இந்தியாவுக்கு ஆங்கிலேயர் வணிகம் செய்யவந்த காலம்முதல், காலனியாதிக்கம்
நடத்திய காலம் வரை மதப் பணிகளுக்காகவும் சீர்திருத்தப் பணிகளுக்காகவும்
வந்துசென்ற
ஆயிரக்கணக்கான மேலைநாட்டவருள் இன்றும் நம் நினைவில் எஞ்சுபவர்கள் வெகுசிலரே.
அவர்களுள் இராபர்ட் கால்டுவெல்
குறிப்பிடத்தகுந்தவர். அவர் பிறந்து இருநூறு ஆண்டுகளாகின்றன. வெறுமனே
மதப்பணியாளராக மட்டுமில்லாமல், அவராற்றிய சில சமூகப்பணிகளும்,
படைப்பூக்கத்துடன் அவர் உருவாக்கிய சில நூல்களுமே அவரை காலங்கடந்து
நிற்கச் செய்திருக்கின்றன.
தமிழ் செம்மொழி, தமிழர்கள் திராவிட இனத்தவர் திராவிட மொழிகள் பழம்பெருமை
மிக்கவை என தனது ஆய்வுகளின் மூலம் நிறுவியவர்.
பிறப்பும் கல்வியும்:-
இராபர்ட் கால்டுவெல் பிறப்பால்
அயர்லாந்துக்காரர். 1814, மே-7-இல் பெல்பாஸ்ட் என்னுமிடத்துக்கருகில் பிறந்தார்.
குடும்பம் வறுமை காரணமாக அயர்லாந்தின்
கிளாஸ்கோவுக்கு இடம்பெயர்ந்தது. குடும்பத் தேவை காரணமாக ஒன்பது வயதிலேயே
வேலைக்குச் செல்லவேண்டிய அவசியம் நேர்ந்தது.
தீவிரமான வாசிப்பார்வத்தால் அவர் தன் அறிவை தானே வளர்த்துக்கொண்டார்.
பின் டப்ளின் சென்று ஓவியக் கலையில் பயிற்சிபெற்றார்.
1834-இல் அவர் தேவாலய பேரவைக் குழுவில் இணைந்து இந்தியாவுக்கு மதபோதகராக
செல்வதெனத் தீர்மானித்தார். எனவே அவர் லண்டன் மதப்பிரச்சார கழகம் எனும்
அமைப்பில் விண்ணப்பித்தார்.
அது அவரை மதபோதகராக ஏற்றுக்கொண்டு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சென்று
படிக்கும்படி அறிவுறுத்தியது. அங்கேதான் அவர் மொழிகளை
ஒப்பீடுசெய்வதில் திறமைமிக்கவரான டேனியல் சான்ஃபோர்டை சந்தித்தார்.
மேலும் பல்கலைக் கழகத்தில் லத்தீன், கிரேக்க மொழிகளுடன் மத
சாத்திரத்தையும் கற்றுத்தெளிந்தார்.
கல்வியில் சிறந்து திகழ்ந்த கால்டுவெல் தனது பல்கலைக்கழக படிப்பை
முடித்ததும், எல்.எம்.எஸ். அமைப்பு அவரை மதப் பிரச்சாரகராக நியமனம்
செய்து 1838, ஜனவரி 8-இல் சென்னைக்கு அனுப்பியது.
சென்னை வந்த கால்டுவெல் தமிழ், தெலுங்கு கற்பதில் ஆர்வம் காட்டினார்.
சாதாரண மக்களிடையே பணியாற்ற விரும்பியதால் பேச்சுத் தமிழைக்
கற்றுக்கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டார்.
இந்து மதம் குறித்தும் நிறைய வாசித்து அறிந்துகொண்டார். தனது அறிவை
விரிவாக்கம் செய்யும் நோக்கில் அன்று சென்னையில் செயல்பட்டுக்
கொண்டிருந்த பிற மதப்பிரச்சார
அமைப்புகளிலும் அதிலுள்ள போதகர்களிடமும் இணக்கம் காட்டினார்.
எனினும் இக்காலக்கட்டத்தில், கால்டுவெல் புதிய ஏற்பாட்டின் போதனைகளுக்கு
நெருக்கமாயிருந்த ஆங்கில திருச்சபை பிரிவை அவரது மனதுக்கு நெருக்கமாக
உணர்ந்தார். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் நற்செய்தி பரப்புதல் கழகத்தில்
(நடஏ) சென்று சேர்ந்தார்.
அவ்வமைப்பின் சென்னைக் கிளை அவரை மதபோதகராக ஏற்று திருநெல்வேலியின்
இடையன்குடி பகுதிக்கு அனுப்பியது. அவ்வமைப்பு திருநெல்வேலிக்கு சில
வருடங்களாக புதிய மதபோதகர் யாரையும் நியமிக்காத காரணத்தால், கால்டுவெல்
அப்பகுதியில் முழுவீச்சுடன் செயலாற்ற வேண்டுமென விரும்பியது.
இதற்காக தலைமை மதகுருவான ஸ்பென்சரிடம் கால்டுவெல்லை அனுப்பி இங்கிலாந்து
தேவாலயத்தின் சித்தாந்தங்களையும் மதபோதகரின்
பொறுப்புகளையும் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்தது.
இதன்பின் கால்டுவெல், சென்னையிலிருந்து இடையன்குடிக்கு கால்நடையாகவே
கிளம்பினார். முதலில் சிதம்பரம் வழியாக தரங்கம்பாடியை வந்தடைந்த அவர்,
டேனிஸ் ஏசு சபையின் செயல்பாடுகளை நேரில் பார்த்தறிந்தார்.
பின் இலத்தீன்- தமிழ் அகராதியைத் தொகுத்தளித்த சுவார்த்தை சந்திக்க
தஞ்சாவூர் கிளம்பினார். அவருடன் சில மாதங்கள் தங்கியிருந்தபின் நீலகிரி,
கோயம்புத்தூர் சென்று, அங்கிருந்து மதுரையை வந்தடைந்தார்.
இன்றைக்கு திருமங்கலத்தில் புகழுடன் திகழும் அமெரிக்கன் கல்லூரி
உருவாவதற்கான அடிப்படையான பள்ளியை உருவாக்கியவர் திரேசி. அவரையும்,
சென்னைப் பல்கலைக்கழக அகராதியை உருவாக்கிய சாந்தலர் என்பவரையும்
மதுரையில் சந்தித்தபின், 1841-இல் நாசரேத் வந்தடைந்தார் கால்டுவெல்.