர்வமாயிருந்தது.
எனவே அவர் குழந்தைகளிடம் பெற்றோர்களிடமும் நயந்துபேசி அவர்களை பள்ளிக்கு
வருகை தரச் செய்தார். பள்ளி வரும் பழக்கத்தை ஊக்குவிக்க, அவர்
மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு பைசா வழங்கினார். பொதுவாக குழந்தைகள்
சுயமாக பைபிள் வாசிப்பதை
ஊக்குவிப்பதுதான் கிறித்தவ சபையின் நோக்கமென்றாலும், இந்தப் பள்ளிகள்
மாணவர்கள் வாசிக்கவும். எழுதவும், கணக்கிடவும் கற்றுத்தந்தன.
கால்டுவெல் மகளிர் பள்ளியொன்றையும் துவங்கினார். தொடக்கத்தில் பெண்கள்
குறிப்பிடத்தக்க அளவில் வராதபோதும், அவரது மனைவி எலிஜாவின் துணையுடன் அதை
வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எஸ்.பி.ஜி. கிறித்தவ சபைகளில்
சில திருநெல்வேலியில் உயர்கல்வி அமைப்புகளைத் தொடங்குவது குறித்து
ஆலோசித்தன. அதன் விளைவாக 1880-இல் சாயர் புரத்தில் கல்லூரியொன்று
தொடங்கப்பட்டது. பின்பு அதனை தூத்துக்குடிக்கு மாற்றவேண்டி வந்தபோது,
கால்டுவெல் ஆற்றிய சமயப்பணி மற்றும் சமூகப் பணியின் ஞாபகார்த்தமாய்
அதற்கு "கால்டுவெல் கல்லூரி' என
பெயரிடப்பட்டது.